ஒரு சிறு தவறால் 20 கோடி பரிசு பணம் அவுட்.. லாட்டரியில் இப்படி மட்டும் தவறு நடக்கவே கூடாது
கன்னியாகுமரி: கேரளாவில் லாட்டரி பரிசு தொகைக்கு 2 பேர் போட்டி போட்ட வழக்கில் லாட்டரி சீட்டு வைத்திருப்பவருக்கே ரூ.20 கோடி வழங்க வேண்டும் என அம்மாநில உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. அது எப்படி சார்.. வாங்கியது ஒருவர் என்கிற நிலையில், கண்டெடுத்தவருக்கு பரிசு தரப்போகிறார்கள் என்று பலரும் கேள்வி எழுப்புகிறார்கள். ஆனால் இதில் சில உண்மைகளை கட்டாயம் நிரூபிக்க வேண்டும். இல்லாவிட்டால் லாட்டரி சீட்டு கைவசம் வைத்து இருந்த அதிர்ஷ்டசாலிக்கு தான் ஜாக்பாட் கிடைக்கும்.
கேரளாவில் கிறிஸ்துமஸ் பம்பர் லாட்டரி குலுக்கல் கடந்த ஜனவரி மாதம் 24-ந் தேதி நடந்தது. இதில் முதல் பரிசு ரூ.20 கோடி எக்ஸ்.சி. 138455 என்ற எண்ணுக்கு கிடைத்தது. இந்த லாட்டரி சீட்டை வைத்திருந்த எர்ணாகுளத்தைச் சேர்ந்த ஒருவர் தனக்கு முதல் பரிசு கிடைத்ததாக கூறி திருவனந்தபுரத்தில் உள்ள லாட்டரி இயக்குனரகத்தில் ஒப்படைத்துள்ளார்.

ஆனால் எர்ணாகுளத்தில் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வரும் ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரியான சஜிமோன் கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில், "நான் மூவாற்றுப்புழாவில் எனது மனைவி வீட்டுக்கு சென்றிருந்தபோது எடுத்த லாட்டரி சீட்டுக்குத்தான் முதல் பரிசு கிடைத்து உள்ளது. எனது டிராவல்ஸ் வாகனத்தில் வைத்திருந்த அந்த சீட்டு எப்படியோ காணாமல் போய் விட்டது. எனவே, பரிசு தொகை ரூ.20 கோடியை எனக்கே தர வேண்டும்' என்று வழக்கு தொடர்ந்தார்.
இது தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய கேரள ஐகோர்ட்டு மாநில லாட்டரி இயக்குனருக்கு நோட்டீசு அனுப்பி இருந்தது. இந்த விவகாரத்தில் கேரள லாட்டரி இயக்குனரகம் அளித்த அறிக்கையை பரிசீலித்த கேரள உயர்நீதிமன்றம். ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி சஜிமோன் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தது. மேலும் லாட்டரி சீட்டு கைவசம் வைத்து இருந்த அதிர்ஷ்டசாலிக்கு முதல் பரிசு ரூ.20 கோடி வழங்க தீர்ப்பளித்திருக்கிறது. இதனை பலரும் விமர்சிக்கிறார்கள். ஏனெனில் சட்டப்படி பார்த்தால், இது ஒரு சிக்கலான விஷயம். லாட்டரி சீட்டு என்பது "Bearer Instrument" என்று சொல்லப்படும். அதாவது, அந்தச் சீட்டு யார் கையில் இருக்கிறதோ, அவரே அதன் உரிமையாளர் எனக் கருதப்படுவார். அப்படித்தான் தீர்ப்பு வந்தள்ளது.
இருப்பினும், நடைமுறையில் உள்ள விதிகள் மற்றும் சிக்கல்கள் இருக்கிறது. லாட்டரி விதிகளின்படி, பரிசு விழுந்த அசல் சீட்டை சமர்ப்பிப்பவருக்குத்தான் பரிசுத் தொகை வழங்கப்படும். சீட்டைத் தொலைத்தவர் புகார் அளித்திருந்தாலும், அசல் சீட்டு இல்லாமல் பரிசுத் தொகையைக் கோர முடியாது. எனவே, கண்டெடுத்தவர் அந்தச் சீட்டைச் சமர்ப்பித்தால் அவருக்கே பரிசு கிடைக்க அதிக வாய்ப்பு இருக்கிறது..
கண்டெடுத்தவருக்கும் சிக்கல்கள் உள்ளன
ஒருவர் தொலைத்த சீட்டை இன்னொருவர் எடுத்துப் பரிசு வாங்க முயற்சிக்கும்போது சில சட்டச் சிக்கல்களும் உண்டு. சீட்டைத் தொலைத்தவர், தன்னிடம் அந்தச் சீட்டின் புகைப்படம் அல்லது வரிசை எண் இருப்பதை வைத்து ஏற்கனவே காவல்துறையில் புகார் அளித்திருந்தால், கண்டெடுத்தவர் அதைப் பணமாக்க முயலும்போது "திருட்டு" அல்லது "முறையற்ற கையகப்படுத்துதல்" என்ற அடிப்படையில் சிக்கலில் மாட்டிக்கொள்வார்.
பெரிய பரிசுத் தொகை (உதாரணமாக ₹20 கோடி) என்றால், லாட்டரித் துறை அந்த நபரின் விவரங்களைச் சரிபார்க்கும். அப்போது அந்தச் சீட்டு எங்கே வாங்கப்பட்டது? எப்போது வாங்கப்பட்டது? போன்ற கேள்விகளுக்கு அவர் பதில் சொல்ல வேண்டியதிருக்கும்.
சட்டப்படி கண்டெடுத்தவர் செய்ய வேண்டியது
இந்திய ஒப்பந்தச் சட்டம் செக்சன் 71 -ன் படி, வழியில் ஒரு பொருளைக் கண்டெடுத்தவர், அதன் உரிமையாளரைக் கண்டுபிடிக்க முயற்சி செய்ய வேண்டும். உரிமையாளர் கிடைக்கவில்லை என்றால் மட்டுமே அவர் அதை வைத்துக்கொள்ள முடியும். ஆனால் லாட்டரியைப் பொறுத்தவரை உரிமையாளரைக் கண்டுபிடிப்பது கடினம் என்பதால், கண்டெடுத்தவரே அதிர்ஷ்டசாலியாக மாறிவிடுகிறார்.
தொலைத்தால் என்ன செய்வது
லாட்டரி சீட்டு வாங்கியவுடன் அதன் பின்பக்கத்தில் உங்கள் பெயர், முகவரி மற்றும் கையெழுத்தைப் போட்டுவிடுவது நல்லது. அப்படிச் செய்தால், வேறு யாராவது அந்தச் சீட்டை எடுத்தாலும் உங்கள் கையெழுத்து இருப்பதால் அவர்கள் எளிதில் பணமாக்க முடியாது. அதேபோல் வாங்கிய உடனே சீட்டைத் தெளிவாக ஒரு புகைப்படம் எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். சட்டபடி தெளிவாக சொல்வது என்றால், லாட்டரித் துறையைப் பொறுத்தவரை "யாரிடம் சீட்டு இருக்கிறதோ, அவரே வெற்றியாளர்". சீட்டைத் தொலைத்தவர் அதற்கான ஆதாரங்களுடன் (புகைப்படம், வாங்கிய கடையின் ரசீது) உடனடியாகத் தடுத்தால் ஒழிய, கண்டெடுத்தவருக்கே அந்தப் பரிசு போய்சேரும். அப்படித்தான் கேரளாவில் லாட்டரி சீட்டுக்கான பரிசு போயிருக்கிறது.












Click it and Unblock the Notifications