முதல்வர் ஸ்டாலின் படத்தை அவதூறாக எடிட் செய்து பரப்பிய பாஜக நிர்வாகி.. தட்டித் தூக்கிய கரூர் போலீஸ்!
கரூர்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகைப்படத்தை வெளியிட்டு அவதூறு பரப்பியதாக கரூர் மாவட்ட பாஜக நிர்வாகியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கரூர் மாவட்டத்தின் சின்ன தாராபுரம் அடுத்த பனையம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் முருகேசன். இவர் கரூர் மாவட்ட பாஜக பட்டியல் அணி துணை தலைவராக பொறுப்பு வகித்து வருகிறார். இந்நிலையில், கடந்த சில நாட்களாக தமிழக அரசு குறித்தும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்தும் அவதூறு கருத்துகளை வெளியிட்டு வந்திருக்கிறார். பலமுறை இது குறித்து திமுகவினர் எச்சரித்துள்ளனர். இருப்பினும், அவர் அவதூறு செயல்களை தொடர்ந்து செய்து வந்திருக்கிறார்.

இந்நிலையில், ஓரிரு தினங்களுக்கு முன்னர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் புகைப்படத்தை மோசமான முறையில் எடிட் செய்து சோஷியல் மீடியாக்களில் ஷேர் செய்திருக்கிறார். அதாவது, முதலமைச்சரின் படத்திற்கு பொட்டு வைத்து, மாலை அணிவித்து தவறாக சித்தரித்திருக்கிறார். அதுமட்டுமல்லாது கரூர் மாவட்ட திமுகவின் தகவல் தொழில்நுட்ப அணியின் மாவட்ட துணைத் தலைவராக உள்ள தீபக்கின் படத்தையும், அவதூறு பரப்பும் வகையில் எடிட் செய்து ஷேர் செய்திருக்கிறார்.
இந்த படங்களை பாஜகவினர் ஏராளமானோர் பகிர்ந்திருக்கின்றனர். இப்படி பகிரப்பட்ட படங்கள் தீபக்கின் கவனத்திற்கு வந்திருக்கிறது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர், போலீஸில் புகார் அளித்திருக்கிறார். புகாரின் அடிப்படையில் விசாரணையை தொடங்கிய காவல்துறை, அவதூறு பரப்பியது முருகேசன்தான் என்பதை உறுதி செய்தனர். இதை ஷேர் செய்ய யாரெல்லாம் உதவினார்கள்? எடிட் செய்தது யார்? என்றும் விசாரித்தனர். பின்னர் முருகேசனை கைது செய்திருக்கின்றனர்.
நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட முருகேசன் தற்போது சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்து அவதூறு பரப்பிய பாஜக நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் கரூரில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
கரூரில் இதுபோன்று பாஜக நிர்வாகிகள் கைது செய்யப்படுவது இது முதல் முறையல்ல. ஏற்கெனவே கடந்த 2022ம் ஆண்டு ஏப்ரல் மாதம், கரூரை சேர்ந்த பாஜக நிர்வாகி விக்னேஷ் என்பவர் அவரது ட்விட்டர் பக்கத்தில் முதலமைச்சர் குறித்து அவதூறு கருத்து பரப்பியிருந்தார். அதாவது அப்போது முதலமைச்சர் துபாய் சென்றிருந்தார். அங்கு அவர் உடுத்தியிருந்த உடை குறித்து மோசமாக விமர்சித்திருந்தார். இதனையடுத்து கொடுக்கப்பட்ட புகாரில் போலீசார் அவரை கைது செய்தனர். தொடர்ச்சியாக கரூர் மாவட்ட பாஜக நிர்வாகிகள் அவதூறு வழக்கில் கைது செய்யப்படுவது விவாதங்களை கிளப்பியுள்ளது.












Click it and Unblock the Notifications