மாநிலங்களே இருக்கக்கூடாது என பாஜக நகர்கிறது.. தமிழ்நாட்டை ஒருநாளும் தலைகுனிய விடமாட்டோம்.. ஸ்டாலின்
சென்னை: கரூர் திமுக முப்பெரும் விழாவில் பேசிய ஸ்டாலின், தமிழ்நாட்டை ஒருநாளும் தலைகுனிய விடமாட்டோம் என்று கூறினார். மேலும், பாஜகவை இப்போதே நாம் தடுத்து நிறுத்தவில்லை என்றால், அடுத்து அவர்கள் மாநிலங்களே இருக்கக்கூடாது என்பதை நோக்கித்தான் நகருவார்கள். ஏற்கனவே, காஷ்மீரில் அதற்கு டிரையல் பார்த்துவிட்டார்கள். இப்போதும் உரிமைப்போரை நடத்தி நாட்டைக் காப்பாற்ற வேண்டிய வரலாற்று கடமை நமக்கு இருக்கிறது என்றும் தெரிவித்தார்.
திமுக முப்பெரும் விழா நேற்று கரூர் கோடங்கிப்பட்டியில் நடந்தது. அண்ணா பிறந்த நாள், பெரியார் பிறந்த நாள் மற்றும் திமுக தொடங்கப்பட்ட நாள் ஆகிய முப்பெரும் விழா திமுக தொண்டர்களின் உற்சாகத்துடன் கோலாகலமாக நடந்தது.

ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு
விழாவில் பங்கேற்ற முதல்வர் ஸ்டாலினுக்கு வழி நெடுகிலும் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பொதுக்கூட்டத்தின் நடுவே திறந்த வேனில் வந்த ஸ்டாலினுக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். தொடர்ந்து பெரியார், அண்ணா விருது உள்ளிட்ட விருதுகளுக்கு தேர்வானவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் விருதுகளை வழங்கி கவுரவித்தார்.
யார் யாருக்கு விருது
* முதலில் திமுக துணை பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற திமுக குழு தலைவருமான கனிமொழி எம்பிக்கு முதல்வர் ஸ்டாலின் பெரியார் விருதை வழங்கினார்.
* பாளையங்கோட்டை நகர்மன்ற முன்னாள் தலைவரும், திமுக தணிக்கைக்குழு முன்னாள் உறுப்பினருமான சுப. சீதாராமனுக்கு அண்ணா விருது வழங்கி கவுரவித்தார்.
முரசொலி செல்வம் விருது
* சென்னை அண்ணாநகர் பகுதி திமுக முன்னாள் செயலாளரும், அண்ணாநகர் தொகுதி முன்னாள் எம்எல்ஏவுமான சோ. மா ராமச்சந்திரனுக்கு கலைஞர் விருது வழங்கி கவுரவித்தார்.
* முரசொலி அறக்கட்டளை சார்பில், முதன் முறையாக முரசொலி செல்வம் விருது அறிவிக்கப்பட்டது. இந்த விருதினை மூத்த பத்திரிகையாளர் ஏ.எஸ். பன்னீர்செல்வத்துக்கு ஸ்டாலின் வழங்கி கவுரவித்தார். தொடர்ந்து ஸ்டாலின் பேசியதாவது:-
இடையூறு செய்யும் காவிக்கொள்கை
உங்களைப் போன்ற உடன்பிறப்புகள் இருக்கும் வரை எந்தக் கொம்பனாலும் திமுகவை தோற்கடிக்க முடியாது. அதற்காகத்தான் 'ஓரணியில் தமிழ்நாடு' என்று ஒரு பிரசாரத்தை முன்னெடுத்து ஒரு கோடிக்கும் அதிகமான குடும்பங்களை இயக்கத்தில் ஒன்றிணைத்திருக்கிறோம். தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு இடையூறு செய்வது காவிக்கொள்கை என்று மக்களுக்கு நன்றாகத் தெரியும். ஈராயிரம் ஆண்டுகளாக அந்தக் கொள்கைக்கு எதிராக திராவிடம் போராடிக்கொண்டு இருக்கிறது.
மகளிர் உரிமைத்தொகைத் திட்டம் உள்ளிட்ட திட்டங்களால் கோடிக்கணக்கான மக்கள் பயன்பெறுகிறார்கள். மத்திய பாஜக அரசின் மக்கள் விரோதச் செயல்பாடுகள் அனைத்தையும் துணிச்சலாக நேருக்கு நேராக எதிர்கொள்கிறோம். கவர்னரை வைத்து முடக்க நினைத்தால், சட்டரீதியாக அதை எதிர்த்து நிற்கிறோம். இப்படி, போராடிப் போராடி தமிழர்களை தலை நிமிர்த்துகிறோம். இப்படி தலைநிமிர்ந்த தமிழ்நாட்டை ஒருநாளும் தலைகுனிய விடமாட்டோம்.
மாநிலங்களே இருக்கக்கூடாது
பாஜகவை இப்போதே நாம் தடுத்து நிறுத்தவில்லை என்றால், அடுத்து அவர்கள் மாநிலங்களே இருக்கக்கூடாது என்பதை நோக்கித்தான் நகருவார்கள். ஏற்கனவே, காஷ்மீரில் அதற்கு டிரையல் பார்த்துவிட்டார்கள். இப்போதும் உரிமைப்போரை நடத்தி நாட்டைக் காப்பாற்ற வேண்டிய வரலாற்று கடமை நமக்கு இருக்கிறது.
இதை செய்யவில்லை என்றால் நம்முடைய குழந்தைகளின் எதிர்காலம் என்ன ஆகும்? இப்போது நாம் முன்னெடுக்கும் போராட்டம் ஒரு கட்சிக்கு, முதவர் பதவி, ஆட்சிக்கான போராட்டம் அல்ல. இது தமிழ்நாட்டுக்கான போராட்டம். இதற்கு தமிழ்நாடு முழுவதும் ஓரணியில் திரள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications