காதலி வீட்டில் தற்கொலையா.. குமரியை நடுங்க வைத்த சம்பவம்.. இளைஞரின் தந்தை பரபரப்பு புகார்.. என்ன நடந்தது?
குமரி: குமரி மாவட்டம் குலசேகரம் அருகே ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த இளைஞர் தான் உயிருக்கு உயிராக காதலித்த காதலியின் வீட்டின் மாடியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே என் மகன் சாவில் சந்தேகம் இருப்பதாக வாலிபரின் தந்தை போலீசில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார்.
குமரி மாவட்டம் குலசேகரம் அருகே காவுவிளை காலனியை சேர்ந்தவர் துரைசாமி. இவர் திருச்சியில் வேலை பார்த்து வருகிறார். இவரது மகன் தனுஷ் (வயது 22). என்ஜினியரிங் முடித்த இவர் கோவையில் உள்ள ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். தனுஷ் குலசேகரம் அருகே காவல்ஸ்தலம் பகுதியை சேர்ந்த சமையல் தொழிலாளி ஒருவரின் மகளை காதலித்து வந்துள்ளார்.

கோவையில் எம்.எஸ்.சி படித்து வரும் அந்த மாணவியும் தனுஷை காதலித்துள்ளார். இருவரும் பள்ளி படிக்கும் போதில் இருந்தே காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. சமீபத்தில் இது பெண்ணின் குடும்பத்தினருக்கு தெரியவந்துள்ளது. இதனால் அவர்கள் மாணவியை கண்டித்துள்ளனர். மேலும் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு வீட்டிலேயே மாணவியை இருக்க வைத்துள்ளனர்.
மேலும் வேறு ஒரு மாப்பிள்ளையை பார்த்து திருமண ஏற்பாடுகளும் நடந்து இருக்கிறது. அப்போது தனுஷை கல்லூரி மாணவி காதலித்து வந்த விவரம் மாப்பிள்ளைக்கு தெரிய வந்ததால் திருமண ஏற்பாடுகள் பாதியில் நின்றுவிட்டன. இந்த நிலையில் தான் கடந்த 18 ஆம் தேதி கோவையில் உள்ள ஐடி நிறுவனத்தில் இருந்து தனுஷ் நாகர்கோவிலுக்கு வந்துள்ளார். அன்று இரவு காதலியின் வீட்டிற்குள் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக மீட்கப்பட்டுள்ளார்.
இது பற்றி தகவல் அறிந்து வந்த குலசேகரம் போலீசார் தனுஷின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். இதற்கிடையே மகன் உயிரிழந்த செய்தி கேட்டு திருச்சியில் இருந்து அவரது தந்தை நாகர்கோவிலுக்கு வந்தார். அவர் என் மகன் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி போலீசில் புகார் அளித்தார்.
அந்த புகாரில் அவர் கூறுகையில், என் மகன் தனுசும், மாணவியும் பள்ளி படித்துக் கொண்டிருந்த போதே காதலித்து வந்தனர். அவர்கள் இருவரும் காதலித்து வருவது எனக்கு தெரியும். இதையடுத்து தான் நான் மாணவியின் பெற்றோரிடம் சென்று இருவருக்கும் திருமணம் செய்து வைக்க கோரினேன். ஆனால் அவர்கள் ஒத்துக் கொள்ளவில்லை. மேலும் பெற்றோரிடம் நாங்க கெஞ்சி பார்த்தோம். அவர்கள் ஒப்புக்கொள்ளவில்லை.
எனவே இப்போது என் மகனை திட்டமிட்டு வரவைத்து, கொலை செய்து இருக்கிறார்கள். என் மகனின் பிரேத பரிசோதனையினை முழுமையாக வீடியோ பதிவு செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்" என கூறியிருந்தார். பிரேத பரிசோதனை முடிந்து நேற்று தனுசின் உடல் அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
முன்னதாக தனுஷ் இறந்த விவகாரம் தொடர்பாக குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "இயற்கைக்கு மாறான மரணம் என குலசேகரம் போலீசில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. வாலிபர் மரணம் தொடர்பாக பல யூகங்கள், சந்தேகங்கள் சமூக வலைதளங்களில் பரப்பப்படுகிறது. தற்போது வரை நடந்த விசாரணைகளில் அவர் தற்கொலை செய்துள்ளார் என்பதே தெரியவந்துள்ளது.
தனுசும், மாணவியும் பல ஆண்டுகள் காதலித்து வந்துள்ளனர். சமீபத்தில் இவர்களுக்குள் மனக்கசப்பு ஏற்பட்டு இருக்கிறது. இதான் இருவரிம் பிரிந்துவிட்டனர். ஆனால் தனுஷ் காதலை தொடர முயற்சித்து இருக்கிறார். ஆனால் பெண் சம்மதிக்கவில்லை. இதனால் தனுஷ் மன உளைச்சலில் இருந்ததும் தெரியவந்துள்ளது.
தனுஷ் சாவில் எந்தவித சந்தேகமும் இல்லை என்பது பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிய வந்துள்ளது. சுவர் ஏறி குதித்து வீட்டிற்கு வந்ததற்கான அடையாளமாக அவரது கையில் சுண்ணாம்பு படிந்திருந்தது. எனினும் அவருக்கு எதுவும் மிரட்டல் வந்திருக்கிறதா? என்பதை தெரிந்துகொள்ள செல்போன், மடிக்கணினி ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது. என்று கூறினார்.












Click it and Unblock the Notifications