பழுதடைந்த சுவிட்ச், மின் சாதனங்கள் இருக்கிறதா? மின்சார வாரியம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
கன்னியாகுமரி: தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில், மின் விபத்துகளை தடுக்க பாதுகாப்பு வழிமுறைகள் என்னென்ன? என்பது குறித்து மின் வாரியம் சார்பில் அறிவுரைகள் வெளியிடப்பட்டுள்ளது. வீட்டில் உள்ள மின் சாதனங்களில் கசிவு உள்ளதா என்பதை சரி பார்த்திட வேண்டும். பழுதடைந்த சுவிட்சு மற்றும் மின் சாதனங்களை உடனே மாற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக கன்னியாகுமரி மாவட்ட மின்வாரிய அதிகாரி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:- "கன்னியாகுமரி மாவட்டத்தில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருவதால் மின்கம்பங்கள் அருகில் பொதுமக்கள் செல்ல வேண்டாம். மேலும் அவற்றை தொடாமல் இருக்க வேண்டும். மின் இணைப்புகளில் இ.எல்.சி.பி. மற்றும் இ.சி.டி. கட்டாயம் பொருத்தினால் மின்கசிவு பாதிப்புகளை தவிர்க்கலாம். எர்த் கம்பிகள் துண்டிப்பில்லாது இருக்க வேண்டும். மின்சார உபகரணங்களை ஈரமான கையினால் கையாளக் கூடாது. இடி மற்றும் மின்னலின்போது தொலைக்காட்சி, கணினி, தொலைபேசி உள்ளிட்ட எலக்ட்ரானிக் பொருட்களை பயன்படுத்துவதை தவிர்ப்பது நல்லது.

மின் சாதனத்தில் ஏற்படும் தீயை தண்ணீர் கொண்டு அணைக்க முயற்சிக்க வேண்டாம். தீயணைப்புத்துறையினர் உதவியை நாட வேண்டும். மேலும் அங்கு இருக்கும் மெயின் நிறுத்தம் செய்து மின்சாரத்தை உடனடியாக துண்டிக்க வேண்டும். மரக்கிளைகள் மற்றும் வேறு ஏதேனும் பொருட்கள் மின் கம்பிகளில் தொங்கிக்கொண்டு இருந்தால் அவற்றை பொதுமக்கள் அகற்ற முயற்சிக்கக்கூடாது. இது பற்றி மின்வாரியத்துக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.
வீட்டில் உள்ள மின் சாதனங்களில் கசிவு உள்ளதா என்பதை சரி பார்த்திட வேண்டும். பழுதடைந்த சுவிட்சு மற்றும் மின் சாதனங்களை உடனே மாற்ற வேண்டும். இடி மற்றும் மின்னலின் போது வெட்ட வெளியிலோ, மரங்களின் அடியிலோ மற்றும் திறந்த வெளியில் பொதுமக்கள் நிற்கக்கூடாது. கான்கிரீட் கட்டிடங்களில் தஞ்சம் அடையுங்கள். நீர் தேங்கி இருக்கும் சாலைகள் மற்றும் இடங்களில் நடமாடும் போது விழிப்புடன் இருக்க வேண்டும்.
மழை மற்றும் காற்றினால் ஏற்படும் பாதுகாப்பு தொடர்பாக மின்வாரிய அலுவலகத்தை தொடர்பு கொள்ள வேண்டும். மேலும் 9498794987 என்று தொலைபேசி எண்ணிலும் புகார் தெரிவிக்கலாம். மின்கம்பத்தில் கால்நடைகளை கட்டுவதை தவிர்க்க வேண்டும். மேலும் மின்கம்பிகளில் கொடிகள் கட்டி துணிகளை காய போடக்கூடாது. திருவிழா மற்றும் சுப நிகழ்ச்சிகளில் அலங்கார விளக்குகளை உயிரழுத்து மற்றும் தாழ்ந்த மின்கம்பிகளுக்கு மேலாக வீசி மரங்களிலோ வேறு பொருட்களிலோ அலங்கரிப்பதை தவிர்க்க வேண்டும்" இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.












Click it and Unblock the Notifications