போலீஸ் எங்களை மிரட்டுறாங்க..ஒருத்தனா இப்படி செய்திருக்க முடியாது! கரூர் மாணவியின் தந்தை பகீர் புகார்
கரூர்: கரூரில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவியின் கழுத்தை அதே பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவன் அறுத்த கொடூர சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் தனது மகளை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் காவல்துறையினரின் நடவடிக்கை குற்றவாளிக்கு சாதகமாக இருப்பதாக பாதிக்கப்பட்ட மாணவியின் தந்தை பரபரப்பு புகார் கூறியுள்ளார்.
கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் அருகே 14 வயது மாணவி ஒருவர் அப்பகுதியில் உள்ள பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். அவருக்கும் அதே பள்ளியில் 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது சமூக வலைதளமான இன்ஸ்டாகிராம் மூலம் அவர்கள் பேசி வந்திருக்கின்றனர்.

இந்நிலையில் நேற்று அந்த மாணவியை சந்திக்க வேண்டுமென அந்த மாணவன் இன்ஸ்டாகிராம் மூலம் அழைத்துள்ளார். இதை அடுத்து அந்த மாணவி மாணவனை பார்க்க சென்றார். அப்போது அந்த மாணவர் மாணவியின் கழுத்தை அறுத்ததாக கூறப்படுகிறது.
ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய அவரை உறவினர்கள் மீட்டு திண்டுக்கல்லில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த பாலவிடுதி போலீசார் மாணவியின் கழுத்தை அறுத்ததாக கூறப்படும் மாணவனை அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவி மயக்கம் அடைந்திருக்கும் நிலையில் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகவும் சில தொலைக்காட்சிகளில் செய்தி வெளியானது.
தொடர்ந்து தொலைக்காட்சிகளில் தவறான செய்தி வெளியிடப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்திருந்தது. அதில்," மாணவி அந்த மாணவனைப்பற்றி இழிவாக பேசியதாக கோபம் கொண்டு இந்த செயலை அந்த மாணவன் செய்துள்ளதாக தெரிகிறது. மேற்படி மாணவன் கைது செய்யப்பட்டு விசாரணையில் உள்ளார். இந்நிலையில் மேற்படி செய்தியில், கூட்டுப்பாலியல் பலாத்காரம் செய்து கத்தியால் குத்தியதாக சில செய்தி சேனல்களில் தவறான செய்தி வெளியிடப்பட்டுள்ளது. எனவே உண்மைக்கு புறம்பான தகவல்களை செய்தியாக வெளியிட வேண்டாம் என தெரிவித்துக்கொள்ளப்படுகிறது." என கூறப்பட்டிருந்தது.
இந்த நிலையில் தனது மகளை பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாகவும், காவல்துறையினரின் நடவடிக்கை குற்றவாளிக்கு சாதகமாக இருப்பதாக பாதிக்கப்பட்ட மாணவியின் தந்தை பரபரப்பு புகார் கூறியுள்ளார். இதுதொடர்பாக பேசியுள்ள அவர்," எனது மகள் நேற்று இரவு 7 மணி அளவில் இயற்கை உபாதை கழிக்க வெளியே சென்ற போது தெரியாத நபர்கள் வலுக்கட்டாயமாக பாலியல் வன்கொடுமை செய்து கழுத்தை அறுத்து சென்றனர்.
வெகு நேரமாக சென்ற தனது குழந்தையை காணவில்லை என்று பார்த்தபோது கதறி அழுது ஓடி வந்தார். எனது பெண்ணால் பேச முடியவில்லை, சைகை காட்டி பேனாவை கொடுத்தால் எழுதி காட்டுகிறேன் என்று கூறினார். உடனடியாக பெண்ணை அழைத்து வந்து தனியார் மருத்துவமனையில் சேர்த்தோம் காலையில் காவல் நிலையத்தில் புகார் அளித்தோம். எனது குழந்தைக்கு தற்போது ஆபரேஷன் நடந்துள்ளது.
24 மணி நேரம் கழித்து தான் எதுவும் சொல்ல முடியும் என்று கூறி விட்டார்கள். எங்களிடம் காவல்துறையினர் நாளிதழில் செய்தியில் பொய்யான செய்தி அளித்தார்கள். அவர்கள் மீது புகார் கொடுங்கள் என்று எங்களிடம் கூறினார்கள். நாங்கள் கொடுக்க மாட்டோம் என்று மறுத்து விட்டோம். போலீஸ் நடவடிக்கையானது தரப்பினருக்கு சாதகமாக இருக்கிறார்கள். மேலும் ஒருவனாக இந்த வேலையை செய்ய முடியாது. இதில் அவருடன் யாரோ உடந்தையாக இருக்கிறார்கள்" என கூறுகிறார்கள்.












Click it and Unblock the Notifications