கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயிலில் குறைக்கப்பட்ட ஸ்லீப்பர் பெட்டிகள்.. கொதிக்கும் மக்கள்
கன்னியாகுமரி: கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயிலில் குறைக்கப்பட்ட 2-ம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகளை கூடுதலாக இணைக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது.
தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் இருந்து கடைகோடியில் கேரள எல்லையை ஒட்டியுள்ள மாவட்டம் கன்னியாகுமரி. இந்த மாவட்ட மக்கள் பலர் சென்னையில் வசிக்கிறார்கள். பல்லாயிரக்கணக்கான மக்கள் சென்னையில் வசித்து வருவதால், அவர்கள் தினசரி சென்னை முதல் கன்னியாகுமரி செல்வது வழக்கமாக இருக்கும்.

இங்கிருந்து தினசரி ஆயிரக்கணக்கான மக்கள் கல்வி, வேலை, மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்காக சென்னைக்கு பயணம் மேற்கொள்வதே வாடிக்கை. கன்னியாகுமரிக்கு பொதுமக்களை தாண்டி சுற்றுலா பயணிகளும் தினசரி ஆயிரக்கணக்கானோர் வந்து செல்வார்கள். இதனால் கன்னியாகுமரிர மாவட்டத்திற்கு என்று ரயில்கள் அதிக அளவில் இயக்கப்படுகிறது.
இதில் கன்னியாகுமரி விரைவு ரயில் மிக முக்கியமானது. கன்னியாகுமரி விரைவு ரயிலில் சாமானிய மக்கள் அதிக அளவில் பயணிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அதிக ஸ்லீப்பர் பெட்டிகளுடன் இயக்கப்பட்டு வந்தது. 2-ம் வகுப்பு படுக்கைக்கான 12 பெட்டிகளுடன் இயக்கப்பட்டு வநதது. இப்படி 12 பெட்டிகளுடன் இயக்கியும் தினசரி சென்னைக்கு பயணம் செய்ய ரயிலில் இடம் கிடைக்காமல் நூற்றுக்கணக்கான மக்கள் தவித்து வருகிறார்கள்.
இதன் காரணமாக கன்னியாகுமரியில் இருந்து சென்னைக்கும், சென்னையில் இருந்து கன்னியாகுமரிக்கும் கூடுதலாக ஒரு தினசரி ரயில் இயக்க வேண்டும் என்று கன்னியாகுமரி மாவட்ட மக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வருகிறார்கள். ஆனால் அந்த கோரிக்கையின் படி ரயில் விடாமல் அவ்வப்போது சிறப்பு ரயில்கள் மட்டுமே தெற்கு ரயில்வே அறிவித்து வருகிறது.
நிரந்தரமாக தினசரி ரயில் இயக்க எல்லா வாய்ப்புகளும் உள்ளன. முன்பு ஒரு வழிப்பாதையாக இருந்த சென்னை கன்னியாகுமரி வழித்தடம் இப்போது இரட்டை பாதையாக மாறி உள்ளது. எனவே எத்தனை ரயில்கள் வேண்டுமானாலும் இப்போது கன்னியாகுமரிக்கு இயக்க முடியும். எழும்பூரில் நிறுத்த இடம் இல்லை என்றால் தாம்பரத்தில் இருந்து தாராளமாக இயக்க முடியும்.
இந்த சூழலில் புதிய ரயில்களை அதிக அளவில் இயக்காத ரயில்வே நிர்வாகம், அந்த கோரிக்கை குறித்து பரிசீலிப்பதற்கு பதிலாக கன்னியாகுமரி விரைவு ரயிலில் 2-ம் வகுப்பு படுக்கை வசதி கொண்ட பெட்டிகளின் எண்ணிக்கை 7-ஆக குறைத்துள்ளது. அதே நேரம் குளிர்சாதன வசதி கொண்ட பெட்டிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கப்பட்டுள்ளது.
கூடுதல் குளிர்சாதன பெட்டிகளை இணைப்பதில் யாருக்கும் ஆட்சேபனை இல்லை என்று கூறும் பொதமக்கள், அதற்காக குளிர்சாதன வசதி கொண்ட பெட்டிகளை இணைத்துவிட்டு, ஏற்கனவே உள்ள 2-ம் வகுப்பு படுக்கை வசதி கொண்ட பெட்டிகளை நீக்கி இருப்பது முற்றிலும் தவறு என்று கொந்தளிக்கிறார்கள். இதன் காரணமாக 2-ம் வகுப்பு இருக்கைகள் கொண்ட பெட்டிகளின் எண்ணிக்கை 12-ல் இருந்து படிப்படியாக குறைத்து தற்போது 7-ஆக மாற்றப்பட்டுள்ளது.
தெற்கு ரயில்வே எடுத்த இந்த நடவடிக்கை ஏழை நடுத்தர மக்கள் மீதான மிகப்பெரிய தாக்குதல் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குற்றம்சாட்டி உள்ளது. ஏழை எளிய நடுத்தர மக்களுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொண்டுவரும் மத்திய மோடி அரசின் இத்தகைய நடவடிக்கைக்கு தென்னக ரயில்வே துணை போகக்கூடாது என்று கூறியுள்ளது.
மேலும் ஏற்கனவே இருந்த அடிப்படையில் கூடுதலான 2-ம் வகுப்பு பெட்டிகளை கன்னியாகுமரி விரைவு ரயிலில் இணைக்க வேண்டும் என குமரி மாவட்ட இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications