விஜயை பார்க்கப்போன மனைவி - மகள் நெரிசலில் பலி.. உடல்களை தேடி அலைந்த கரூர் நபர்.. கலங்கடித்த சோகம்
கரூர்: ‛‛விஜயை பார்த்துவிட்டு வருகிறோம் என்று சென்ற மனைவி, மகள் நெரிசலில் சிக்கி இறந்துவிட்டார்கள். மகள் இறந்துவிட்டாள். மனைவியாவது கிடைப்பாள் என்று தேடி அலைந்தேன். ஆனால் அவளும் இறந்துவிட்டார்'' என்று கரூரை சேர்ந்தவர் கதறிய அழும் வீடியோ அனைவரையும் கலங்க வைக்கிறது.
தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் நேற்று இரவு கரூரில் பிரச்சாரம் மேற்கொண்டார். அவரை காண ஏராளமான தொண்டர்கள் குவிந்தனர். அப்போது திடீரென கடுமையான கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த கூட்ட நெரிசலில் சிக்கி 39 பேர் பலியாகினர்.

இன்னும் 50க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் உயிர் பலி இன்னும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. இந்த சம்பவம் தமிழகத்தை உலுக்கி உள்ளது.
காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதுமட்டுமின்றி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோரின் செலவையும் ஏற்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உள்ளவர்கள் கரூர் சென்று இறந்தவர்களின் குடும்பத்துக்கு ஆறுதல் கூறினர். சிகிச்சை பெறுவோரிடம் நலம் விசாரித்தனர்.
அதாவது கரூர் ஏமூர் கிராமத்தைச் சேர்ந்த சக்திவேல். இவரது மனைவி பெயர் பிரியதர்ஷினி. வயது 35. மகள் பெயர் தர்ணிகா. வயது 14. இந்நிலையில் தான் நேற்று விஜயை பார்க்க பிரியதர்ஷினி தனது மகள் தர்ணிகாவுடன் சென்றார். அப்போது கூட்ட நெரிசலில் சிக்கி இருவரும் பலியாகினர். மனைவி மற்றும் மகளை ஒரே நேரத்தில் பறிகொடுத்த சக்திவேல் கதறி அழுதது மனதை கல்நெஞ்சையும் கரைய வைப்பதாக இருந்தது.
இந்த துயர சம்பவம் பற்றி சக்திவேல், ‛‛என் மனைவியும், மகளும் விஜயை பார்த்து விட்டு வருகிறேன் என என்னிடம் கூறிவிட்டு வீட்டில் இருந்து சென்றனர். கூட்ட நெரிசல் என்று சொன்னார்கள். இதனால் நான் அவர்களுக்கு போன் செய்தேன். நாட் ரீச்சபிள் என்று வந்தது. அதன்பிறகு தொடர்ந்து போன் செய்தேன். எடுத்தார்கள். விஜய் வந்தவுடன் பார்த்துவிட்டு வருகிறோம் சொன்னாங்க. விஜய் வந்த பிறகு தான் செல்போனையும் எடுக்கவில்லை. ஒன்றையும் எடுக்கவில்லை.
அப்போது ஒரு மேடம் எடுத்து பேசினாங்க. என்னங்க.. நீங்க பேசுறீங்க என்று கேட்டேன். செல்போனை விட்டுவிட்டு சென்றுவிட்டார்கள் என்று சொன்னார்கள். எங்கங்க போனாங்க என்று கேட்டேன். நீங்கள் தனியார் மருத்துவமனையில் சென்று பாருங்கள் என்று சொன்னாங்க. போலீஸ் மேடம் தான் பேசுனாங்க.
மருத்துவமனை போய் போட்டோவை காட்டி கேட்டேன். இங்கு இல்லைபா. அரசு மருத்துவமனை போய்விட்டதாக சொன்னார்கள். அங்கே ஓடினேன்.. அங்கு சென்றபோது பிணவறையில் சென்று பார்க்க சொல்லிவிட்டார்கள். என் பிள்ளை போய்ட்டாங்க.. சரி வீட்டுக்கார அம்மாவுக்கு என்னாச்சி என்று தேடினேன்.
கடைசியாக ஒரு மணிநேரத்துக்கு பிறகு தான் தனியார் மருத்துவமனையில் இருந்து அரசு மருத்துவனையின் பிணவறைக்கு கொண்டு வந்தாங்க. மனைவியும் இறந்துட்டாங்கனு சொன்னாங்க'' என்று கதறி அழுதார். உடற்கூராய்வுக்குப் பிறகு சக்திவேலிடம் அவரது மனைவி பிரியதர்ஷினி மற்றும் மகள் தர்ணிகாவின் உடல் ஒப்படைக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications