தந்தை பெரியாரே காரணம்.. துருக்கி அஹமதுவை மணம் முடித்த கரூர் பிரியங்கா நெகிழ்ச்சி! கலகல திருமணம்
கரூர்: துருக்கியை சேர்ந்த ஆணை காதலித்து திருமணம் செய்துகொண்ட கரூரை சேர்ந்த பெண், இந்த திருமணம் நடைபெற தந்தை பெரியாரே காரணம் என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்து உள்ளார்.
கரூர் பசுபதிராஜபாளையம் பகுதியை சேர்ந்தவர் தங்கராஜ். இவருக்கு பிரியங்கா என்ற மகள் இருக்கிறார். பி.டெக் படித்து இருக்கும் இவர், டெல்லியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்து இருக்கிறார். அங்கு துருக்கியை சேர்ந்த அஹமத் காமில் கயான் என்ற எம்.டெக் பட்டதாரி அங்கு தொழில் செய்து வந்து இருக்கிறார்.

இவருடன் பிரியங்காவுக்கு பழக்கம் ஏற்பட்டு இருக்கிறது. ஒரு கட்டத்தில் இருவரும் ஒருவரை ஒருவர் காதலிக்க தொடங்கினார்கள். திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்த இவர்களுக்கு தேச வேறுபாடும், மத வேறுபாடும் தடையாக தெரியவில்லை. காரணம் இருவரின் பெற்றோரும் அப்படி.
பிரியங்காவின் தந்தை ஒரு பெரியார்வாதி. துருக்கியை சேர்ந்த அஹமதுவின் பெற்றோரும் ஆட்சேபனை தெரிவிக்காமல் திருமணத்துக்கு சம்மதம் தெரிவித்தனர். இருவீட்டர் சம்மதத்தை தொடர்ந்து திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது. கரூர் பசுபதிபாளையத்தில் உள்ள மணமகள் பிரியங்காவின் வீட்டில் திருமண ஏற்பாடுகள் தடபுடலாக நடைபெற்றது.

நேற்று இந்த நடைபெற்ற திருமண விழாவில் மணமகன் அஹமது காமில் பட்டு வேட்டி, பட்டு சட்டை அணிந்து வந்திருந்தார். இந்த திருமணத்தை காண கரூருக்கு துருக்கியில் இருந்து அஹமது காமிலின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் வருகை தந்தார்கள். தமிழ் முறைப்படி மாப்பிள்ளை அழைப்பு, கன்னிகாதானம் உள்ளிட்ட சடங்குகளும் நடந்தன.
மணமகனும் மணமகளும் மாலை அணிவிக்கும்போது குறும்புத்தனமாக விளையாடியது போன்ற தமிழ் திருமணங்களில் நடைபெறும் நிகழ்வுகளை வியப்போடு துருக்கியை சேர்ந்த பெற்றோர் பார்த்து ரசித்தார்கள். மாப்பிள்ளை குடும்பத்தினர் இந்த திருமண சடங்குகள் குறித்து புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக அவர்களுக்கு ஆங்கிலத்தில் விளக்கம் அளிக்கப்பட்டது.

அனைத்தையும் ஆர்வத்தோடு கேட்டு ரசித்த பெற்றோர் துருக்கியில் இருந்து திருமண நிகழ்வுக்கு வர முடியாத உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு வீடியோ கால் மூலமாக திருமண நிகழ்வுகளை லைவ் செய்தனர். இந்த திருமணத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.
திருமணத்துக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த மணமகள் பிரியங்கா, "அவருடைய குடும்பத்தில் சொன்ன உடனே 10 நிமிடத்தில் திருமணத்துக்கு சம்மதம் தெரிவித்தார்கள். வீடியோ கால் மூலம் அனைத்தையும் பேசி முடித்தோம். எங்கள் குடும்பத்தில் ஒரு வாரம் யோசித்து சம்மதம் தெரிவித்தார்கள்.
நேரில் பார்த்தார்கள். அறிமுகமாகி பேசி பழகிய பின் ஒத்துக்கொண்டார்கள். என்னுடைய அப்பா தந்தை பெரியாரின் கொள்கைகளை பின்பற்றுவதால் எந்த தடையும் ஏற்படவில்லை." என்றார். சாதி, மதம், இனம், மொழி கடந்து திருமணம் செய்வதால் இங்கு ஆணவக் கொலை போன்றவை நடைபெறும் நிலையில் மதம், இனம், மொழி, தேசம் கடந்து பெரியாரின் கொள்கைகளால் நடந்த இந்த திருமணம் பலரை வியப்பில் ஆழ்த்தி உள்ளது.












Click it and Unblock the Notifications