ரோடு காயும் முன்.. அதை பிடுங்கி.. பொய் செய்தி பரப்புகிறார்கள்.. உண்மையை உடைத்த கரூர் கலெக்டர்
கரூர்: தார் சாலை பணி மேற்கொள்ளப்பட்ட சில மணி நேரங்களுக்குள் சேதப்படுத்தி தரமற்ற சாலை அமைத்தது போல் செய்தி பரப்பப்பட்டுள்ளது, இது முழுக்க முழுக்க பொய்யானது நேற்று கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் விளக்கம் அளித்துள்ளார்.
கரூர் மாவட்டம் கடவூர் ஊராட்சி ஒன்றியம் தரங்கம்பட்டியில் போடப்பட்ட புதிய சாலை பெயர்ந்து கையில் வந்ததை நெட்டிசன்கள் சிலர் இணையத்தில் வெளியிட்டு விமர்சனம் செய்து இருந்தனர். தரமற்ற சாலை போடப்பட்டதாக நெட்டிசன்கள் கூறி இருந்தனர். இந்த நிலையல கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் இது குறித்து கூறுகையில், கரூர் மாவட்டம் கடவூர் ஊராட்சி ஒன்றியம் தரங்கம்பட்டி முதல் வீரசிங்கம்பட்டி தார்சாலையினை புணரமைக்கும் போது தரமற்ற சாலையாக போடப்பட்டு இருப்பதாக சமூக வலைதளங்களில் பொய்யான தகவல் அடிப்படையில் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று தார் சாலையின் தரம் குறித்து ஆய்வு மேற்கொண்டோம்.

இது முற்றிலும் தவறான செய்தி. தார் சாலை பணி மேற்கொள்ளப்பட்ட சில மணி நேரங்களுக்குள் சேதப்படுத்தி தரமற்ற சாலை அமைத்தது போல் செய்தி பரப்பப்பட்டுள்ளது. பொதுவாக தார் சாலை அமைக்கப்பட்டு இறுகுவதற்கு 48 -72 மணி நேரங்கள் வரை ஆகும் என்பதே அறிவியல் ரீதியான உண்மை, என்று தெரிவித்துள்ளார்.
அறிக்கை: இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கரூர் மாவட்டம், கடவூர் ஊராட்சி ஒன்றியம், மாண்புமிகு முதலமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் (MGSMT) கீழ் தரகம்பட்டி முதல் வீரசிங்கம்பட்டி வரை உள்ள தார்சாலையை புனரமைத்தல் பணி மேற்கொள்ள செயல்முறைகளில் நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு. ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டு வரப்பெற்ற ஒப்பந்தப்புள்ளிகளில் குறைந்த விலைப்புள்ளி அளித்த "M/S. Chinnammal Enterprises, Vaiyampatty" என்ற நிறுவனத்திற்கு செயல்முறைகளின்படி வேலை உத்தரவு வழங்கப்பட்டது.

மேற்படி வேலை உத்தரவு வழங்கப்பட்டதைத் தொடர்ந்து பேட்ச் ஒர்க் முடித்து (06.10.2023) வெள்ளிக் கிழமை காலை 10.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை 1050 மீட்டர் மட்டும் தார்சாலை போடப்பட்டது. தார்சாலை போடப்பட்டு முழுமையாக செட் ஆவதற்கு 48 மணி நேரம் முதல் 72 மணி நேரம் வரை ஆகக்கூடிய சூழ்நிலையில், வீரசிங்கம்பட்டி குக்கிராமத்தில் திருமதி.ஈஸ்வரி என்பவரது வீட்டின் அருகில் இறுதியாக தார்சாலை மாலை 6.00 மணிக்கு முடிக்கப்பட்ட இடத்தில் அந்த பகுதியை சேர்ந்த சிலர் தார்சாலையை சேதப்படுத்தியுள்ளனர். இடையே ஏற்பட்ட பிரச்சினையால் மற்றும் இரண்டு ஒப்பந்தாரர்கள் சமூக ஊடகங்கள் மற்றும் வலைதளங்களில் தவறான வீடியோக்களை பதிவிட்டு உண்மைக்கு புறம்பான அதாவது தார்சாலை தரம் இன்றி இருப்பதாக தவறான கருத்துக்களை பரப்பி மாவட்ட நிர்வாகத்திற்கும், அரசிற்கும் அவப்பெயரை ஏற்படுத்தினர்.

சாலையின் தரம் குறித்து ஆய்வு செய்திட போடப்பட்ட சாலையில் சேதப்படுத்திய இடத்திற்கு அருகில், நீளம் + அகலம் 10 செ.மீ.+ 10 செ.மீ. மற்றும் ஆழம் 3.0 செ.மீ. என்ற அளவில் வெட்டி எடுக்கப்பட்ட போது ஆழம் 3.5 செ.மீ. இருப்பது தெரியவந்தது. இதன்படி கூடுதலாக தார்சாலையின் கனம் 0.5 செ.மீ. இருந்தது தெரியவந்தது. வெட்டி எடுக்கப்பட்ட தார்சாலையின் மூலப்பொருட்கள் (தார் மற்றும் ஜல்லி) வெட்டி எடுத்து பயன்படுத்தப்பட்ட தாரின் அளவு மற்றும் ஜல்லி ஆகியவற்றின் அளவு குறித்து பரிசோதனை செய்யப்பட்டதில் 5.4% தார் இருக்க வேண்டிய இடத்தில் 5.5% இருந்தது ஆய்வில் தெரியவந்தது.
இச்சாலையின் தரம் மேற்படி மூலப்பொருட்கள் தர ஆய்வு செய்யப்பட்டதின் அடிப்படையில், சாலை தரமாக இருப்பது உறுதி செய்யப்பட்டது. அரசு பொது சொத்துகளை சேதப்படுத்திய நபர்கள் மீது காவல் துறை முலம் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.த.பிரபுசங்கர்.இ.ஆ.ப, அவர்கள் தெரிவித்தார்கள்.
இது முற்றிலும் தவறான செய்தி. தார் சாலை பணி மேற்கொள்ளப்பட்ட சில மணி நேரங்களுக்குள் சேதப்படுத்தி தரமற்ற சாலை அமைத்தது போல் செய்தி பரப்பப்பட்டுள்ளது. பொதுவாக தார் சாலை அமைக்கப்பட்டு இறுகுவதற்கு 48 -72 மணி நேரங்கள் வரை ஆகும் என்பதே அறிவியல் ரீதியான உண்மை.https://t.co/ftjTr4VDUn https://t.co/q0SkNfLDgJ pic.twitter.com/wirMb2k46N
— Collector Karur (@CollectorKarur) October 8, 2023
இவ்வாய்வின்போது திட்ட இயக்குநர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, திருமதி.வாணிஈஸ்வரி, கடவூர் ஊராட்சி ஒன்றிய உதவிப் பொறியர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஒப்பந்ததாரர் மற்றும் வீரசிங்கம்பட்டி ஊர் பொதுமக்கள் ஆகியோர் உடன் இருந்தனர், என்று குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications