சொத்து வழக்கை இழுத்தடித்த நாகர்கோவில் வக்கீல்.. நில ஆவணங்கள் எங்கே? அட பாவமே.. கலங்கிய கன்னியாகுமரி
கன்னியாகுமரி: சொத்து வழக்கை இழுத்தடித்ததால் வக்கீல் ஒருவர் வெட்டி கொல்லப்பட்ட சம்பவம் நாகர்கோவிலில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.. இது தொடர்பான விசாரணையை போலீசார் முன்னெடுத்து வருகிறார்கள் என்றாலும், வழக்கறிஞரையே வெட்டி சாய்த்துள்ளது, நீதித்துறை வட்டாரத்தில் மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தி வருகிறது.
நாகர்கோவில் அருகே பீமநகரி பகுதியை சேர்ந்தவர் இசக்கிமுத்து.. 31 வயதாகிறது.. இவரது குடும்பத்தில் சொத்து பிரச்சனை இருந்து வந்துள்ளது.. இதனால், இந்த சிக்கலை சரிசெய்வதற்காக, கிறிஸ்டோபர் சோபி என்ற வழக்கறிஞரை அணுகியிருக்கிறார் இசக்கிமுத்து.

அசல் ஆவணங்கள்: தக்கலை அருகே முட்டைக்காடு சரல்விளையை சேர்ந்தவர் கிறிஸ்டோபர் சோபிக்கு 55 வயதாகிறது.. தன்னுடைய குடும்ப சொத்து விவகாரத்தில் தீர்வு வேண்டும் என்று கேட்ட இசக்கிமுத்து, தன்னுடைய நிலத்தின் அசல் ஆவணங்களையும் கிறிஸ்டோபரிடம் தந்துள்ளார்.. ஆனால, இந்த வழக்கு விசாரணை கடந்த 3 வருடமாக நடந்து கொண்டிருக்கிறதாம்.
அதுமட்டுமல்லாமல், வழக்கு விசாரணை என்ற பெயரில் இசக்கிமுத்துவிடம், கிறிஸ்டோபர் சோபி அடிக்கடி பணம் கேட்டு வாங்கியதாகவும் கூறப்படுகிறது. வக்கீல் எப்போதெல்லாம் பணம் கேட்கிறரோ, அப்போதெல்லாம் இசக்கிமுத்துவும் தந்து வந்துள்ளார்.. ஆனால், கேஸில் எந்த முன்னேற்றமும் இல்லையாம்.
நில ஆவணங்கள்: ஒருகட்டத்தில் வெறுப்படைந்த இசக்கிமுத்து, தன்னுடைய நிலத்திற்கான ஆவணங்களை திரும்ப கேட்டுள்ளார்.. ஆனால் வக்கீல் ஆவணங்களை திருப்பி தரவில்லை.. இதனால் வக்கீல் மீது இசக்கிமுத்துவுக்கு கூடுதல் ஆத்திரம் ஏற்பட்டது.
இந்நிலையில் இசக்கிமுத்துவுக்கு போன் செய்த வக்கீல் கிறிஸ்டோபர், வாழைக்கன்றுகள் வேண்டும் என்று கேட்டாராம்.. ஏற்கனவே ஆத்திரத்தில் இந்த இசக்கிமுத்து, "சரி, நேரில் வாருங்கள் தருகிறேன்" என்று கிறிஸ்டோபரிடம் சொல்லி உள்ளார்..
வாழைக்கன்று: பீமநகரி மண் ஆராய்ச்சி நிலையம் அருகே ஒரு குளக்கரைக்கு பைக்கில் வந்துள்ளார் கிறிஸ்டோர்.. அங்கு இருவரும் சந்தித்து பேசியிருக்கிறார்கள்.. அப்போது தன்னுடைய நில ஆவணங்களை தரும்படி இசக்கிமுத்து மீண்டும் கேட்டுள்ளார்.. இதுவே அவர்களுக்குள் வாய்த்தகராறாக வெடித்துள்ளது.. ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த இசக்கிமுத்து, வக்கீல் கிறிஸ்டோபரை அரிவாளாலேயே வெட்டி சாய்த்தார்.
பிறகு, சடலத்தை தரதரவென இழுத்துச்சென்று, வக்கீலின் பைக்கில் இருந்த பெட்ரோலையே எடுத்து, கிறிஸ்டோபர் சோபி உடலில் ஊற்றி தீ வைத்திருக்கிறார்.. அதுமட்டுமல்லாமல், ஆரல்வாய்மொழி போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று, வக்கீலை கொன்று எரித்துவிட்டதாக கூறி சரண் அடைந்தார்.
அதிர்ந்த போலீஸ்: இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோதுதான், வக்கீலின் எரிந்த சடலம் கிடந்ததை கண்டு அதிர்ந்தனர். அதனை கைப்பற்றி போஸ்ட் மார்ட்டம் செய்வதற்காக ஆசாரிபள்ளம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிறகு இசக்கிமுத்துவிடமும் விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது போலீசாரிடம் இசக்கிமுத்து தந்த வாக்குமூலத்தில், "வக்கீலிடம் நில ஆவணங்களை தந்திருந்தேன். அவர் எதிர்தரப்பு வக்கீலுடன் தொடர்பில் இருந்துகொண்டு, என்னுடைய வழக்கை இழுத்தடித்தார்.. அதிக பணத்தை என்னிடம் வாங்கி கொண்டார்.. ஆனால், நிலத்திற்கான ஆவணங்களை பல முறை கேட்டும் தரவில்லை. வாழைக்கன்று வாங்க வந்தபோது, என்னையும், என்னுடைய மனைவியையும் ஆபாசமாகவும், தரக்குறைவாகயும் பேசினார். இந்த ஆத்திரத்தில்தான் வக்கீலை கொலை செய்தேன்" என்றார்.
நீதித்துறை வட்டாரம்: வக்கீலை அரிவாளால் வெட்டி, அவரது பைக்கிலிருந்தே பெட்ரோல் எடுத்து, சடலத்தை எரித்து, போலீசில் இளைஞர் சரண் அடைந்துள்ள சம்பவம் நாகர்கோவிலில் பரபரப்பை தந்து வருகிறது.. இது குமரியின் நீதிமன்ற வட்டாரத்திலும் மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தி வருகிறது.












Click it and Unblock the Notifications