"சட்டையை எல்லாம் கிழித்து.." பஸ் ஸ்டாண்ட் ஊழியரை தாக்கி பணத்தை திருடிய வட மாநிலத்தவர்! கரூரில் பரபர
பேருந்து நிலையத்தில் வடமாநிலத்தவர் சிலர் இளைஞரைத் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கரூர்: கரூர் மாவட்டத்தில் நள்ளிரவில் பேருந்தில் இடம் பிடிப்பதில் ஏற்பட்ட தகறாரில் வடமாநில இளைஞர்கள் சிலர் இளைஞர் ஒருவரைத் தாக்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பான வீடியோவும் இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.
வட மாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டிற்கு வேலைக்கு வருவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. தமிழ்நாட்டில் பலரும் கல்லூரி வரை படிப்பதால், ஊதியம் அதிகம் எதிர்பார்க்கிறார்கள்.
அதேநேரம் ஹோட்டல், கட்டிட வேலை செய்யும் ஊழியர்களுக்கும் பற்றாக்குறை ஏற்படுகிறது. இந்த தேவையை இயல்பாகவே வடமாநிலத்தில் இருந்து வருவோர் தான் பூர்த்தி செய்கிறார்கள்.

வடமாநிலத்தவர்
உதாரணத்திற்குச் சொல்ல வேண்டும் என்றால்.. இந்தியர்கள் அதிக ஊதியம் கிடைக்கும் அரபு நாடுகள், சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளுக்குச் செல்கிறார்கள். அதேபோலத் தான் தங்கள் குடும்பத்தைக் காக்க வேலைவாய்ப்பை உறுதி செய்ய வட மாநிலத்தவர் தென் மாநிலங்களுக்குக் குறிப்பாக தமிழ்நாட்டிற்கு அதிகம் வருகிறார்கள். நிச்சயம் வேலை கிடைக்கும் என்பதாலும் அங்குடன் ஒப்பிடும் போது ஊதியம் அதிகம் என்பதாலும் இதுபோல வடமாநிலத்தவர் இங்கு அதிகம் வருகிறார்கள்..

வெறுப்பு
அதேநேரம் இப்படிப் பிழைப்பு தேடி வரும் வடமாநிலத்தவர்களைக் குறிவைத்து இங்கு மோசமான வெறுப்பு பிரசாரமும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் காரணமாக வடமாநிலத்தவர் மீது ஆங்காங்கே தாக்குதல் சம்பவங்களும் நடக்கிறது. இது தொடர்பான வீடியோக்களும இணையத்தில் வெளியாகி பகீர் கிளப்பி வருகிறது. அதேநேரம் தமிழகம் வரும் வட மாநிலத்தவர் குறித்து உரிய டே்டா இல்லாததால், ஒறு சில வடமாநிலத்தவர் குற்றச் சம்பவங்களிலும் அவர்கள் ஈடுபடுகின்றனர். சமீபத்தில் திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளையிலும் வடமாநில கொள்ளையர்கள் தொடர்பு இருப்பதாக போலீசார் கூறியுள்ளனர்.

கரூர்
இதற்கிடையே கரூர் மாவட்டத்தில் பேருந்து நிலையத்தில் இதுபோன்ற ஒரு சம்பவம் நடந்துள்ளது. பொதுவாக முக்கிய பேருந்து நிலையங்களில் மாநகர் பேருந்துகளின் வழித்தடங்களை சொல்ல டைம் கேன்வாசர் என்று ஒருவர் இருப்பார். அவர் பல்வேறு வழித்தடங்களுக்குச் செல்லும் பேருந்துகள் குறித்த தகவல்களை அறிவிப்பார்கள். அப்படி கரூர் பேருந்து நிலையத்தில் டைம் கேன்வாசர் பணிபுரிந்து வருபவர் செல்வராஜ். இவர் கரூரை அடுத்துள்ள புலியூர் பகுதியைச் சேர்ந்தவர். நேற்றிரவு பணி முடித்துவிட்டு இவர் சொந்த ஊர் திரும்பத் திருச்சி செல்லும் பேருந்தில் ஏறியுள்ளார்.

தாக்குதல்
அப்போது அதே பேருந்தில் ஏறிய வடமாநில இளைஞர்கள் சிலர், அந்த இருக்கையில் தாங்கள் தான் அமருவோம் என்று கூறி செல்வராஜிடம் வாக்குவாதம் செய்ததாகக் கூறப்படுகிறது. அப்போது இரு தரப்பிற்கும் இடையே வாக்குவாதம் முற்றியுள்ளது. இதையடுத்து பேருந்தில் இருந்து கீழே இறங்கிய செல்வராஜ், உதவிக்கு மற்றவர்களை அழைத்துள்ளார். அப்போது அங்கிருந்த 5 வட மாநில இளைஞர்கள், செவல்வராஜை தாக்கி சட்டை கிழித்துள்ளனர். மேலும், அவரது பணத்தையும் பறித்ததாகக் கூறப்படுகிறது.

போலீசாரை பார்த்ததும் ஓட்டம்
வட மாநிலத்தவரின் இந்த தாக்குதலைப் பார்த்த மற்ற பயணிகளும் அங்கிருந்தவர்களும் வடமாநிலத்தைச் சேர்ந்தவர்களைப் பிடித்துள்ளனர். மேலும், அங்கிருந்தவர்கள் வடமாநில இளைஞர்களைப் பிடித்து தாக்கியுள்ளனர். அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், இந்த கூச்சலைக் கேட்டு அங்கே வந்துள்ளனர். போலீசார் வந்து விசாரிக்கத் தொடங்கியவுடன், வடமாநில இளைஞர்கள் அங்கிருந்து தப்பியோடிவிட்டனர்.

புகார்
தனது பாக்கெட்டில் இருந்த பணத்தை வடமாநில இளைஞர்கள் எடுத்துக் கொண்டதாகத் தெரிவித்த செல்வராஜ், கையில் இருந்து மோதிரத்தையும் கழட்ட முயன்றதாக போலீசாரிடம் தெரிவித்தார். கரூர் பேருந்து நிலையத்தில் நள்ளிரவில் நடந்த இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இது தொடர்பான வீடியோவும் இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.












Click it and Unblock the Notifications