வாராரு வாராரு மோடி வாராரு.. அண்ணாமலை பாதயாத்திரையில் பிரமாண்ட சிலை.. ஒரு நாள் வாடகை எவ்ளோ தெரியுமா?
கன்னியாகுமரி: பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தற்போது கன்னியாகுமரி மாவட்டத்தில் பாதயாத்திரை மேற்கொண்டு வரும் நிலையில், மோடி சிலை ஒன்றும் டெம்போவில் பயணிக்கிறது. இந்த சிலைக்கு ஒரு நாள் வாடகை ரூ.25 ஆயிரம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை 'என் மண் என் மக்கள்' என்ற பெயரில் பாதயாத்திரையை தமிழ்நாடு முழுவதும் மேற்கொண்டு வருகிறார். கடந்த ஜூலை 28ஆம் தேதி ராமேஸ்வரத்தில் இருந்து தனது பாதயாத்திரையை தொடங்கிய அண்ணாமலை ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, மதுரை, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் தனது பாதயாத்திரையை நிறைவு செய்துள்ளார். தற்போது தென்கோடி முனையில் கன்னியாகுமரியில் பாதயாத்திரை மேற்கொண்டு வருகிறார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளிலும் அண்ணாமலை பாதயாத்திரை மேற்கொண்டுள்ளார். நேற்று முன்தினம் விளவங்கோடு, கிள்ளியூர் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் பாதயாத்திரை மேற்கொண்டார். அதைத்தொடர்ந்து, நேற்று பத்மநாபபுரம் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் அண்ணாமலை பாதயாத்திரை மேற்கொண்டார்.
இன்று காலை 10.15 மணிக்கு சாமியார் மடத்திலிருந்து தனது பாதயாத்திரையை தொடங்கினார் அண்ணாமலை. கையில் பாஜக கட்சிக் கொடியுடன் ஏராளமான பாஜக தொண்டர்கள் அண்ணாமலையுடன் பாதயாத்திரை மேற்கொண்டனர். இந்த பாதயாத்திரையில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று நடைபெற்ற அண்ணாமலை பாதயாத்திரையின்போது, பிரமாண்டமான மோடி சிலை ஒன்றும் டெம்போவில் எடுத்துச் செல்லப்பட்டது. சுமார் 15 அடி உயரம் கொண்ட பிரதமர் நரேந்திர மோடி சிலை இன்று அண்ணாமலை நடைபயணம் சென்ற இடங்களுக்கெல்லாம் உடன் சென்றது.
பாதயாத்திரையில் சென்ற மோடி உருவச் சிலை, தலையை இரு பக்கமும் திருப்புவது போலவும், மக்களை நோக்கி கையை அசைப்பது போலவும் மின் மோட்டார் உதவியுடன் இயக்கப்படுகிறது. மேலும், பிரதமர் மோடி இந்தியில் ஆற்றும் உரையும் ஒலிக்கிறது. அண்ணாமலை பாதயாத்திரையில் இடம்பெற்றுள்ள மோடி சிலை அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இந்த சிலை கேரளாவில் இருந்து கொண்டு வரப்பட்டுள்ளது.

கோவில் திருவிழா ஊர்வலங்களுக்கு சாமி சிலைகளை வாடகைக்கு வழங்கும் நிறுவனத்தை நடத்தி வரும் கொல்லத்தைச் சேர்ந்த ஜே.டி.கோபன் என்பவரிடம் இருந்து பிரதமர் மோடி சிலையை வாடகைக்கு வாங்கி, கன்னியாகுமரி பாஜகவினர் பயன்படுத்தியுள்ளனர். இந்த சிலைக்கு ஒரு நாள் வாடகை ரூ.25 ஆயிரமாம். கன்னியாகுமரி மாவட்டத்தில் இந்த சிலையை 3 நாட்களுக்கு பாஜகவினர் வாடகைக்கு எடுத்துள்ளனராம்.
இன்று மாலையில் குளச்சல் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் பாதயாத்திரை மேற்கொள்கிறார் அண்ணாமலை. நாளை (ஆகஸ்ட் 18) காலை நாகர்கோவில் தொகுதிக்குட்பட்ட பார்வதிபுரம் பகுதியில் இருந்து பாதயாத்திரையை தொடங்கும் அண்ணாமலை வேப்பமூடு காமராஜர் சிலை முன்பு நிறைவு செய்கிறார். நாளை மதியம் கன்னியாகுமரி ரவுண்டானாவில் இருந்து தொடங்கி கொட்டாரத்தில் பாதயாத்திரை நிறைவு செய்கிறார். இந்த யாத்திரையின்போதும் மோடி சிலை பயணிக்க உள்ளது.












Click it and Unblock the Notifications