கன்னியாகுமரி செல்வோர் கவனத்திற்கு.. பிரதமர் மோடி வருகை! சுற்றுலா பயணிகள், படகுகளுக்கு அனுமதி இல்லை
கன்னியாகுமரி: பிரதமர் நரேந்திர மோடி இன்று வியாழக்கிழமை கன்னியாகுமரியில் உள்ள புகழ்பெற்ற விவேகானந்தர் பாறை நினைவிடத்தில் சுமார் 45 மணி நேரம் அமர்ந்து தியானம் செய்ய உள்ளதால் அங்குப் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
லோக்சபா தேர்தல் இப்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதுவரை 6 கட்ட வாக்குப்பதிவு முடிந்துள்ள நிலையில், 7ஆம் கட்ட வாக்குப்பதிவு நாளை மறுநாள் ஜூன் 1ஆம் தேதி நடைபெற உள்ளது.

இந்த கடைசிக் கட்ட தேர்தல் பிரச்சாரம் இன்றுடன் நிறைவடையும் நிலையில், பிரதமர் மோடி கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் பாறை நினைவிடத்தில் சுமார் 45 மணி நேரம் அமர்ந்து தியானம் செய்ய உள்ளார். இதன் காரணமாக அங்குப் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
திமுக மனு: இருப்பினும், சுற்றுலா சீசன் உள்ளதால் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தருகிறார்கள். இதன் காரணமாகவும் தற்போது நடைமுறையில் உள்ள தேர்தல் நடத்தை விதிகள் காரணமாகவும் பிரதமர் மோடியின் இந்த ஆன்மிக பயணத்திற்கு அனுமதி வழங்கக் கூடாது என ஆளும் திமுக மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளது. இருப்பினும், இந்த விவகாரத்தில் மாவட்ட ஆட்சியர் எந்தவொரு முடிவையும் எடுக்கவில்லை.
இதற்கிடையே பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு கன்னியாகுமரியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இன்று வியாழக்கிழமை முதல் சனிக்கிழமை வரை சுற்றுலாப் பயணிகளுக்குக் கடற்கரைக்கு வரத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், தனியார் படகுகளும் கடலுக்குச் செல்ல அனுமதி இல்லை.
தியானம்: கடந்த 2019 லோக்சபா தேர்தல் சமயத்தில் பிரதமர் மோடி இதேபோலத் தான் கேதார்நாத் குகையில் தியானம் செய்திருந்தார். இதற்கிடையே 5 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது அவர் கன்னியாகுமரியில் தியானம் செய்ய உள்ளார். இதற்காக மாவட்டத்தில் 2,000 காவலர்கள் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
இன்று மே 30ஆம் தேதி லோக்சபா தேர்தல் பிரச்சாரம் நிறைவடையும் நிலையில், சுவாமி விவேகானந்தருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அங்கு மோடி தியானம் செய்ய உள்ளார். அங்குள்ள தியான மண்டபத்தில் மே 30 மாலை முதல் ஜூன் 1 மாலை வரை அவர் தியானம் செய்வார் என்று பாஜக தலைவர்கள் தெரிவித்தனர்.. அங்குள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ பகவதி அம்மன் கோயிலிலும் பிரதமர் வழிபாடு நடத்த உள்ளார். தியானத்தை முடித்துக் கொண்டு கிளம்பும் முன்பு ஜூன் 1ஆம் தேதி அவர் 133 அடி உயரமுள்ள திருவள்ளுவர் சிலையைப் பார்வையிடவும் செல்லவுள்ளார்.
போலீஸ் பாதுகாப்பு: மோடி வருகையை முன்னிட்டு அங்குப் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. திருநெல்வேலி டிஐஜி பிரவேஷ் குமார், போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் உடன் ஆகியோர் பிரதமர் வருகையை முன்னிட்டு செய்யப்பட்டுள்ள மாளிகையில் பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்தனர். அங்குப் பிரதமரின் ஹெலிகாப்டர் தரையிறங்கும் ஹெலிபேடையும் அவர்கள் ஆய்வு செய்தனர்.
தீவிர பாதுகாப்பு: தற்போதைய திட்டத்தின்படி இன்று மே 30ஆம் தேதி கன்னியாகுமரிக்கு ஆன்மீக தரிசனத்திற்காகப் பிரதமர் மோடி வரவுள்ளார். இங்குத் தியானத்தைத் தொடங்கும் அவர் ஜூன் 1ஆம் தேதி மாலை 3 மணி வரை அங்கேயே தங்கி தியானம் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரதமர் சுமார் 45 மணி நேரம் அங்கேயே தங்கி தியானம் செய்வார் என்பதால், கடலோர பாதுகாப்புக் குழு, இந்தியக் கடலோர காவல்படை மற்றும் இந்தியக் கடற்படையினர் கடல் எல்லையில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications