கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்.. இறுகும் பிடி.. புஸ்சி ஆனந்த், ஆதவ் அர்ஜுனாவிடம் சிபிஐ தீவிர விசாரணை
கரூர்: தவெக தலைவர் விஜய் கரூரில் நடத்திய மக்கள் சந்திப்பு கூட்டத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் பலியாகினர். இது தொடர்பான வழக்கை சிபிஐ விசாரித்து வரும் நிலையில், இன்று ஆதவ் அர்ஜுனா, புஸ்சி ஆன்ந்த் ஆகியோரிடம் சிபிஐ விசாரணை மேற்கொண்டுள்ளது. தவெகவின் உயர் மட்ட நிர்வாகிகளான இருவரிடம் சிபிஐ விசாரணை மேற்கொண்டுள்ளது வழக்கு விசாரணையில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
கடந்த செப்டம்பர் மாதம் 27 ஆம் தேதி தவெக தலைவர் விஜய் கரூரில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியை நடத்தினார். விஜய்யை பார்க்க ஆயிரக்கணக்கானோர் வருகை தந்து இருந்த நிலையில், கூட்டத்தில் பயங்கர நெரிசல் ஏற்பட்டது. இந்த கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியாகினர். நாட்டையே இந்த சம்பவம் உலுக்கியது.

கரூர் கூட்ட நெரிசல் தொடர்பாக தமிழக அரசு சிறப்பு புலனாய்வுக்குழு அமைத்து விசாரணை நடத்தியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தவெக மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் தரப்பு எனக்கூறி உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இதைவிசாரித்த உச்ச நீதிமன்றம், கரூர் வழக்கை சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்டது. விசாரணையை கண்காணிக்க உச்ச நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி ரஸ்தோகி தலைமையில் குழு ஒன்றையும் அமைத்து உத்தரவிட்டது.
உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி கரூர் வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. கூட்ட நெரிசல் ஏற்பட்ட வேலுச்சாமிபுரம் பகுதியில் உள்ள வியாபாரிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரை நேரில் ஆஜராக சொல்லி சிபிஐ விசாரணை நடத்தியது. கூட்ட நெரிசல் ஏற்பட்ட சாலையை நவீன கருவிகள் கொண்டு அளவீடு செய்தும் சிபிஐ விசாரணை நடத்தியது.
விஜய் பிரசார பேருந்தில் இடம் பெற்று இருந்த சிசிடிவி காட்சிகளையும் சிபிஐ பெற்று விசாரணை நடத்தி வருகிறது. கரூர் விவகாரத்தில் சிபிஐ விசாரணை தீவிரம் அடைந்து இருக்கும் நிலையில், இன்று தவெக பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் மற்றும் ஆதவ் அர்ஜுனாவிடம் சிபிஐ விசாரணை மேற்கொண்டுள்ளது. சிபிஐ விசாரணைக்காக இருவரும் கரூரில் உள்ள சிபிஐ முகாம் அலுவலகத்தில் ஆஜர் ஆகினர்.
கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தின் விஜய்யின் பிரசார வாகனத்தில் ஆதவ் அர்ஜுனா இருந்தார். அதேபோல, நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்தவர் என்ற அடிப்படையில் புஸ்சி ஆனந்த் மீது தமிழக அரசு அமைத்த எஸ்ஐடி வழக்குப்பதிவு செய்து இருந்தது. கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் தவெகவின் உயர் மட்ட நிர்வாகிகளான புஸ்சி ஆனந்த் மற்றும் ஆதவ் அர்ஜுனாவிவிடம் சிபிஐ இன்று விசாரணை மேற்கொண்டு இருப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது.


Click it and Unblock the Notifications
