கன்னியாகுமரி நகராட்சியில் இணைக்கப்படும் பேரூராட்சி, ஊராட்சிகள் எது? அமைச்சர் கே.என்.நேரு பதில்
கன்னியாகுமரி: தமிழ்நாட்டின் தென்கோடியில் அமைந்திருப்பது மட்டுமில்லாமல் வள்ளுவர் சிலையால் சிறப்பு பெற்றிருக்கின்ற, சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கின்ற வகையில், கன்னியாகுமரி பேரூராட்சி, நகராட்சியாக தரம் உயர்த்தப்படும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் அண்மையில் அறிவித்திருந்தார். இந்நிலையில் நகராட்சியாக தரம் உயர்த்தப்படும் கன்னியாகுமரியுடன் இணைக்கப்படும் பேரூராட்சி, ஊராட்சிகள் எது? என்பதற்கு அமைச்சர் கே.என்.நேரு பதிலளித்திருக்கிறார்.
இந்தியாவிலேயே தமிழ்நாடு மிக வேகமாக நகரமயமாகி வருகிறது. நகர்ப்புறங்களை சுற்றியுள்ள பகுதிகள் வேகமாக நகரமயமாகி வருகிறது. குறிப்பாக கன்னியாகுமரி மாவட்டத்தில் நகர்ப்புற பகுதிகள் அதிக அளவில் உள்ளன. இந்த மாவட்டத்தை பொறுத்தவரை ஒரு மாநகராட்சி (நாகர்கோவில்), 4 நகராட்சிகள் (குளச்சல், குளித்துறை, பத்மநாபபுரம், கொல்லங்கோடு) 51 பேரூராட்சிகள் மற்றும் 95 கிராம ஊராட்சிகள் உள்ளன. இதில் ஊராட்சிகளை பொறுத்தவரை காட்டாத்துறை, வெள்ளிசந்தை, விளாத்துறை, மேலசங்கரன்குழி, பைங்குளம், இராஜாக்கமங்கலம், தர்மபுரம், மெதுகும்மல், நுள்ளிவிளை, திக்கணங்கோடு ஆகியவை பேரூராட்சிகளாக தரம் உயர்த்தப்பட உள்ளன. இதேபோல் 25 ஊராட்சிகளை அருகில் உள்ள பேரூராட்சிகளுடன் இணைப்பதற்கும் பணிகள் நடந்து வருகின்றன. எங்கு எந்த ஊர் சேர்க்கப்பட உள்ளது.

நாகர்கோவில் மாநகராட்சியில் சேர்க்கப்படும் 6 ஊராட்சிகள்:
புத்தேரி
திருப்பதிசாரம்
பீமநகரி
தேரேகால்புதூர்
கணியாகுளம்
மேல சங்கரன்குழி
குழித்துறை நகராட்சி
குழித்துறை நகராட்சியில் நல்லூர் பேரூராட்சி மட்டும் இணைக்கப்பட உள்ளது.
பத்மநாபபுரம் நகராட்சி
பத்மநாபபுரம் நகராட்சியுடன் விளவூர் மற்றும் திருவிதாங்கோடு இரண்டு பேரூராட்சிகளும், தென்கரை என்ற ஊராட்சியும் இணைக்கப்படுகிறது.
இதேபோல் கன்னியாகுமரி பேரூராட்சி நகராட்சியாக தரம் உயர்த்தப்பட உள்ளது. இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் அண்மையில் அறிவிப்பினை வெளியிட்டார். ஆனால் எந்தெந்த ஊராட்சிகள் இணையும் என்பது குறித்து தகவல் இல்லை..
இந்நிலையில் தமிழக நகராட்சி நிர்வாகத் துறை மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு கன்னியாகுமரிக்கு வந்தார். அங்கு அவரிடம் கன்னியாகுமரி பேரூராட்சி, நகராட்சியாக எப்போது மாற்றப்படும் என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார்கள்.
அதற்கு அமைச்சர் நேரு பதிலளிக்கையில், கன்னியாகுமரியில் நடந்த திருவள்ளுவர் சிலை வெள்ளி விழாவில் கலந்து கொண்ட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கன்னியாகுமரி பேரூராட்சி, நகராட்சியாக தரம் உயர்த்தப்படும் என்று அறிவிப்பை வெளியிட்டார். அதை தொடர்ந்து அரசாணையும் வெளியிடப்பட்டிருந்தது. கன்னியாகுமரி பேரூராட்சி இன்னும் 2 அல்லது 3 மாதங்களுக்குள் நகராட்சியாக மாற்றப்பட்டு நடைமுறைக்கு வரும். ஆனால் எந்தெந்த ஊராட்சிகள் மற்றும் பேரூராட்சிகள் கன்னியாகுமரி நகராட்சியுடன் இணைக்கப்படும் என்பது இன்னும் முடிவாகவில்லை. அந்த விவரங்கள் பற்றிய எந்த தகவலும் இப்போதைக்கு இல்லை" என்று கூறினார்.


Click it and Unblock the Notifications
