கரூரில் அரசியல் பயிற்சிப் பட்டறை! 3 நாட்களில் 1,500 விண்ணப்பங்கள்!புதிய முயற்சியில் ஜோதிமணி எம்.பி.!
கரூர்: அரசியல் மற்றும் களப்பணியில் ஆர்வம் உள்ள இளைஞர்களுக்கு கரூர் எம்.பி. ஜோதிமணி தனது முயற்சியால் பயிற்சி முகாம் நடத்தி வருகிறார்.
ஒரு மாதம், 3 மாதங்கள், 6 மாதங்கள், 12 மாதங்கள் என பணிக்காலத்தை வரையறுத்துள்ள அவர், அதில் எதை வேண்டுமானாலும் பயிற்சி பட்டறைக்கு வரும் இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் தேர்வு செய்து கொள்ளலாம் என்ற ஆப்ஷனையும் அளித்திருக்கிறார்.
உணவு மற்றும் தங்குமிடம் வசதியுடன் இந்த அரசியல் பயிற்சி பட்டறையை நடத்துகிறார் காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி.

கரூர் தொகுதி
கரூர் மக்களவை தொகுதி காங்கிரஸ் உறுப்பினர் ஜோதிமணி, எந்த மக்கள் பிரதிநிதியும் முன்னெடுக்காத ஒரு காரியத்தை செய்து வருகிறார். அதாவது நாடாளுமன்ற உறுப்பினர் செயல்பாடுகளில் பணியாற்ற விரும்பும் இளைஞர் பட்டாளத்திற்கு பயிற்சியின் மூலம் தன்னுடன் இணைந்து தொகுதிப் பணியாற்ற ஒரு வாய்ப்பு ஏற்படுத்தி கொடுத்திருக்கிறார். LINC (Leading india towards change) தலைப்பில் ஜோதிமணி தொடங்கியிருக்கும் இந்த புதிய முயற்சிக்கு காங்கிரஸ் மேலிடத்தில் இருந்து பாசிட்டிவ் ரியாக்ஷன் வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இரண்டரை ஆண்டுகாலம்
இன்னும் இரண்டரை ஆண்டில் பொதுத்தேர்தல் வரவுள்ளதால் இப்போதே ஜோதிமணி மீண்டும் கரூரில் களம் காண்பதற்கான அடித்தளத்தை அமைக்கத் தொடங்கிவிட்டது போல் தெரிவிக்கப்படுகிறது. அதன் விளைவாகத் தான் இப்போதே தனக்கான ஆதரவு வட்டத்தை பெருக்கும் வகையில் இந்த அரசியல் பயிற்சி பட்டறையையை அவர் கையில் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

என்ன தலைப்புகள்?
பெண்கள் முன்னேற்றம், மாற்றுத்திறனாளிகள் நலன், குழந்தைகள் நலன், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, நீர் மேலாண்மை, கல்வி, வேலைவாய்ப்பு, திறன் மேம்பாடு, இளைஞர் நலன் என பல்வேறு தலைப்புகளில் அரசியல் பயிற்சி பட்டறைகள் நடைபெறவுள்ளன. இதனிடையே இன்று நடைபெற்ற துவக்க விழாவில், காங்கிரஸ் பிரமுகரும் முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரியுமான சசிகாந்த் செந்தில், ஊடகவியலாளர் செந்தில்வேல், தொழிலதிபர் குமரவேல், காங்கிரஸ் நிர்வாகி கிரிவெல்ல பிரசாத் உள்ளிட்டோர் சிறப்பு சொற்பொழிவாளர்களாக கலந்துகொண்டனர்.

ஜோதிமணி பதிவு
இதனிடையே இது தொடர்பாக பதிவு வெளியிட்டுள்ள ஜோதிமணி எம்.பி., புத்தாண்டின் புதியதொரு தொடக்கம் இது என்றும் இண்டர்ன்ஷிப் பற்றி அறிவிக்கப்பட்ட 3 நாட்களில் 1,500 விண்ணப்பங்கள் வந்து குவிந்துள்ளதாகவும் தெரிவித்திருக்கிறார். தனக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் பாராட்டு மழை பொழிந்ததாகவும் தமிழகம் புதிய முயற்சிக்கு தயாராக இருப்பதை உணர்ந்ததாகவும் தெரிவித்திருக்கிறார்.












Click it and Unblock the Notifications