மத்திய அரசு தயாரா இருக்கு.. தமிழக அரசு கேட்டால்தானே: கன்னியாகுமரி மாவட்ட ரயில் பயனாளிகள் சங்கம்
கன்னியாகுமரி: தமிழக ரயில் வளர்ச்சி குறித்து பட்ஜெட்டில் எந்த அறிவிப்பும் இல்லாதது ஏமாற்றமே என கன்னியாகுமரி மாவட்ட ரயில் பயனாளிகள் சங்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து கன்னியாகுமரி மாவட்டத்தில் ரயில் பயனாளிகள் சங்கம் வெளியிட்ட அறிக்கையில், தமிழகத்தின் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த பட்ஜெட்டில் தமிழ்நாடு ரயில்வே வளர்ச்சிக்கு எந்த ஒரு நீண்ட கால திட்டம் அறிவிக்கப்படவில்லை.
தமிழக அரசும் தமிழகத்தில் உள்ள ரயில்வே வளர்ச்சிக்கு எந்த ஒரு முக்கியத்துவத்தையும் கொடுக்க விரும்பவில்லை என்பது இந்த பட்ஜெட்டில் புறக்கணிக்கப்பட்டதிலிருந்து தெரிகின்றது. ஒன்றிய அரசால் தமிழ்நாடு ரயில்வே துறையால் கடந்த பல ஆண்டுகளாக தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகிறது.
தமிழ்நாட்டில் தற்போது 3852 கி.மீ தூரம் ரயில் இருப்புபாதை வழி தடம் உள்ளது. தமிழகத்தில் இந்தியா சுதந்திரம் அடைந்ததிலிருந்து சுமார் 3000 கி.மீ அளவுக்கு புதிய இருப்புபாதை அமைப்பதற்கு சர்வே செய்யப்பட்டு செயல்படுத்தபடாமல் உள்ளது. தமிழகத்தில் அதிக அளவில் கிளை இருப்புபாதைகள் அதிகம் உள்ளன.
கர்நாடகா மற்றும் ஆந்திர மாநிலங்கள் தங்கள் மாநிலத்தில் செயல்படுத்தும் புதிய ரயில்வே திட்டங்களுக்கு ஐம்பது சதவிகித நிதியை அளித்து இது மட்டும் இல்லாமல் திட்டத்துக்கு தேவையான நிலத்தையும் இலவசமாக ரயில்வே துறைக்கு கொடுத்து பல்வேறு புதிய ரயில் வழித்தடங்களை ஒப்புதல் பெற்று பணிகள் நடைபெற்று வருகிறது. இதை போன்று தமிழக அரசும் தமிழகத்தில் உள்ள அனைத்து ரயில்வே திட்டங்களுக்கு ஐம்பது சதவிகித நிதியை அளித்து திட்டங்களுக்கு தேவையான நிலத்தையும் இலவசமாக ரயில்வே துறைக்கு கொடுத்தால் தமிழகத்தில் உள்ள அனைத்து ரயில்வே திட்டங்கள் அனைத்தும் ஐந்து ஆண்டுகள் நிறைவு பெற்று பயன்பாட்டுக்கு வந்து விடும் என்பதில் ஐயமில்லை. இவ்வாறு தமிழக அரசு செய்ய வேண்டும் என்று தமிழக பயணிகள் கோரிக்கை வைக்கின்றனர்.
தெற்கு ரயில்வே
கோட்டங்கள் - 6
ரயில் நிலையங்கள் - 790
தினசரி சராசரி ரயில்கள் -1303
பயணிகள் - 22 லட்சங்கள் தினசரி
தமிழ்நாடு - 3852
கேரளா - 1047
ஆந்திரா - 121
கர்நாடகா - 46
புதுச்சேரி - 21
மொத்தம் -5087 கி.மீ

ரயில்வே திட்டங்கள்
தமிழகத்தில் தற்போது நடந்துவரும் ரயில்வே திட்டங்களை புதிய ரயில் வழித்தடங்கள் அமைத்தல், மீட்டர்கேஜ் வழித்தடங்களை அகல பாதைகளாக மாற்றம் செய்தல், ரயில் வழித்தடங்களை இருவழிப் பாதையாக மாற்றுதல், மின்மயமாக்கல், முனைய வசதிகளை அதிகரித்தல், தமிழகத்தில் உள்ள அனைத்து ரயில் நிலையங்களில் கூடுதல் வசதிகள் செய்து விரிவாக்கம் செய்தல், மூன்றாவது மற்றும் நான்காவது பாதை அமைத்தல்;, அதிவேக பாதைகள் அமைத்தல், புதிய ரயில் தொழிற்சாலைகள் அமைத்தல் என்ற பல்வேறு வகையாக வகைப்படுத்தலாம்.

ரயில் போக்குவரத்து
தமிழக அரசு ரயில் போக்குவரத்தை மேம்படுத்த எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதால் பொதுமக்கள் ரயில் போக்குவரத்துக்கு மாற்று போக்குவரத்து சாலை போக்குவரத்தை தேர்வு செய்து சாலை போக்குவரத்துக்கு மாறி வருகின்றனர். இதனால் சாலைகளில் அதிக அளவில் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. இது மட்டுமல்லாமல் சாலை போக்குவரத்து காரணமாக காற்று மாசுபாடு, விபத்துகள், சுங்கச்சாவடிகள், கார்களின் எண்ணிக்கை அதிகரித்தல் இவ்வாறு பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுகின்றன. தனிநபர் கார்கள் அதிகரிப்பால் தற்போதைய சாலையை ஆறுவழிபாதை, எட்டு வழி பாதை என விரிவாக்கம் செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகிறது அரசு. இதற்கு என பல லட்சம் கோடிகள் செலவும் செய்யப்படுகிறது. ஆனால் பல நூறு கோடிகள் செலவு செய்து ரயில்வே துறையை மேம்படுத்த மாநில அரசு எந்த ஒரு நடவடிக்கையும் எடுப்பதாக தெரியவில்லை. ரயில்வே அடிப்படை கட்டமைப்பு பணிகளுக்கு என அதிக நிதி ஒதுக்கீடு செய்து பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அடிப்படை கட்டமைப்பு இருந்தால்தான் தமிழகம் ரயில்வே போக்குவரத்து துறையில் வளர்ச்சி பெறும்.

புதிய இருப்புபாதை பணிகள்
தமிழகத்தில் தற்போது சுமார் 3846 கி.மீ அளவில் இருப்புபாதை வழித்தடங்கள் உள்ளன. தமிழக மக்கள் தொகை மற்றும் பரப்பளவுவை ஒப்பிடும்போது தமிழகத்தில் 1,30,058 பரப்பளவுக்கு 3852 கி.மீ இருப்புதை வழிதடத்ங்கள் உள்ள நிலையில் தற்போது 31.76 சதவிகிதம் ரயில் நெருக்கடியே உள்ளது. இதை 50.00 சதவிகிதம் ஆக அதிகரிக்க வேண்டும். தமிழகத்தில் புதிய இருப்புபாதை பணிகளாக மதுரை - தூத்துக்குடி வழி அருப்புக்கோட்டை, திண்டிவனம் - செஞ்சி - திருவண்ணாமலை, திண்டிவனம் - நகரி, அத்திப்பட்டு - புத்தூர், ஈரோடு - பழனி, சென்னை - கடலூர் வழி மகாபலிபுரம், ஸ்ரீபெரும்புதூர் - கூடுவாஞ்சேரி, மொரப்பூர் - தர்மபுரி, ராமேஸ்வரம் - தனுஷ்கோடி ஆகிய பாதை பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் ஒரு சில பணிகள் அனுமதி அளித்ததுடன் எந்தவொரு பணியும் நடக்காமல் கிணற்றில் போட்ட கல் போல உள்ளது. இந்த திட்டத்துக்கான நிதியை கடந்த சில ஆண்டுகளாக வருடம்தோறும் 1000 ரூபாய் ஒன்றிய அரசு ஒதுக்கீடு செய்து வருகின்றனர்.

கேரள மாநிலம்
தற்போது கேரள மாநிலம் அவர்கள் மாநிலத்தில் உள்ள அங்கமாலி - சபரிமலை ரயில் பாதைக்கு மாநில அரசு 50சதமானம் நிதியை ஒதுக்க இந்த திட்டத்தை செயல்படுத்த அனுமதி அளித்துள்ளது. ஆனால் இந்த திட்டத்தின் மூலம் வரும் வருவாயில் 50 சதவிகிதத்தை மாநில அரசு எடுத்து கொள்ளும் என்ற ஓர் நிபந்தனையுடன் இந்த திட்டத்தை செயல்படுத்த ஆவண செய்துள்ளது. கேரளா அரசு செய்தது போன்று தமிழக அரசும் தமிழகத்தில் கிடப்பில் உள்ள புதிய ரயில்வே பாதை திட்டங்களை 50 சதவிகித வருவாய் பங்களிப்புடன் திட்டங்களை செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்

மூன்றாவது நான்காவது இருப்புப்பாதை
தமிழகத்தில் ஒரு சில இடங்களில் இருவழிபாதை பணிகள் முடிவு பெற்று ஒரு சில இடங்களில் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் நெடுங்கால வளர்ச்சிக்கு மூன்றாவது இருப்புப்பாதை, நான்காவது பாதை அமைக்க வேண்டியது காலத்தின் கட்டாயம் ஆகும். கேரளாவில் இதற்கான பணிகள் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கிவிட்டது. ஆகவே நாமும் இருவழிபாதை பணிகள் நிறைவு பெற்று விட்டது என இருக்கும் மூன்றாவது இருப்புப்பாதை, நான்காவது இருப்புபாதை பணிகளை தொடங்க தேவையான பூர்வாங்க பணிகளை உடனடியாக தொடங்க வேண்டும். இதன்படி முதலில் தொடக்கநிலை பொறியியல் மற்றும் போக்குவரத்து ஆய்வு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் தற்போது மூன்றாவது இருப்புபாதைகள் மதுரை - விழுப்புரம் மூன்றாவது பாதை, கோயம்புத்தூர் - சென்னை (நான்கு பாதைகள்), சென்னை - விழுப்புரம் (நான்கு பாதைகள்), மதுரை - திண்டுக்கல் (நான்கு பாதைகள்) ஆகிய திட்டங்களை செயல்படுத்த ஆய்வு தமிழக அரசு ஆக்க பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த திட்டத்துக்கு எந்த ஒரு முன்னெடுப்பும் பட்ஜெட்டில் அறிவிக்கப்படவில்லை.

நிலம் கையகப்படுத்துதல்
புதிய ரயில்வே திட்டங்கள் செயல்படுத்த ரயில்வே அமைச்சகம் அறிவித்து அதற்கு தேவையான நிதியை ஒதுக்கினாலும் திட்டங்களை செயல்படுத்த நிலம் தேவைப்படும். இவ்வாறு திட்டங்களுக்கு தேவையான நிலத்தை மாநில அரசுதான் கையகப்படுத்தி ரயில்வே துறையிடம் கொடுக்க வேண்டும். மாநில அரசு நிலம் கையகப்படுத்துவதில் தாமதம் ஏற்படுதல், குறைந்த இழப்பீடு கொடுத்தல், நிலம் சம்பந்தமான பல்வேறு காரணங்களுக்காக நீதிமன்ற பிரச்சனைகள், திட்டங்களுக்கு தேவையான கட்டுமான பொருட்கள் ஒழுங்கு செய்தல் போன்ற பல்வேறு பிரச்சினைகளால் ரயில்வே திட்டம் செயல்படுத்துவதில் தாமதம் ஆகிறது. மற்ற மாநிலங்கள் ரயில்வே திட்டங்களை நிறைவேற்ற கூட்டு நிறுவனங்கள் தொடங்கியது போல் தமிழகமும் தமிழகத்தில் உள்ள அனைத்து ரயில்வே திட்டங்களை நிறைவேற்ற ரயில்வே துறையுடன் இணைந்து கூட்டு நிறுவனம் துவங்க பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியிடப்படும் என்று மிகவும் எதிர்ப்பார்க்கப்பட்ட பட்ஜெட்டில் இதற்கான எந்த ஒரு அறிவிப்பும் இல்லை. இதற்கு சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தமிழக அரசை வலியுறுத்த வேண்டும்.

ரயில்வே வளர்ச்சி துறைக்கு என தனி அமைச்சர்
தமிழகம் ரயில்வே துறையில் வளர்ச்சி பெறுவதற்கு, தமிழக பயணிகள் பயன்படும் விதமாக புதிய ரயில்கள் இயக்குதல், தமிழகத்தில் உள்ள ரயில் பாதையை இருவழிபாதை அதிகப்படுத்துவதற்கு, புதிய ரயில் இருப்புபாதைகள் அமைக்கவும், தற்போது மீட்டர் கேஜ் ரயில் பாதைகள் அகல ரயில் பாதை களாக மாற்றும் பணியை துரிதப்படுத்துதல் என பல ரயில்வே திட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டியுள்ளது. இதற்கு தமிழக அமைச்சரவையில் ரயில்வே வளர்ச்சி துறைக்கு என தனி அமைச்சர் நியமிக்க வேண்டும். 1050 கி.மீ தூரம் இருப்புபாதை கொண்ட கேரளாவில் தற்போது இது போன்ற ஒரு அமைச்சர் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். கேரளா அமைச்சர் ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட்டிற்கு முன்பு அந்த மாநிலத்தில் உள்ள அனைத்து மாவட்ட மக்களின் கோரிக்கைகளை தொகுத்து மிகப்பெரிய கோரிக்கை பட்டியல் தயார் செய்து மத்திய ரயில்வே அமைச்சரை நேரடியாக சந்தித்து அவர்கள் மாநில கோரிக்கையை சாதித்து கொள்கின்றனர். இதை போல் தமிழகத்திலிருந்து ஒரு மாநில ரயில்வே அமைச்சர் இருந்தால் தமிழகம் ரயில்வே வளர்ச்சியில் முன்னேறும் என்பதில் சந்தேகம் இல்லை. இது மட்டுமல்லாமல் ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ரயில்வே வளர்ச்சி அதிகாரி என ஒரு புதிய பதவியை உருவாக்கி ரயில்வே துறையில் இருந்து ஓய்வு பெற்ற குரூப்-1 அதிகாரியை நியமிக்க வேண்டும்.

அதிவேக ரயில் சேவைகள்
இந்தியாவில் பல்வேறு வழித்தடங்களில் அதிவேக ரயில்கள் இயக்க வேண்டும் என்று கோரிக்கைகள் வந்தவண்ணம் உள்ளது. இதற்காக பல்வேறு வழித்தடங்களில் சர்வேக்கள் செய்து வருகின்றனர். தமிழகத்தில் அதிவேக ரயில் இயக்க வேண்டும் என்று கோரிக்கைகள் வந்த வண்ணம் உள்ளது. கேரளாவில் அதிவேக ரயில்கள் 630 கி.மீ. தூரத்துக்கு மங்களூர் முதல் திருவனந்தபுரம் வரை இயக்க கேரளா அரசு கேரளா அதிவேக ரயில் கார்ப்பரேஷன் லிமிடெட் என்ற மாநில அரசு ஒரு புதிய பொதுத்துறை நிறுவனம் அமைத்து ஆரம்ப கட்ட பணிகளை செய்து வருகிறது. தமிழக அரசும் கன்னியாகுமரி முதல் சென்னை வரையிலும் அதிவேக ரயில்கள் இயக்க கேரளா அரசு செய்ததை போன்று தனியாக பொதுத்துறை கூட்டு நிறுவனம் அமைத்து செயல்படுத்த வேண்டும் என்று தமிழக பயணிகள் விரும்புகின்றனர். இதற்கு தேர்தலில் தேர்வாகும் சட்டமன்ற உறுப்பினர்கள் தமிழக அரசுக்கு அழுத்தம் கொடுத்து சட்டமன்றத்தில் இது குறித்து பேசி சிறப்பு தீர்மானம் கொண்டு வரவேண்டும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கேட்டால்தானே கிடைக்கும்
இதுகுறித்து அந்த சங்கத்தின் தலைவர் ஸ்ரீராமிடம் கேட்ட போது, தமிழகத்தில் ரயில்வே வளர்ச்சிக்காக பட்ஜெட்டில் நிதி ஏதும் ஒதுக்கவில்லை. குறைந்தபட்சம் கேரளாவை போல் ரயில்வே வளர்ச்சிக்கென தனி அமைச்சர் நியமிக்கப்படுவார் என எதிர்பாரத்தோம். ஆனால் ஏமாற்றமே கிடைத்தது. தமிழக அரசு மத்திய அரசுடன் இணக்கமான போக்கை கடைப்பிடிக்க வேண்டும். ரயில்வே வளர்ச்சி திட்டங்களுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்க தயாராக உள்ளது. ஆனால் அதை தமிழக அரசு கேட்டு பெறாமல் உள்ளது. கேட்டால்தானே நிதி ஒதுக்குவார்கள். ரயில்வே பற்றி பேசினாலே அது மத்திய அரசின் டிபார்ட்மென்ட் என ஒதுங்கிவிட்டால் எப்படி என கேள்வி எழுப்பியுள்ளார்.












Click it and Unblock the Notifications