கணவர் வெளிநாட்டில்.. கன்னியாகுமரி பெண்ணை தேடி வந்த பேஸ்புக் நண்பன்.. குளிர்பானத்தால் வில்லங்கம்
கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே வெளிநாட்டில் வேலை செய்யும் தொழிலாளியின் மனைவியிடம் சமூக வலைத்தளம் மூலம் பழகிய இளைஞர் வீடு தேடி வந்துள்ளார்.. அப்போது அங்கிருந்த குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்த இளைஞர், அதன்பிறகு செய்த செயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பேஸ்புக், இன்ஸ்டாகிராம் பழக்கம் என்பது நிறைய முறை விபரீதமாகவே மாறி உள்ளது. பேஸ்புக், இன்ஸ்டாவில் நட்பாக பழகி, பின்னர் அவர்களுடன் நெருக்கமாகிறார்கள். அப்படி நெருக்கமானவர்களை கண் மூடித்தனமாக பெண்கள் அவர்களிடம் பணம், நகை அல்லது பாலியல் ரீதியாக ஏமாற்றப்படுகிறார்கள்.

இதில் பெண்கள் மட்டுமல்ல, ஆண்களுமே சில பெண்களிடம் ஏமாறுவது அடிக்கடி நடக்கிறது. நேரில் காணாமல் பொய்யான தோற்றத்தை வைத்து ஏமாற்றுவோரிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் கன்னியாகுமரியில் நடந்தது போன்ற ஒரு சம்பவம் நடக்க வாய்ப்பு உள்ளது. என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.
கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் 35 வயது பெண் மீனா (பெயர் மாற்றப்பட்டுள்ளது. மீனாவின் கணவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். மீனாவுக்கும் திருநெல்வேலி மாவட்டம் தச்சநல்லூர் செல்வவிக்னேஷ் நகரை சேர்ந்த சிவராஜ் மகன் சிவசுப்பிரமணியம் என்பவருக்கும் இடையே சமூக வலைத்தளம் மூலம் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது.. அதன்மூலம் இருவரும் தங்களது கருத்துகளை பகிர்ந்து வந்துள்ளார்கள். இந்த பழக்கம் நாளடைவில் நட்பாக மாறி உள்ளது..
இந்த பழக்கத்தை காரணமாக வைத்து சம்பவத்தன்று மீனாவின் வீட்டுக்கு சிவசுப்பிரமணியம் வந்துள்ளார். அப்போது சிவசுப்பிரமணியம் , மீனாவுக்கு குளிர்பானத்தில் மயக்க மாத்திரை கலந்து கொடுத்தாராம். இதை குடித்த சிறிது நேரத்தில் அந்த பெண் மயக்கமடைந்துள்ளார்.
இதையடுத்து சிவசுப்பிரமணியம், பெண்ணின் கழுத்தில் கிடந்த 13.5 பவுன் தங்க தாலி சங்கிலியை திருடி விட்டு கனநிமிடத்தில் தப்பி சென்றார். மயக்கம் தெளிந்ததும் மீனா கண்விழித்து பார்த்தபோது தாலி சங்கிலி காணாமல் போனது தெரிந்திருக்கிறது. பின்னர் தான் சிவசுப்பிரமணியம் பறித்துச் சென்றது உறுதியானது.
ஆனால் சிவசுப்பிரமணியத்திடம் கேட்ட போது அவர் நகையை கொடுக்கவில்லை. எனவே பாதிக்கப்பட்ட பெண் கருங்கல் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகையை பறித்துச் சென்ற சிவசுப்பிரமணியத்தை தீவிரமாக தேடி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications