சொந்த ஊர்ல ஜெயிக்க முடியாத அண்ணாமலை.. வெளியூரில் வெல்ல போகிறாரா.. சரமாரியாக விளாசிய ஜோதிமணி
கரூர்: கரூர் தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்த ஜோதிமணி, பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை மிகக் கடுமையாகச் சாடினார். கரூரை சேர்ந்த அவர் ஏன் கோவையில் போட்டியிட வேண்டும் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
தமிழ்நாட்டில் இந்த முறை ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் 19ஆம் தேதி லோக்சபா தேர்தல் நடக்கிறது. திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு இந்த முறை புதுச்சேரி சேர்த்து 10 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

கரூர் தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், அங்கே ஜோதிமணி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அதன்படி கரூர் லோக்சபா தொகுதியில் போட்டியிடும்
காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி நேற்று வேட்பு மனுத்தாக்கல் செய்தார்.
தாக்கு: தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "இப்போது தமிழ்நாடு பாஜக தலைவராக இருப்பவர் அண்ணாமலை.. அவரும் இந்த கரூர் லோக்சபா தொகுதிக்கு உட்பட்டவர் தான். கடந்த முறை நடந்த சட்டசபைத் தேர்தலில் கூட அண்ணாமலை கரூர் தொகுதிக்குட்பட்ட அரவக்குறிச்சி சட்டசபை தொகுதியில் தான் போட்டியிட்டார். இருப்பினும், அவர் தோல்வியைத் தழுவினார்.
அண்ணாமலை போகும் இடமெல்லாம் தமிழ்நாட்டில் பாஜக வளர்ந்துவிட்டது எனக் கூறி வருகிறார். அப்படி வளர்ந்து இருக்கிறது என்றால் அவர் கரூரிலேயே போட்டியிடலாமே.. அவர் ஏன் கரூரில் அந்த வெற்றி கிடைக்காது எனப் பயப்படுகிறார்? அண்ணாமலை கரூரில் போட்டியிட்டால் நிச்சயம் பாஜகவுக்கு டெபாசிட் கூட போய்விடும்.. இது அவருக்கும் தெரியும். இதன் காரணமாகவே அண்ணாமலை இங்கே என்னை எதிர்த்து நிற்கப் பயந்துவிட்டார்.
தோல்விக்குப் பயந்து: இந்தியா கூட்டணி மற்றும் காங்கிரஸை எதிர்த்துப் போட்டியிடப் பயந்த அவர் கோவைக்கு ஓடிப் போய்விட்டார். கோவை தொகுதியிலும் அண்ணாமலை நிச்சயம் தோற்கடிக்கப்படுவார். அதில் சந்தேகமே இல்லை. கரூரில் இப்போது காங்கிரஸை எதிர்த்து நிற்க ஆள் இல்லாத சூழல் தான் நிலவுகிறது" என்று அவர் தெரிவித்தார். தொடர்ந்து தனது செயல்பாடுகள் குறித்துப் பேசிய அவர், "நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி வரிசையில் இருந்தாலும் சிறப்பாகச் செயல்பட்டு இருக்கிறோம்.
கடந்த 20 ஆண்டுகளில் கரூரில் ஏகப்பட்ட நலத்திட்டங்களை மேற்கொண்டுள்ளேன். நாட்டிலேயே வேறு எங்கும் இல்லாத அளவுக்குக் கல்விக்கு 51 சதவீதம் நிதி ஒதுக்கி 100 அரசுப் பள்ளிகளை நவீனப்படுத்தியுள்ளேன். ஸ்மார்ட் கிளாஸ் உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்தி இருக்கிறோம். இதன் மூலம் ஏழை குழந்தைகளுக்கும் மிகச் சிறந்த கல்வி கிடைப்பதை உறுதி செய்துள்ளோம்.
மேலும், கரூரில் தேசிய நெடுஞ்சாலைகளில் மொத்தம் 29 இடங்கள் அதிக விபத்துகள் நடக்கும் இடங்களாக இருக்கிறது. இதனால் ஒவ்வொரு ஆண்டும் பல உயிரிழப்புகள் ஏற்பட்டன. எனக்கு முன்பு இருந்த எம்பி இந்த விபத்துகளைத் தடுக்க எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால், நான் வந்த பிறகு விபத்துகள் அதிகம் நடக்கும் பகுதிகளில் உயர்மட்ட பாலங்கள் அமைத்தோம்.
இப்போது மக்கள் அன்பும் பேராதரவும் எங்களுக்கு இருக்கிறது. ராகுல் காந்தி பாரத் ஜோடோ யாத்திரை தமிழ்நாட்டில் இருந்துதான் தொடங்கியது. தமிழக மக்களும் இந்தியா கூட்டணி மிகப் பெரிய வெற்றியை நிச்சயம் பெற்றுத் தருவார்கள். கரூரில் போன முறையே பொதுமக்கள் என்னை 4.20 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்தார்கள். நிச்சயம் இந்த முறையும் அதே அளவுக்குப் பெரிய வெற்றியைத் தருவார்கள்" என்று அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications