கன்னியாகுமரியில் சுவாமிதோப்பு சாலையில் சரசரவென ஊர்ந்த உயிரினம்.. ஆடிப்போக வைத்த மலைப்பாம்பு
கன்னியாகுமரி: நாகர்கோவிலில் இருந்து ஈத்தங்காடு வழியாக சுவாமிதோப்பு செல்லும் பாதையில் ராட்ச மலைப்பாம்பு ஒன்று கடந்து சென்றதாக கூறப்படுகிறது. அதை சிலர் வீடியோ எடுத்து சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ளனர். அதேநேரம் உண்மையிலேயே ஊர்ந்து சென்ற வீடியோ இல்லையா என்ற குழப்பமும் நிலவுகிறது. ஏனெனில் மலைப்பாம்பு சாலையில் ஊர்ந்து செல்வது போன்று அண்மைக்காலங்களில் வீடியோக்கள் பரப்பப்படுவதால் அதன் உண்மை தன்மை குறித்தும் கேள்விகள் எழுகிறது.
தமிழ்நாட்டின் மிக அழகான மாவட்டங்களில் கன்னியாகுமரியும் ஒன்று. இயற்கை எழில் கொஞ்சும் கன்னியாகுமரி மாவட்டத்தில் காடு, மலைகள் மற்றும் கடல் வளம் நிறைந்தது. இங்குள்ள பேச்சிப்பாறையில் உள்ள அடர்ந்த மலைப்பகுதிகளில் யானைகள், காட்டுப் பன்றிகள், கரடிகள், சிறுத்தைகள் உள்ளிட்ட பல வனவிலங்குகள் அடிக்கடி உலா வருகின்றன. அதேபோல், மலைப்பாம்பு (விஷமில்லை), கண்ணாடி விரியன், ராஜநாகம், கட்டுவிரியன் போன்ற கொடிய விஷம் கொண்ட பாம்புகளும் அதிக அளவில் இந்த பகுதிகளில் உள்ளன.

பொதுவாக கன்னியாகுமரி மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் இருந்து வெள்ளத்தில் அடித்து வரப்படும் மலைப்பாம்புகள், மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளுக்கு அருகிலுள்ள சதுப்பு நிலக் காடுகளில் தஞ்சமடைவது வழக்கமாக உள்ளன. இந்த மலைப்பாம்புகள் சில சமயங்களில் குடியிருப்புப் பகுதிகளுக்குள் நுழைந்து, பொதுமக்கள் வளர்க்கும் கோழிகள், ஆடுகள் போன்ற கால்நடைகளை தேடி வருவதும் உண்டு.
இந்த நிலையில், நாகர்கோவிலை அடுத்துள்ள சுவாமிதோப்பு பகுதியில் அதிக அளவில் சதுப்பு நிலக் காடுகள் உள்ளதால், இந்தப் பகுதிகளில் நல்ல பாம்பு, கண்ணாடி விரியன், கட்டு விரியன் மற்றும் மலைப்பாம்புகள் நடமாட்டம் அதிகமாக இருக்கும். நாகர்கோவிலில் இருந்து ஈத்தங்காடு வழியாக சுவாமிதோப்பு செல்லும் பாதையில், இருசக்கர வாகனங்களில் செல்வோர் அவ்வப்போது சாலையைக் கடக்கும் பாம்புகளைப் பார்த்து வாகனங்களை நிறுத்திச் செல்வதை காண முடியும்.
அப்படித்தான் நாகர்கோவில் அடுத்த வடக்கு ஈத்தங்காட்டை அடுத்த வடக்கு தாமரைக் குளம் பகுதியில் மிகவும் பிரம்மாண்டமான ராட்சத மலைப்பாம்பு ஒன்று மெதுவாகச் சாலையைக் கடந்து சென்றதாக கூறப்படுகிறது. இந்தக் காட்சியை அவ்வழியே இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அதனை அப்படியே வீடியோ எடுத்தார்கள். சுமார் பத்து அடி நீளம் கொண்ட இந்த ராட்சத மலைப்பாம்பு சாலையைக் கடந்து புதர்களுக்குள் ஊர்ந்து செல்லும் இந்த வீடியோ, தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இது அப்பகுதி மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதே நேரம் இந்த பாம்பு வீடியோ உண்மை தானா அல்லது வேண்டுமென்றே ஏஐயில் உருவாக்கி பரப்பிவிட்டார்களா என்பதை வனத்துறை அறிவிப்பு வெளியிட்டதால் தான் உண்மை நிலவரம் தெரியவரும். இப்போது ஏஐயில் கூட இப்படியான தத்ரூபமான வீடியோக்களை உருவாக்க முடியும். அதேபோல் வேறு இடத்தில் நடந்ததை இங்கு நடந்ததாக பரப்பவும் முடியும். எனவே கன்னியாகுமரி மாவட்ட வனத்துறை விளக்கம் அளித்தால் மட்டுமே பரவும் வீடியோ உண்மையா என்பது தெரியும்.












Click it and Unblock the Notifications