நன்றி தமிழ்நாடு.. 53 கி.மீட்டரை கடந்த ராகுல் காந்தி.. ‘பெரியார் மண்’ - போட்டாரே ஒரு போடு!
கன்னியாகுமரி : தமிழகத்தில் தனது நடைபயணத்தை காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி நிறைவு செய்தார். கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான நடை பயணத்தில் 53 கி.மீ தூரத்தைக் கடந்துள்ளார் ராகுல்.
அவர் தனது பயணத்தின் இடையே பல்வேறு நபர்களையும் சந்தித்துப் பேசினார். இன்று ராகுல் காந்தியின் 4வது நாள் நடைபயணம் முடிவடைந்தது.
இன்றோடு தமிழகத்தில் நடைபயணம் நிறைவடைந்த நிலையில் நாளை கேரள எல்லையில் தனது பயணத்தை தொடங்குகிறார் ராகுல் காந்தி.
தமிழகத்தில் நடைபயணத்தை நிறைவு செய்த ராகுல் காந்தி, தமிழ் மக்களிடம் எனக்கு ஒரு தனிப்பட்ட ஈடுபாடு உண்டு. நான் பெரியார் மண்ணை விட்டு வருத்தத்துடன் திரும்பி செல்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.

ராகுல் நடைபயணம்
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, இந்திய ஒற்றுமை நடைபயணத்தில் ஈடுபட்டு வருகிறார். குமரி முதல் காஷ்மீர் வரை 150 நாட்களில் சுமார் 3,500 கி.மீ தூரம் நடை பயணம் மேற்கொள்கிறார் ராகுல் காந்தி. இதனை கன்னியாகுமரியில் காந்தி மண்டபம் முன்பிருந்து கடந்த 7ஆம் தேதி தொடங்கினார். தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேசியக்கொடியை ராகுல் காந்தியிடம் வழங்கி பாத யாத்திரையை தொடங்கி வைத்தார்.

4 நாட்கள்
ஸ்டாலின் கொடுத்த தேசியக்கொடியை கையில் ஏந்தியவாறு 600 மீட்டர் தூரம் நடந்து வந்த ராகுல்காந்தி கன்னியாகுமரி கடற்கரை சாலையில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றினார். இரண்டாவது நாளில் அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரியில் இருந்து தனது நடைபயணத்தை ஆரம்பித்து, கொட்டாரம் காமராஜர் சிலை அருகில் தொடங்கி கோட்டார் வரை நடந்தார் ராகுல் காந்தி.

தமிழ்நாட்டில் பயணம் நிறைவு
நேற்றுடன் 3-வது நாள் பாதயாத்திரையை நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரியில் தொடங்கி முளகுமூடு சந்திப்பு வரை மேற்கொண்டார். இன்று 4-வது நாளாக ராகுல் காந்தி தனது பாதயாத்திரையை கன்னியாகுமரி மாவட்டம் முளகுமூடு பகுதியில் இருந்து தொடர்ந்தார். தளச்சான்விளை வரையும் நடைபயணம் மேற்கொண்ட ராகுல் காந்தி இன்று இரவு செறுவாரக்கோணத்தில் ஓய்வெடுக்க இருக்கிறார்.

நாளை முதல் கேரளா
இன்றோடு ராகுல் தமிழகத்தில் மேற்கொண்ட நடைபயணம் முடிவடைந்துள்ளது. நாளை காலை பாறசாலை வழியாக திருவனந்தபுரம் புறப்பட்டு செல்கிறார். அவர் தனது பயணத்தின் இடையே விவசாய சங்கத் தலைவர் பி.ஆர்.பாண்டியன், வில்லேஜ் குக்கிங் சேனல் பிரமுகர்கள், சுப.உதயகுமாரன் உள்ளிட்ட பல்வேறு நபர்களையும் சந்தித்துப் பேசினார்.

பெரியார் மண்ணை விட்டு
தமிழகத்தில் தனது நடைபயணத்தை நிறைவு செய்த பின்னர் பேசிய ராகுல் காந்தி, "நடைபயணத்திற்கு வரவேற்பு கொடுத்த மக்களுக்கு எனது நன்றி. மக்களின் உழைப்புக்கான ஊதியம் கிடைக்கவே இந்த நடைபயணம். தமிழக மக்களிடம் தனிப்பட்ட ஈடுபாடு உண்டு. நான் பெரியார் மண்ணை விட்டு வருத்தத்துடன் திரும்பி செல்கிறேன்." எனத் தெரிவித்துள்ளார்.

பாஜக மீது விமர்சனம்
மேலும் பேசிய அவர், "சாதி, மதம் என மக்களை பிரித்து கொண்டிருக்கின்றனர். குறிப்பிட்ட சிலருக்கு, பெரு வணிகம் செய்பவர்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்பதற்காக மக்களுக்கு அநீதி அளித்து வருகின்றனர். ஒரு இந்தியர் மற்ற இந்தியரை ஒதுக்க வேண்டும், நாட்டில் கலவரத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக செயல்படுகின்றனர்." என பாஜகவை விமர்சித்தார்.












Click it and Unblock the Notifications