வேகமாக பரவும் டெங்கு மற்றும் நிபா வைரஸ்! கன்னியாகுமரி மாவட்டத்தில் மக்களுக்கு முகக்கவசம் கட்டாயம்!
கன்னியாகுமரி: கேரள எல்லையை ஒட்டி அமைந்துள்ள கன்னியாகுமரி மாவட்டத்தில் பொதுவிடங்களுக்கு செல்லும் போது மக்கள் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
டெங்கு காய்ச்சல் மற்றும் நிபா வைரஸ் வேகமாக பரவி வரும் சூழலில் குமரி மாவட்ட ஆட்சியர் இத்தகைய நடவடிக்கையில் இறங்கியுள்ளார். மேலும், கேரளாவிலிருந்து தமிழகத்திற்குள் வரும் வாகனங்களை 5 இடங்களில் நிறுத்தி நோய் அறிகுறி உள்ள நபர்களை கண்டறியும் பணிகளையும் முடுக்கிவிட்டுள்ளார்.

அதேபோல் மருத்துவமனை பணியாளர்கள் உரிய பாதுகாப்பு கவசத்துடன் பணிபுரிய வேண்டும் என கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார். குமரி மாவட்டத்தில் மழை பெய்து வருவதால் காய்ச்சல் மற்றும் சளியால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. டெங்கு காய்ச்சலால் 60 பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனால் நோய் தடுப்பு நடவடிக்கைகளை கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் தீவிரமாக முன்னெடுத்து வருகிறார். சுகாதாரத்துறை அதிகாரிகளை அழைத்து ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி வருகிறார். டெங்கு பாதிப்பு மேலும் அதிகரிக்காமல் இருக்க, கொசு ஒழிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இதனிடையே நாகர்கோவில் மாநகராட்சி சார்பில் அனைத்து வார்டுகளிலும் நிலவேம்பு குடிநீர் வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதனை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications