கன்னியாகுமரியில் யாரிந்த பெண்? தங்கச்சியை தொடாதே, ஊருக்குள் வராதே! அண்ணன் சவாலை மீறிய அருமனை காதலன்
கன்னியாகுமரி: ஒரு பெண் காதலில் விழும்போது, அந்த காதலுக்கான எதிர்ப்பை பெரும்பாலும் வெளிப்படுத்துவது, அப்பெண்ணின் அண்ணனாகவே இருந்து வருகிறது.. இப்போதுகூட ஒரு சம்பவம் கன்னியாகுமரி மாவட்டத்தில் நடந்துள்ளது.. இதுகுறித்த விசாரணையை அருமனை போலீசார் முன்னெடுத்து மேற்கொண்டு வருகிறார்கள் என்றாலும், இந்த சம்பவத்தின் பரபரப்பு இன்னமும் அந்த பகுதி மக்களிடமிருந்து நீங்கவில்லை.
பெற்றோர்களே மனமுவந்து, தங்கள் பெண்ணின் காதலை ஏற்றுக் கொண்டாலும், பாசமாக வளர்த்த பல அண்ணன்கள் , தங்கையின் காதலுக்கு குறுக்கே நின்றுவிடுகிறார்கள், இது பலவகையான எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்திவிடுகிறது..

மன உளைச்சல்
இந்த எதிர்ப்பு, காதலர்களுக்கு இடையே மன உளைச்சலை தந்துவிடுவதுடன், சில சமயங்களில், காதலர்களின் வாழ்க்கையை முழுமையாக சிதைக்கும் அளவுக்கு வளர்ந்துவிடும்.. ஒருபக்கம் பாசம், மறுபக்கம் குடும்ப மானம் என இரண்டுக்கும் இடையே தவித்து நிற்கும் சூழல் உடன்பிறந்த சகோதரர்களுக்கு ஏற்படுவதால், பிரிவு, பகை என ஆரம்பித்து கொலைவரை செல்வதை காண முடிகிறது.
இதோ கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரு சம்பவம் நடந்துள்ளது.. அருமனை அருகே உள்ள பள்ளிக்கோணம் பகுதியை சேர்ந்தவர் சிஜூ.. 20 வயதாகிறது.. இவர் நாகர்கோவிலிலுள்ள, தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார்.
அருமனை காதல்
மாத்தூர்கோணம் பகுதியை சேர்ந்த இளம்பெண்ணை காதலித்து வருகிறார் சிஜூ.. அதாவது, தனக்கு 15 வயது இருக்கும்போதே, இந்த பெண்ணை தீவிரமாக காதலித்து வருகிறார்.. அந்த பெண்ணும் சிஜூவை உயிருக்கு உயிராக விரும்பியிருக்கிறார்.. இப்போது இப்பெண் அங்குள்ள காலேஜில் படித்து வருகிறார்.
இவர்களின் காதல் 2 வீடுகளுக்கும் தெரிய வந்தது.. இதனால் பெண் வீட்டில் கடுமையாக கொந்தளித்து, எதிர்ப்பு காட்டினார்கள்.. பலவாறாக கண்டித்தும்கூட, மகளின் காதல் மிகமிக தீவிரமாக இருப்பதை அறிந்த பெற்றோர், பெண்ணிடம் சுமூகமாக பேசி, முதலில் காலேஜ் படிப்பு முடியட்டும், அதற்கு பிறகு சிஜூவுடன் திருமணம் செய்து கொடுப்பதாக தெரிவித்துள்ளனர்.
வலுவான எதிர்ப்பு
எனினும், காதலர்கள் இருவரும் வெவ்வேறு மதங்களை சேர்ந்தவர்கள் என்பதால், கருத்து வேறுபாடுகள் அதிகமாக வந்தன.. ஆனால் ஆரம்பத்திலிருந்தே இந்த காதல், பெண்ணின் அண்ணனுக்கு பிடிக்கவில்லை. அதனால், வலுவான எதிர்ப்பு தெரிவித்து வந்தார்.
இந்நிலையில், சம்பவத்தன்று இளம்பெண்ணின் அண்ணன், சிஜூவுக்கு போன் செய்து பேசினார்.. அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது..
ஒருகட்டத்தில் வாக்குவாதம் முற்றிய நிலையில், இனிமேல் என் தங்கையிடம் பேசக்கூடாது, எங்க ஊருக்குள்ளே கால் வைக்கக்கூடாது, எங்க வீட்டுப்பக்கமும் வரக்கூடாது... அதையும் மீறி வீட்டுக்கு பக்கம் வந்து பார்" என்று எச்சரித்து சவால் விடுத்தார்.. உடனே சிஜூ, "உன் வீட்டுக்கு கண்டிப்பா வருவேன்" என்று சேலஞ்ச் செய்தார்.
அத்துடன், சவால் விட்டபடியே, காதலியின் வீட்டுக்கு பக்கத்தில் வந்து நின்றுள்ளார்.. இதைபார்த்ததும் உச்சக்கட்ட ஆத்திரமடைந்த இளம்பெண்ணின் அண்ணன், சிஜூவிடம் ஆவேசத்துடன் தகராறு செய்தார்..
உயிருக்கு ஆபத்து - சிகிச்சை
வாய் வார்த்தை முற்றிய நிலையில், பெண்ணின் அண்ணன் சிஜூவை சரமாரியாக தாக்கினார். இதில் சிஜூ உடம்பெல்லாம் படுகாயமடைந்து, ரத்த காயத்தில் விழுந்தார்.. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர், சிஜூவை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்..
உயிருக்கு ஆபத்தான நிலையில், இப்போது, சிஜூவுக்கு தீவிரமான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து தகவலறிந்த அருமனை போலீசார் நேரடியாகவே மருத்துவமனைக்கு சென்று விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.. ஆனால், அதற்குள் இளம்பெண்ணின் அண்ணனை காணவில்லை.. அவரை தேடி கொண்டிருக்கிறார்கள்.. இந்த சம்பவம் அருமனையில் அதிர்வலையை உண்டுபண்ணி வருகிறது.












Click it and Unblock the Notifications