விஜய் பிரசார வாகன டிரைவர் மீது வழக்கு.. நீதிமன்றம் கேட்ட கேள்வியால் அதிரடி.. என்ன பிரிவு தெரியுமா?
கரூர்: விபத்தை ஏற்படுத்தியதாக நடிகரும், தவெக தலைவருமான விஜயின் பிரசார வாகன டிரைவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். முன்னதாக சென்னை உயர்நீதிமன்றம் காட்டமான கருத்துகளை பதிவு செய்த நிலையில் தமிழக போலீசார் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளனர். அதுமட்டுமின்றி தற்போது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதால் விஜயின் பிரசார வாகனம் பறிமுதல் செய்யப்படுகிறதா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரான விஜய் தமிழ்நாடு முழுவதும் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வந்தார். கரூரில் நடந்த விஜயின் பிரசார கூட்டத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் 41 பேர் பலியாகினர்.

முன்னதாக நாமக்கல்லில் இருந்து நடிகர் விஜய் பயணித்த பிரசார வாகனம் கரூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது அவரது தொண்டர்கள் டூவீலரில் விஜயின் பிரசார வாகனத்தை பின்தொடர்ந்து வந்தனர்.
கரூர் தவிட்டுப்பாளையம் சோதனை சாவடி அருகே விஜயின் பிரசார வாகனத்தையொட்டி வந்த இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் கீழே விழுந்தனர். இருசக்கர வாகனங்கள் மோதியதோடு, பிரசார வாகனத்திலும் மோதி கீழே விழுந்தனர். இதில் அவர்கள் காயமடைந்தனர். அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் ஏற்படவில்லை.
இதுதொடர்பான வீடியோ இணையதளங்களில் வெளியானது. இந்நிலையில் தான் விஜயின் பிரசார வாகன டிரைவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்னர். பிஎன்எஸ் சட்டப்பிரிவு 281ன் கீழ் வேலாயுதம்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
அதாவது மனித உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் அல்லது மற்றவர்களுக்கு காயம் ஏற்படுத்தும் வகையில் அவசரமாக வாகனம் ஓட்டுவது என்ற பிரிவின் கீழ் விஜயின் பிரசார வாகன டிரைவர் மீது வழக்கு பாய்ந்துள்ளது. இதனால் அவரது பிரசார வாகனம் பறிமுதல் செய்யப்படுகிறதா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
முன்னதாக கரூரில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான நிலையில் அரசியல் கட்சிகளின் சாலை வல நிகழ்ச்சிகளுக்கு உரிய வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கப்பட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் தவெகவுக்கு கடும் கண்டனம் தெரிவித்தது. அப்போது இந்த விபத்தை குறிப்பிட்டு நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்தது.
கரூர் கூட்ட நெரிசல் தொடர்பான வழக்கு நீதிபதி செந்தில் குமார் அமர்வு முன்பா விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, கரூர் பிரசாரத்துக்கு சென்றபோது விஜய் பயணித்த பேருந்து மோதி ஒரு விபத்து ஏற்பட்டதாக வீடியோக்கள் வெளியாகியுள்ளன. இதுதொடர்பாக தனியாக வழக்கு எதுவும் பதிவு செய்யப்பட்டிருக்கிறதா? வழக்குப்பதிவு செய்ய காவல்துறைக்கு என்ன தயக்கம்? என்று கேள்வி எழுப்பி இருந்தார்.
அதுமட்டுமின்றி, விஜயின் பிரசார வாகனத்தை ஏன் பறிமுதல் செய்யவில்லை? என்று நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டது. இந்த உத்தரவை தொடர்ந்து தான் வேலாயுதம்பாளையம் போலீசார் இன்று விஜயின் பிரசார வாகன டிரைவர் மீது அதிரடியாக வழக்குப்பதிந்துள்ளது.












Click it and Unblock the Notifications