கன்னியாகுமரியில் திருடுபோன வீட்டில் ட்விஸ்ட்.. மாட்டிவிட்ட திருடன்.. ராணுவ வீரரின் மனைவி மீது வழக்கு
கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்கோடு அருகே மணலி பகுதியை சேர்ந்த அஜிகுமார் என்பவர் ராணுவத்தில் சிறப்பு அதிகாரியாக அந்தமானில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி சுபலலிதா.. அண்மையில் விடுமுறையை கொண்டாட ஹைதராபாத் போய்விட்ட நிலையில், வீடு புகுந்த திருடன் திருடிவிட்டு போனதாக கூறப்படுகிறது. இதில் சுபலலிதா 22 பவுன் தங்க நகை கொள்ள போனதாக புகார் அளித்தார். ஆனால் கொள்ளையனோ ரூ.7 ஆயிரம் மட்டுமே திருடினேன் என்று கூறியதால், பொய் புகார் அம்பலத்திற்கு வந்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்கோடு அருகே மணலி பகுதியை சேர்ந்த அஜிகுமார் என்பவர் ராணுவத்தில் சிறப்பு அதிகாரியாக அந்தமானில் வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி சுபலலிதாவுக்கு 44 வயது ஆகிறது. சுபலலிதா தனது மகனுடன் மணலி வீட்டில் வசித்து வந்துள்ளார் அண்மையில் பொங்கல் விடுமுறையை கொண்டாட ஐதராபாத்தில் உள்ள உறவினர் வீட்டில் கொண்டாடுவதற்காக கடந்த 11-ந் தேதி சுபலலிதா வீட்டை பூட்டி விட்டு தனது மகனுடன் சென்றுவிட்டார். அங்கு பொங்கல் பண்டிகையை உறவினர்களுடன் கொண்டாடி விட்டு கடந்த 19-ந் தேதி அதிகாலை வீட்டிற்கு வந்துள்ளார்.

அங்கு வீட்டின் முன்பக்க கதவு கடப்பாரையால் உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததை கண்டார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த சுபலலிதா மற்றும் மகன் ஆகியோர் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது பீரோ திறக்கப்பட்டு அதில் வைக்கப்பட்டிருந்த பொருட்கள் அனைத்தும் வெளியே சிதறி கிடந்திருக்கிறது. இதுகுறித்து சுபலலிதா போலீசில் புகார் அளித்தார். அதில், வீட்டின் பீரோவில் வைக்கப்பட்டிருந்த 22 பவுன் நகை மற்றும் ரூ.12 ஆயிரம் திருடப்பட்டதாக கூறினார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராணுவ அதிகாரி வீட்டில் திருடிய கொள்ளையனை பிடிக்க தனிப்படை அமைத்தனர்.
இந்த தனிப்படையினர் பிரபல கொள்ளையனான கேரள மாநிலம் பூவார் பகுதியை சேர்ந்த 28 வயதாகும் வர்க்கீஸ் என்பவரை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர் ராணுவ அதிகாரி வீட்டில் திருடியதை ஒப்புக் கொண்டார். ஆனால் அந்த கொள்ளையன், அங்கு ரூ.7 ஆயிரம் மட்டுமே திருடினேன், நகை எதுவும் இல்லை என திட்டவட்டமாக கூறினார்.
ராணுவ அதிகாரி வீட்டில் அதிக பணமும், நகையும் இருக்கும் என்ற ஆசையில் வீடு புகுந்து திருட சென்றதாகும்.. ஆனால் ரூ.7 ஆயிரம் மட்டுமே கிடைத்ததால் ஏமாற்றம் அடைந்தேன். அந்த பணமும் 2 நாட்களில் செலவாகி விட்டது என வர்க்கீஸ் கூறியிருக்கிறார். இதனால் போலீசார் குழப்பம் அடைந்தனர். முதலில் கொள்ளையன் தான் ஏமாற்றுகிறான் என்ற நோக்கத்தில் இருந்த போலீசார் விசாரித்தனர். கொள்ளையன் திட்டவட்டமாக கூறவே, சுபலலிதா, திருட்டை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு 22 பவுன் நகையும் காணாமல் போனதாக நாடகமாடியிருக்கலாம் என்ற சந்தேகம் போலீசாருக்கு எழுந்தது.
ஆனால் சுபலலிதாவிடம் கொள்ளையன் தெரிவித்த வாக்குமூலத்தை பற்றி நேரடியாக கேட்கவில்லை.. திருட்டு போன நகையின் அடையாளத்தை பற்றி கேள்விகளை கேட்டனர். அதில் அவர் முன்னுக்கு பின் முரணான தகவலை கூற, போலீசார் கிடுக்கிப்பிடி கேள்விகளை கேட்டனர். ஒரு கட்டத்தில் சுபலலிதா, வீட்டில் பணம் மட்டும் தான் திருடு போனது, ஆனால் 22 பவுன் நகையும் திருடப்பட்டதாக பொய் புகார் அளித்ததை ஒப்புக்கொண்டார். எதற்காக இப்படி பொய் புகார் கொடுத்தார் என்று விசாரித்து வருகிறார்கள். அதேநேரம் போலீசார் சுபலலிதா மீது பொய் புகார் அளித்ததாக வழக்குப்பதிவு செய்துள்ளனர். கொள்ளையன் வர்க்கீஸையும் போலீசார் கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications