தவெக தூண்டுதலா? கரூர் பலி தொடர்பாக சிபிஐ விசாரணை கோரி அப்பீல் செய்தவரின் மனைவி குற்றச்சாட்டு!
கரூர்: கரூர் கூட்ட நெரிசல் வழக்கை சிபிஐ விசாரிக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த பன்னீர்செல்வம் என்பவர், கூட்ட நெரிசலில் பலியான சிறுவன் பிரித்திக்கின் தந்தை. இவர் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பே குழந்தையையும், மனைவியையும் விட்டுவிட்டுச் சென்றதாகவும் தவெக தூண்டுதலின் பேரில் மேல்முறையீடு செய்திருக்கலாம் என்றும் அவரது மனைவி சந்தேகம் கிளப்பியுள்ளார்.
கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் 27 ஆம் தேதி இரவு தவெக தலைவர் விஜய் பரப்புரையில், கூட்ட நெரிசல் காரணமாக 10 குழந்தைகள் உட்பட 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இச்சம்பவம் குறித்து விசாரிக்க தமிழ்நாடு அரசு, ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் தனிநபர் ஆணையத்தை அமைத்தது.

இருப்பினும், இந்த வழக்கில் சதி இருக்கிறது என்றும், எனவே வழக்கை சிபிஐக்கு மாற்றுமாறும், பொதுநல வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. கரூர் கூட்ட நெரிசல் தொடர்பான வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்றி உத்தரவிட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. ஆனால் மனுதாரர் உமா ஆனந்தன் இந்த விவகாரத்திற்கு தொடர்பில்லாத நபர் என்பதால் சிபிஐ விசாரணை கோரிய மனுவை தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதேநேரத்தில் தமிழக காவல்துறையின் விசாரணையில் ஏதேனும் ஆட்சேபனை இருந்தால் பின்னர் நீதிமன்றத்தை நாடலாம் எனவும் நீதிபதிகள் அறிவுறுத்தி இருந்தனர். இந்த நிலையில் கரூர் சம்பவத்தில் உயிரிழந்த 41 பேரில் 13 வயதான பிரித்திக் என்ற சிறுவனின் தந்தை பன்னீர்செல்வம் என்பவர் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் ஆஜரான வழக்கறிஞர் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் முன்னிலையில் நேற்று ஒரு முறையீட்டை வைத்தார்.
அதில், "உயர்நீதிமன்றத்தில் சிபிஐ விசாரணை கேட்ட வழக்கில் தான் ஒரு மனுதாரராக இல்லை என்றாலும், எனது 13 வயது மகனை இழந்து பாதிக்கப்பட்டுள்ளேன். மேலும் கூட்ட நெரிசல் மற்றும் உயிரிழப்பு தொடர்பான உண்மை நிலையை வெளிக் கொண்டுவர உச்ச நீதிமன்றம் இந்த விவகாரத்தில் தலையிட்டு, சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். இதுதொடர்பான மேல்முறையீட்டு மனுவும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதனை அவசர வழக்காக பட்டியலிட்டு விசாரிக்க வேண்டும் என்று தெரிவித்தார். இதையடுத்து அதனை ஏற்பதாக தெரிவித்தார் தலைமை நீதிபதி. இன்று வெள்ளிக்கிழமை இந்த மனு விசாரணைக்கு வருகிறது.
இந்நிலையில், பிரித்திக்கின் தாயார் ஷர்மிளா அளித்துள்ள பேட்டி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "பையனுக்காக வந்து ஒரு சொட்டு கண்ணீர் கூட விடவில்லை. பையன் என்ன படிக்கிறான், அவனுக்கு என்ன பிடிக்கும் என்று கூட அவருக்குத் தெரியாது. இத்தனை வருடம் இல்லாமல் இப்போது ஏன் பையன் என வருகிறார் எனத் தெரியவில்லை. பணத்துக்காக மட்டும்தான் வழக்கு போட்டிருப்பார்.
தவெக தரப்பில் இருந்து சொல்லி இருப்பார்கள் என்று நினைக்கிறேன். தவெக கட்சியில் இருந்து போனில் அழைத்து, குழந்தையை யார் வளர்த்தது என்பதற்கான ஆதாரத்தைக் கேட்டார்கள். பன்னீர்செல்வம் தான் தான் குழந்தையை வளர்த்ததாக சொன்னதாக கூறினார்கள். அவர் வழக்கு தொடர்ந்ததே எனக்கு தெரியாது. பையனுக்கு என அவர் எதுவும் செய்ததில்லை. அவர் யாருடைய தூண்டுதலின் பேரிலோ பணத்துக்காகச் செய்துள்ளார். பிரித்திக் பெயரில் அவர் என்ன செய்தாலும் ஏற்கக்கூடாது" எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications