ஜோதிடருக்கு நாள் குறித்த கன்னியாகுமரி கலையரசி.. இளைஞருக்கு கண்ணை மறைத்த ஆசை.. சிக்கியது எப்படி?
கன்னியாகுமரி: நாகர்கோவில் பெருவிளை அருகே உள்ள கோட்டவிளை பகுதியை சேர்ந்தவர் ஜான் ஸ்டீபன் இவர் நாட்டு வைத்தியர் ஆவார். இவர் அந்த பகுதியில் ஜோதிடமும் பார்த்து வந்தார். இவரது ஜோதிடம் பலிக்காததால் ஏற்பட்ட ஆத்திரத்தில் ரூ.10 லட்சம் கொடுத்து அவருக்கு நாள் குறித்துள்ளார் கலையரசி என்ற பெண். அவருக்கு 25 வயதாகும் நம்பிராஜன் என்ற இளைஞர் உதவி உள்ளார். என்ன நடந்தது என்பதையும், கலையரசி கொடுத்த வாக்குமூலத்தையும் பார்ப்போம்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பெருவிளை அருகே உள்ள கோட்டவிளை பகுதியை சேர்ந்தவர் 58 வயதாகும் ஜான் ஸ்டீபன். இவர் அந்த பகுதியில் நாட்டு வைத்தியம் பார்த்து வந்தார். ஜான் ஸ்டீபன் ஜோதிடமும் பார்த்து வந்தார். இவர் கடந்த ஜனவரி 8-ந் தேதி வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

பிரேத பரிசோதனை முடிவில் ஜான் ஸ்டீபன் கழுத்தை நெரித்து கொன்றது தொியவந்தது. இதையடுத்து சந்தேக மரணம் என்று பதியப்பட்ட வழக்கானது கொலை வழக்காக மாற்றப்பட்டு தீவிர விசாரணை நடந்தது. போலீசார் நடத்திய விசாரணையில், இரணியல் அருகே கட்டிமாங்கோடு பகுதியை சேர்ந்த 43 வயதாகும் கலையரசி என்பவர் கூலிப்படையைச் சேர்ந்தவரை ஏவி தீர்த்துக்கட்டியது தெரியவந்தது. கலையரசியின் திட்டப்படி, திருநெல்வேலி மாவட்டம் கருவேலங்குளத்தை சேர்ந்த 25 வயதாகும் நம்பிராஜன் என்ற இளைஞர், நட்புடன் பழகி, ஜான் ஸ்டீபனை தீர்த்துக்கட்டியது போலீசாருக்கு தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து கலையரசி மற்றும் நம்பிராஜன் ஆகிய இரண்டு பேரையும் நாகர்கோவில் போலீசார் கைது செய்தனர். பின்னர் 2 பேரிடமும் தனித்தனியாக வாக்குமூலம் வாங்கினார்கள்.கலையரசி கூறிய வாக்குமூலம் குறித்து போலீசார் கூறு போது, கலையரசிக்கும், அவரது கணவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாம். இதனால் கலையரசி எவ்வளவோ முயற்சி செய்தும் எங்களுக்குள் இருந்த பிரச்சினையை சரி செய்ய முடியவில்லையாம். அப்போது தான் ஜாதகத்தில் ஏதாவது குறைபாடு இருக்கிறதா? பரிகாரம் செய்தால் பிரச்சினை தீருமா? என்று யோசித்துள்ளார். எனவே ஜாதகம் பார்க்க முடிவு செய்து ஜான் ஸ்டீபனை அணுகியுள்ளார்.
அப்போது ஜான் ஸ்டீபன், கலையரசியின் ஜாதகத்தில் குறைபாடு இருப்பதாக கூறினாராம். அவற்றை பரிகாரம் மூலம் தீர்த்தால் கணவருடன் பிரச்சினை வராது என்று நம்பும்படி தெரிவித்தாராம். இதற்காக கலையரசியிடம் ஜான் ஸ்டீபன் அடிக்கடி பணம் வாங்கினாராம். அவர் கூறிய பரிகாரங்களை எல்லாம் கலையரசி செய்தாராம் ஆனாலும் பிரச்சினை தீரவில்லை என கூறப்படுகிறது. பிரச்சனை தீராதது ஒருபுறம் எனில், கலையரசிக்கும், அவரது கணவருக்கும் இடையே தகராறு அதிகரித்து வந்ததாம்
இதுகுறித்து ஜாண் ஸ்டீபனிடம் கேட்டபோது அவர் மழுப்பலாக பதில் அளித்தாராம். அப்போது ஆத்திரம் அடைந்த கலையரசி, ஸ்டீபன் தான் ஏதோ மாந்திரீகம் செய்து எனது கணவரை என்னிடம் இருந்து நிரந்தரமாக பிரிக்க திட்டமிடுகிறார் என்று சந்தேகப்பட்டுள்ளார். இதன் காரணமாக அவரை தீர்த்து கட்ட முடிவு செய்துள்ளார் கலையரசி. ஆனால் எப்படி கொலை செய்வது என்று தெரியாமல் இருந்துள்ளார். அந்த சமயத்தில் தான் உறவினர் ஒருவர் மூலம் நம்பிராஜன் அறிமுகம் ஆனாராம். கன்னியாகுமரியில் மீன்கடை வைத்துள்ள அவர் கலையரசியிடம் ரூ.40 ஆயிரம் கடன் வாங்கினார். அப்போது அவருக்கு பணத்தேவை இருப்பதை அறிந்து கொண்டுள்ளார் கலையரசி.
அதை எனக்கு சாதகமாக பயன்படுத்தி நம்பிராஜனுக்கு பணம் கொடுத்து ஜாண் ஸ்டீபனை தீர்த்து கட்ட முடிவு செய்துள்ளார். இதற்காக ரூ.10 லட்சம் கொடுத்துள்ளார. இதைத் தொடர்ந்து சம்பவத்தன்று தனது திட்டத்தை நம்பிராஜன் செயல்படுத்தினார். முதலில் சந்தேக மரணம் என்று தான் போலீசார் வழக்கு பதிவு செய்திருந்தனர். இதனால் தப்பித்து விடலாம் என நினைத்துள்ளார். ஆனால் பிரேத பரிசோதனையில் இருவரும் மாட்டிக் கொண்டார்கள் என கலையரசியின் வாக்குமூலம் குறித்து போலீசார் தெரிவித்தனர்.
இதே போல ஸ்டீபனை தீர்த்துக்கட்டிய நம்பிராஜன் கூறும் போது, 'ஜோதிடர் ஜான் ஸ்டீபனை கொலை செய்ய வேண்டும் என்று கலையரசி தன்னிடம் கூறியபோது அதிர்ந்து போனேன். ஆனால் கூலியாக ரூ.10 லட்சம் தருவதாக கூறியதால் ஆசை கண்ணை மறைத்தது. அதிக பணம் கிடைக்கும் என்ற ஆசையில் தீர்த்துக்கட்ட முடிவு செய்தேன். இதைத்தொடர்ந்து ஜான் ஸ்டீபனிடம் நட்புடன் பழக தொடங்கினேன். அவருக்கு என் மேல் எந்த சந்தேகமும் வரவில்லை. என்னிடம் நண்பராக பழகினார். ஆனால் அவரை தீர்த்துக் கட்ட சமயத்தை எதிர்பார்த்து காத்திருந்தேன். ஜனவரி 8ம் தேதியன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அவரை கழுத்தை நெரித்துக் கொன்றேன் என்றார்.
சிறையில் அடைப்பு
இதையடுத்து கைது செய்யப்பட்ட கலையரசி, நம்பிராஜன் ஆகிய 2 பேரையும் போலீசார் நேற்று காலையில் நாகர்கோவில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். கலையரசி தக்கலை பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டார். நம்பிராஜன் உடல் நிலை பாதிக்கப்பட்டதால் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். சிகிச்சைக்கு பின்னர் அவரும் சிறையில் அடைக்கப்பட உள்ளார்.












Click it and Unblock the Notifications