கரூருக்குள் இப்படியா நடக்கணும்? ஆம்னி பஸ் மீது நேருக்கு நேராக வந்து மோதிய சுற்றுலா வேன்.. ஐயோ 4 பேர்
கரூர்: கரூர் அருகே ஆம்னி பஸ்ஸும் வேனும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.. இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
கரூர் வெண்ணைமலை பாலசுப்பிரமணிய சுவாமி அருகில் ஆத்மநேச ஆஞ்சநேயர் கோயில் அமைந்துள்ளது. 2000ம் வருடங்கள் பழமையான ஆலயங்களில் ஒன்றாக இந்த கோயில் கருதப்படுகிறது..

கடந்த ஏப்ரல் மாதம்தான், வெண்ணெய்மலை ஸ்ரீ பாலசுப்ரமணிய சுவாமி ஆலயத்தின் மகா கும்பாபிஷேகம் நடந்தது.. இந்த கோவிலின் கும்பாபிஷேகம் விழா நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு, நாள்தோறும் பல்வேறு நிகழ்ச்சிகளும், பிரத்யேக யாக குண்டங்கள் அமைத்து நான்கு கால யாக பூஜைகளும் வெகு சிறப்பாக நடத்தப்பட்டன.
இங்குள்ள ஆஞ்சநேயரை வழிபடுவதால், தாங்கள் நினைத்த காரியம் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது.. எனவே, இந்த கோயிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் திரண்டு வருவது வாடிக்கையாகும்.. தற்போது பள்ளி விடுமுறை என்பதால், சுற்றுலா பயணிகளும் இக்கோயிலுக்கு அதிக அளவில் வந்து செல்கிறார்கள். நேற்றைய தினமும் குடும்பத்துடன் ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.
இந்நிலையில், தூத்துக்குடியில் இருந்து சுற்றுலாவுக்காக கரூர் மாவட்டத்திற்கு வேனில் சிலர் சென்றுகொண்டிருந்தனர். கரூர் வெண்ணெய்மலை அருகே வேன் சென்றுகொண்டிருந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன்கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தெறித்து ஓட ஆரம்பித்தது.. தறிகெட்டு ஓடியதால் டிராக்டர் மீது மோதி, சாலை தடுப்பையும் தாண்டி ஓடியது.. பிறகு எதிரே வந்து கொண்டிருந்த ஆம்னி பஸ் பலமாக மோதி நொறுங்கியது.
இந்த கோர விபத்தில் எதிர்பாராதவிதமாக சிறுமி தக்சிகா (வயது 8), சிறுவன், சுற்றுலா வேன் ஓட்டுநர் உள்பட 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் விபத்தில் சிக்கி 15க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இது குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். சுற்றுலாவிற்கு வந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications