பாஜகவினருக்கு புராண இதிகாச கதைகளை கூறி பாடம் எடுத்த கார்த்தி சிதம்பரம்: மக்களவை கலகல

Subscribe to Oneindia Tamil

காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம் கடந்த வாரம் செயற்கை கருத்தரிப்பு மசோதாவின் மீதான விவாதத்தில் செயற்கை கருத்தரிப்பு குறித்த மத்திய அரசின் பார்வை எவ்வளவு தவறாக உள்ளது, என இந்து புராணங்களை மேற்கோள் காட்டும் பாஜகவினருக்கே இந்து புராணங்களில் உள்ள உதாரணங்களை காட்டி பாடம் எடுத்தது கலகலப்பாக இருந்தது. அதே நேரம் அவரது வாதத்திறமையைக்கண்டு பாஜகவினர் வாயடைத்துப்போனதை காண முடிந்தது.

மத்திய அரசின் செயற்கை கருத்தரிப்பு திருத்த மசோதா

மத்திய அரசின் செயற்கை கருத்தரிப்பு திருத்த மசோதா

நாடாளுமன்றத்தில் குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இதில் கடந்த வாரம் மக்களவையில், செயற்கை முறை கருத்தரித்தல் தொழில்நுட்ப ஒழுங்குபடுத்துதல் மசோதா 2020 தாக்கல் செய்யப்பட்டது.

இச்சட்டம் செயற்கை கருவுறுதல், அது சம்பந்தமான மையங்கள், கரு முட்டை/விந்து வங்கிகளுக்குக் குறைந்தபட்ச தரநிலைகள் மற்றும் நடத்தை விதிகளை அமைக்க வழிவகுக்கிறது. செயற்கை கருத்தரிப்பு மசோதாவில் திருமணமான பென்கள் மட்டுமே கருமுட்டை தானம் செய்ய முடியும், கருமுட்டை, விந்தணு செய்பவர்கள் விவரம் ரகசியம் காக்கப்படும் என்று சொல்லும் அதே நேரத்தில் ஆதார் அட்டைகளை கேட்பது குறித்து கார்த்தி சிதம்பரம் கேள்வி எழுப்பினார்.

மசோதாவை அக்கு அக்காக பிரித்த கார்த்தி

மசோதாவை அக்கு அக்காக பிரித்த கார்த்தி

திருமணம் ஆனவர்கள் மட்டுமே இந்த முறையை பெற முடியும் என்பது தனி நபர்கள், திருமணமாகாதவர்கள், திருமணம் செய்யாமல் வாழ்பவர்கள், மூன்றாம் பாலினத்தவர் உள்ளிட்ட பலருக்கும் மறுக்கப்படும் உரிமை என்று சாடினார். இந்தியாவில் குழந்தை பெற்றுக் கொள்ள முடியாத பலரும் கருத்தரிப்பு தொழில்நுட்பம் மூலம் குழந்தையைப் பெற்றுக்கொள்கின்றனர், எனவே, இந்த தொழில்நுட்பம் அனைவருக்கும் கிடைக்கும் வகையிலும், முறைப்படுத்தப்பட வேண்டும், தற்போது கொண்டுவரப்பட்டுள்ள மசோதா காலனி அடிமை முறையை பிரதிபலிக்கும், தனி நபர் உரிமைக்கு எதிரானது என புள்ளி விவரங்களோடு வாதம் வைத்தார்.

 புலிக்கு பிறந்தது பூனையாகாது

புலிக்கு பிறந்தது பூனையாகாது

இதில் அவர் வைத்த வாதங்கள் அவரது தந்தையின் வாதங்களைப்போல் கூர்முனையாக தைத்ததைக் காணமுடிந்தது. புலிக்கு பிறந்தது பூனையாகாது என்பதாக உள்ளதாக சமூக வலைதளத்தில் வீடியோவை காண்பவர்கள் பதிவிட்டு பராட்டியுள்ளதை காண முடிகிறது.

"தனது வாதத்துக்கு ஆதாரமாக புராண இதிகாசங்களிலிருந்து அவர் ஆதாரத்தை எடுத்துக்காட்டி பேசியது எதையும் பயன்படுத்தக்கூடிய வல்லமை எங்களுக்கும் உண்டு என்பதை உணர்த்துவதாக இருந்தது. எதற்கெடுத்தாலும் புராண இதிகாசங்களை உதாரணம் காட்டும் பாஜகவுக்கே பாடம் எடுத்தார் கார்த்தி சிதம்பரம்" என நெட்டிசன்கள் வலைதளத்தில் பதிவிட்டு பாராட்டி வருகின்றனர்.

புராண இதிகாசங்களை உதாரணம் காட்டி பாடம் எடுத்த கார்த்தி

புராண இதிகாசங்களை உதாரணம் காட்டி பாடம் எடுத்த கார்த்தி

முதலில் தனது வாதத்தை ஆரம்பித்த கார்த்தி சிதம்பரம் தனக்கு பேச வாய்ப்பளித்த கட்சித்தலைவர் சோனியாவுக்கு நன்றி தெரிவித்தார். பின்னர் மசோதா மீது விவாதத்தை தொடங்கிய அவர் திடீரென ரூட் மாறி தான் புராண, இதிகாசங்கள், தத்துவங்களை மிகவும் போற்றுபவன் எனப் பேசத்தொடங்கினார். தான் வளர்ந்தபோது அமர்சித்ர கதைகளை கேட்டு வளர்ந்தேன் என பேச தொடங்கினார். செயற்கை கருத்தரிப்பு குறித்து பேசச்சொன்னால் இவர் புராண இதிகாசங்களை பேசுகிறாரே என பலரும் கவனிக்கத்தொடங்கினர்.

பாஜகவின் உதாரணங்களையே பாஜகவுக்கு காட்டி பேச்சு

பாஜகவின் உதாரணங்களையே பாஜகவுக்கு காட்டி பேச்சு

உங்கள் அமைச்சர்கள் புராணங்களில் வரும் புஷ்பக விமானங்களைப்பற்றி உதாரணம் காட்டியுள்ளீர்கள். இந்த அரசு புராண இதிகாசங்களில் இருந்து பல உதாரணங்களை பின்பற்றும் அரசு. மருத்துவர்கள் மாநாட்டில் பேசிய நமது பிரதமர் யானையின் தலை மனித உடலில் பொருத்தப்பட்டது குறித்து விநாயகரை உதாரணம் காட்டி பேசியுள்ளார். நான் பிறந்தது பிள்ளையார்பட்டி, நான் விநாயகரை மிகவும் விரும்புபவன், பிள்ளையார்பட்டி விநாயகர் பிரசித்தி பெற்றவர். நான் விநாயகரைத் தினமும் வணக்குபவன்.

மஹாபாரதம் பாத்திரங்கள் பிறப்பு உதாரணம்

மஹாபாரதம் பாத்திரங்கள் பிறப்பு உதாரணம்

நமது புராண இதிகாசங்களில் வழக்கத்திற்கு மாறான பிறப்புகள் (unconventional birth) பல இடங்களில் பதிவாக உள்ளது எனக்கூறிய அவர் மகாபாரதத்தில் கூட கௌரவர்கள் இப்படி தான் பிறந்தனர். இதை நாம் டெஸ்ட் டியூப் குழந்தைகளின் ஒரு துவக்க புள்ளியாகக் கருதலாம். இந்த அரசு கூட நமது புராண இதிகாசங்களில் இருந்தே பல உதாரணங்களை எடுக்கிறது. மஹா பாரதத்தில் தர்மர், அர்ஜுனர், பீமன், நகுலன், சகாதேவன் பிறப்பில் உள்ள விஷயங்களை புராணத்தை காட்டி பேசினார்.

கேரளாவில் உள்ள உலக புகழ்பெற்ற ஐயப்ப கடவுள் சிவன் மற்றும் விஷ்ணு ஆகியோருக்கு பிறந்தவராகவே கூறப்பட்டதை சுட்டிக்காட்டி பேசிய அவர் தன்னை உதாரணமாக காட்டினார். என் பெயர் கார்த்தி முருகனின் ஒரு பெயரில் ஒன்று எனக்கூறிய அவர் முருகன் சிவனின் நெற்றிக் கண்ணில் இருந்து பிறந்தவர் தான் என்று கூறப்படுவதை உதாரணமாக காட்டி பேசினார்.

 காலனி ஆதிக்க மனநிலை

காலனி ஆதிக்க மனநிலை

மத்திய அரசு இந்து புராண, இதிகாசங்களிலிருந்து ஆதாரங்களை, உதாரணங்களை கூறி பின்பற்றுவதாக கூறுகிறது ஆனால் நமது புராணத்தில் பல உதாரணங்கள் கருத்தரிப்பு குறித்து இருக்கும்போது இந்தச் சட்டம் எந்தவொரு இந்து புராணங்களையும் பின்பற்றி உருவாக்கப்பட்டதாகத் தெரியவில்லை. மாறாகக் கடுமையான காலனித்துவ ஆதிக்க மனநிலை கொண்ட ஒருவரிடம் இருந்தே இச்சட்டம் வந்துள்ளதாகத் தெரிகிறது என ஒரே போடாக போட்டு பல ஆதாரங்களை எடுத்து வைத்தார்.

மக்களவையை கட்டிப்போட்ட கார்த்தி சிதம்பரம்

மக்களவையை கட்டிப்போட்ட கார்த்தி சிதம்பரம்

பாஜகவிற்கு பாஜக பாணியிலேயே சென்று மசோதாவின் நோக்கம் சிதைவதையும், அதற்கு சரியான பாதை புராண இதிகாசங்களிலேயே இருக்கிறது என்பதையும் ஆதாரத்துடன் அதே நேரம் சிறிதும் பிறழாமல் சரியாக வாதத்தை வைத்து உடனடியாக மசோதா மீதான விவாதத்துக்கு திரும்பி அது தனிநபர் உரிமையை எப்படி மீறுகிறது என்பதையும் கார்த்திச் சிதம்பரம் விளக்கி கூறியது பலத்த வரவேற்பை சமூக வலைதளங்களில் பெற்று வருகிறது. அவர் பேசி முடிக்கும் வரை அவையும் அமைதியாக அவரது வாதத்தை கவனித்தது சிறப்பான ஒன்றாக இருந்தது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+