கன்னியாகுமரி மாவட்டத்தின் பல நாள் பிரச்சனைக்கு தீர்வு.. கலெக்டர் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு
கன்னியாகுமரி: அரசு அலுவலகம் மூலம் தீர்க்கப்படாமல் உள்ள பொது பிரச்சினைகளை 5-ந் தேதிக்குள் மனுக்களாக அனுப்பலாம் என கன்னியாகுமரி கலெக்டர் அழகுமீனா அறிவித்துள்ளார். பல ஆண்டுகளாக அரசு அலுவலகங்களில் தீர்க்கப்படாமல் இருக்கும் பொதுப் பிரச்சினைகள் குறித்ததாக மனுக்களை அனுப்பலாம் என கலெக்டர் அழகுமீனா அறிவித்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் அழகுமீனா வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளதாவது: "தமிழ்நாடு சட்டமன்ற பேரவையின் 2024-2025-ம் ஆண்டுக்கான மனுக்கள் குழு கன்னியாகுமரி மாவட்டத்தில் விரைவில் கூடுவதென முடிவு செய்துள்ளது. இதையொட்டி மாவட்ட எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள தனிப்பட்ட நபரோ, சங்கங்களோ அல்லது நிறுவனங்களோ, தீர்க்கப்பட வேண்டிய பொது பிரச்சினைகள், குறைகள் குறித்த மனுக்களை (ஐந்து நகல்கள் தமிழில் மட்டும்) மனுதாரர் அல்லது மனுதாரர்கள் தேதியுடன் கையொப்பமிட்டு தலைவர், மனுக்கள் குழு, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை, சென்னை என்ற முகவரிக்கு நேரடியாகவோ, மாவட்ட கலெக்டர் அல்லது மாவட்ட வருவாய் அதிகாரி, வருவாய் கோட்டாட்சியர், தாசில்தார் மூலமாகவோ அடுத்த மாதம் (ஆகஸ்டு) 5-ந் தேதிக்குள் அனுப்பலாம்.

மனுக்கள் கண்ணியமான வாக்கியத்தில் இருத்தல் வேண்டும். பல ஆண்டுகளாக அரசு அலுவலகங்களில் தீர்க்கப்படாமல் இருக்கும் பொதுப் பிரச்சினைகள் குறித்ததாக மனுக்கள் இருக்கலாம். மனுக்கள் ஒரேயொரு பிரச்சினையை உள்ளடக்கியதாகவும், ஒரேயொரு துறையைச் சார்ந்ததாகவும் இருத்தல் வேண்டும். மனுக்கள் பொது முக்கியத்துவம் வாய்ந்த பொருள் ஒன்றினை உள்ளடக்கியதாக இருத்தல் வேண்டும். ஆனால் மனுவில் உள்ள பொருட்கள் தனிநபர் குறை, நீதிமன்றத்தின் முன் வழக்கில் உள்ள பொருள், போன்றவைகளாக இருக்கக் கூடாது.
சட்டமன்ற பேரவை விதிகளின் வரம்பிற்குட்பட்ட மனுக்களை, மனுக்கள் குழு மாவட்டத்திற்கு வரும்போது ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளும். ஒரே மனுதாரர் பல மனுக்களை அனுப்பி இருந்தாலும், குழு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதும் ஒரு மனு மட்டுமே ஆய்விற்கு எடுத்துக்கொள்ளப்படும். மனுதாரர் முன்னிலையில் குழுக் கூட்டத்தில் கலந்து கொள்ளும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம், மனுவில் உள்ள பொருள் குறித்த உண்மை நிலவரம் கேட்டறியப்படும்.
இதுகுறித்து மனுதாரர்களுக்கு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இருந்து குழு ஆய்வு செய்யும் நாளில் தகவல் தனியாக அனுப்பப்படும். வருகிற 5-ந் தேதிக்கு பின்னர் பெறப்படும் மனுக்கள் குழுவின் ஆய்விற்கு எடுத்துக்கொள்ளப்படாது." இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications