கன்னியாகுமரியில் மகள் ஓட்டிய பைக்கில் சென்ற போது எதிரே வந்த எமன்.. கண் இமைக்கும் நேரத்தில் சம்பவம்
கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் அருகே உள்ள ஆனையடி சான்றோர்விளையை சேர்ந்த லில்லி ஷோபா என்பவர், தனது மகளான ஜோளி ஜோவா மோளுடன் ஸ்கூட்டரில் பயணித்துள்ளார். நேற்று காலை ஆனையடியில் இருந்து திருவட்டார் நோக்கி வந்து கொண்டிருந்தனர். மாத்தார் பகுதியில் வந்த போது எதிரே ஒரு லாரி வந்தது. அப்போது கண் இமைக்கு நேரத்தில் லாரியில் சிக்கி லில்லி ஷோபா உயிரிழந்தார். அவரது மகள் காயம் அடைந்தார்.
இருசக்கர வாகனத்தில் செல்வோர் மிகவும் கவனமாக செல்ல வேண்டும். ஏனெனில் பெரிய வாகனங்களை ஓட்டுவோர், இருசக்கர வாகன ஓட்டிகளை கவனிக்காமல் லேசாக இடித்தால் கூட மிகப்பெரிய அசம்பாவிதம் நடக்கிறது. சாலைகள் குறுகிய இடங்களில், சாலைகளில் மணல் அதிகம் உள்ள இடங்கள், சாலைகளில் பள்ளம் அதிகம் உள்ள இடங்களில் கவனமாக செல்ல வேண்டும். ஏனெனில் பின்னால் அல்லது முன்னால் வரும் லாரிகள் அல்லது கார்களில் சிக்கும் வாய்ப்பு அதிகமாக உள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் அருகே ஆனையடி சான்றோர்விளையை சேர்ந்த ஜோசப்ராஜ் என்பவர் வெளிநாட்டில் வெல்டராக வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி லில்லி ஷோபா.. 44 வயது ஆகிறது.. இவர்களுக்கு ஜோளி ஜோவா மோள், ஜோமி மோள் என்ற 2 மகள்கள் இருக்கிறார்கள். ஜோளி ஜோவா மோள் எம்.எஸ்சி படித்துவிட்டு மார்த்தாண்டத்தில் உள்ள போட்டி தேர்வு பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்று வருகிறார்.
இந்தநிலையில் ஜனவரி 7ம் தேதி காலை 8.15 மணியளவில் ஜோளி ஜோவா மோளும், தாயார் லில்லி ஷோபாவும் ஸ்கூட்டரில் ஆனையடியில் இருந்து திருவட்டார் நோக்கி சென்று கொண்டிருந்தனர். ஸ்கூட்டரை ஜோளி ஜோவா மோள் ஓட்டி சென்றார். தாயார் அவருக்கு பின்னால் அமர்ந்திருந்தார்.
இவர்களின் இருசக்கர வாகனம் மாத்தார் பகுதியில் வந்து கொண்டிருந்தது. அப்போது எதிரே ஒரு லாரி வந்து கொண்டிருந்தது. எதிர்பாராத விதமாக லாரி, ஸ்கூட்டர் மீது மோதியது. இதில் தாய், மகள் இருவரும் சாலையில் தூக்கி வீசப்பட்டார்கள். கண்ணிமைக்கும் நேரத்தில் லாரியில் சிக்கி லில்லி ஷோபா உயிரிழந்தார். அவரது மகள் ஜோளி ஜோவா மோள் சிறு காயத்துடன் உயிர் தப்பினார்.
தன் கண் முன்னே தாய் இறந்ததை கண்டு அவரது மகள் கண்ணீர் விட்டு கதறினார். விபத்து நடந்ததும் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஜோளி ஜோவா மோளை மீட்டு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து தகவல் அறிந்த திருவட்டார் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து லில்லி ஷோபாவின் உடலை கைப்பற்றி ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து விபத்தை ஏற்படுத்திய லாரியை பறிமுதல் செய்து திருவட்டார் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்தனர்.இதுகுறித்த புகாரின் பேரில் லாரி டிரைவர் மணியன்குழி காக்கச்சல் பகுதியைச் சேர்ந்த முகேஷ்மோன் (32) என்பவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications