தவெக- காங்கிரஸ் கூட்டணி! கிரிஷ் சோடங்கர் கூறியது அவரது சொந்த கருத்து! விஜய் வசந்த் விளக்கம்
கன்னியாகுமரி: தவெகவுடன் காங்கிரஸ் கட்சி பேசி வருகிறது என கிரிஷ் சோடங்கர் கூறியிருப்பது அவருடைய கருத்து. ஆனால் திமுக- காங்கிரஸ் கூட்டணி இணக்கமாக உள்ளது என எம்பி விஜய் வசந்த் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறுகையில், "திமுக- காங்கிரஸ் கூட்டணி இணக்கமாக உள்ளது. நேற்று, நேற்று முன் தினம் ஆகிய இரு நாட்கள் கன்னியாகுமரிக்கு வந்த முதல்வர் ஸ்டாலின், நலத்திட்டங்களை தொடங்கி வைத்தார். அந்தளவுக்கு திமுக- காங்கிரஸ் கூட்டணி வலிமையாக இருக்கிறது.

தவெக காங்கிரஸை கூட்டணிக்கு அழைக்கிறது என கிரிஷ் சோடங்கர் கூறியது அவரது கருத்து, எதுவாக இருந்தாலும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கார்கே, ராகுல் காந்தி, சோனியா காந்த் உள்ளிட்டோரே முடிவு எடுப்பர். இவ்வாறு விஜய் வசந்த் தெரிவித்திருந்தார்.
தமிழக காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், தவெக தங்கள் கட்சியை கூட்டணிக்கு வெளிப்படையாக அழைத்துள்ளதாகவும், அதேநேரம் திமுக இன்னும் பேச்சுவார்த்தைக்கு அழைக்கவில்லை என்றும் தெரிவித்தார். காங்கிரஸ் அதற்காகக் காத்திருப்பதாகவும் அவர் கூறினார்.
காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால், முதல்வர் ஸ்டாலினை சந்தித்தபோது கூட்டணி, தொகுதிப் பங்கீடு குறித்து பேசப்பட்டது. எனினும், இறுதி முடிவு எட்டப்படவில்லை; பேச்சுவார்த்தைகள் தொடரும் என சோடங்கர் விளக்கினார்.
தவெகவின் வெளிப்படையான அழைப்பு, காங்கிரஸின் தொண்டர் பலத்தை அங்கீகரிப்பதாகவே அவர் குறிப்பிட்டார். தற்போது திமுகவுடன் தொடர்ந்து பேசி வருவதாகவும், கூட்டணி முடிவுகள் விரைந்து எட்டப்பட்டிருந்தால் தேர்தல் பணிகளுக்கு 75 நாட்கள் அவகாசம் கிடைத்திருக்கும் எனவும் சோடங்கர் தெரிவித்தார்.
மகாராஷ்டிரா, பீகார் போன்ற மாநிலங்களில் நடந்ததைப்போல, கடைசி நிமிட நெருக்கடியில் கொடுக்கப்படும் தொகுதிகளை ஏற்றுக்கொள்ளும் கட்டாயத்திற்கு ஆளாக விரும்பவில்லை என்றும் அவர் வலியுறுத்தினார்.
காங்கிரஸுக்கு 12% முதல் 20% வரையிலான உண்மையான வாக்கு வங்கி உள்ளதுடன், வலிமையான தொண்டர் படை இருப்பதாகவும் கிரிஷ் சோடங்கர் கூறினார். இந்த நிலையில் கூட்டணிக்கு தவெக அழைக்கிறது என்று சோடங்கர் கூறியது சொந்த கட்சியினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. தொகுதி பங்கீடு குறித்து முதல்வர் ஸ்டாலினை சந்தித்து கே.சி.வேணுகோபால் பேசியிருக்கிறார்.
கனிமொழியிடம் சோடங்கர் பேசியிருக்கிறார். இப்படிப்பட்ட நிலையில் இன்னும் காத்திருக்கிறோம், காத்திருக்கிறோம் என சோடங்கர் கூறியிருப்பது திமுகவினருக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
சோடங்கரின் கருத்து குறித்து செல்வப்பெருந்தகையிடம் கேட்ட போது அவர், தேர்தல் கூட்டணி தொடர்பாக திமுகவுடன்தான் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறோம். வேறு யாருடனும் பேச்சு நடத்தவில்லை.
திமுக- காங்கிரஸ் கூட்டணி இணக்கமாகத்தான் உள்ளது. கிரிஷ் சோடங்கர் கூறியது அவரது சொந்த கருத்து, காங்கிரஸ் கட்சியின் கருத்து அல்ல என்றும் செல்வப்பெருந்தகை பதில் அளித்துள்ளார்.












Click it and Unblock the Notifications