கரூர் டூ திண்டுக்கல்! 2024-ல் தொகுதி மாறுகிறாரா ஜோதிமணி எம்.பி.! பின்னணி அரசியல் என்ன?
கரூர்: கரூர் நாடாளுமன்ற உறுப்பினராக உள்ள ஜோதிமணி, அடுத்த தேர்தலில் பக்கத்து தொகுதியான திண்டுக்கல்லில் போட்டியிடக் கூடும் என்ற பேச்சு எழுந்துள்ளது.
உள்ளூர் அமைச்சரான செந்தில்பாலாஜிக்கும் ஜோதிமணிக்கும் இடையே நிலவி வரும் பனிப்போர் தான் இதற்கு காரணம் எனக் கூறப்படுகிறது.
திண்டுக்கல் மக்களவை தொகுதியை பொறுத்தவரை இதற்கு முன் பல ஆண்டுகளாக காங்கிரஸ் வசம் இருந்த தொகுதி தான் என்பது குறிப்பிடத்தக்கது.

2024 நாடாளுமன்றத் தேர்தல்
யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே என்ற பழமொழிக்கு ஏற்ப, தமிழகத்தில் 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கான பரபரப்பு இப்போதே பற்றிக் கொண்டது. ஒரு பக்கம் அதிமுக பாஜக கூட்டணி விவகாரத்தில் முக்கியமான நகர்வுகள் நடைபெற்று வரும் நிலையில், திமுக காங்கிரஸ் கூட்டணியில் போட்டியிடும் தொகுதிகளை அடையாளம் காணும் பணிகள் தொடங்கியுள்ளன. இதனிடையே கரூர் காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி அடுத்த தேர்தலில் திண்டுக்கல் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு உள்ளதாக ஒரு பேச்சு எழுந்துள்ளது.

ஏழாம் பொருத்தம்
அமைச்சர் செந்தில்பாலாஜிக்கும் ஜோதிமணி எம்.பி.க்கும் ஏழாம் பொருத்தமாக இருப்பதால் எப்போதுமே கரூர் மாவட்ட அரசு நிகழ்ச்சிகளில் லடாய் நடந்து வருகிறது. இவர் கலந்துகொள்ளும் நிகழ்வில் அவர் கலந்து கொள்வதில்லை. அவர் கலந்துகொள்ளும் நிகழ்வில் இவர் கலந்து கொள்வதில்லை. திமுகவும் காங்கிரசும் ஒரே கூட்டணியில் இருந்தாலும் கூட கரூர் மாவட்ட அரசியல் நிலவரம் இது தான். இது இரண்டு கட்சிகளின் தலைமைக்கும் தெரியும்.

திமுக போட்டி
கரூர் மக்களவைத் தொகுதியில் இந்த முறை திமுகவே களமிறங்க வேண்டும் என்பது கரூர் மாவட்ட திமுகவினரின் கோரிக்கையாக உள்ளது. அமைச்சர் செந்தில்பாலாஜியின் எண்ணவோட்டமும் அப்படியே உள்ளது. இதனால் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பக்கத்து மாவட்டமான திண்டுக்கல் மக்களவை தொகுதிக்கு ஜோதிமணி ஷிப்ட் ஆகலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது. திண்டுக்கல் மக்களவை தொகுதியை பொறுத்தவரை காங்கிரஸ் சார்பில் சித்தன் பல ஆண்டுகளாக நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கரூர் தொகுதி
இதனிடையே காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைமை மூலம் சிட்டிங் தொகுதியான கரூரையே மீண்டும் கேட்டு வாங்கும் திட்டத்தில் இருக்கிறார் ஜோதிமணி எம்.பி. தேர்தலுக்கு இன்னும் ஒன்றே கால் வருடம் உள்ள நிலையில் இப்போதே அது தொடர்பான பரபரப்பு ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications