மகன் வயது கூட தப்பு.. கரூர் கூட்ட நெரிசலில் சிபிஐ விசாரணை கோரிய நபரின் திடுக் பின்னணி.. தாய் வேதனை
கரூர்: தவெக தலைவர் விஜயின் கரூர் தேர்தல் பிரசாரத்தின்போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியாகினர். இதில் இறந்த சிறுவன் பிரதீக்கின் தந்தை சிபிஐ விசாரணை கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இறந்த சிறுவன் மற்றும் அவனது தாய் ஷர்மிளாவை அந்த நபர் பிரிந்து சென்ற நிலையில் திடீரென்று வழக்கு தொடுத்தது பேசும்பொருளானது. இந்நிலையில் தான் சிறுவனின் தாய் பரபரப்பான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். மனுவில் மகனின் வயது கூட அவர் தவறாக குறிப்பிட்டுள்ளதாக கூறியுள்ளார்.
நடிகரும், தவெக தலைவருமான விஜய் கடந்த 27ம் கரூர் வேலுச்சாமிபுரத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் சிக்கி குழந்தைகள், பெண்கள் என்று மொத்தம் 41 பேர் பலியாகினர். இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் சிறப்பு விசாரணை குழுவை அமைத்தது.

ஐபிஎஸ் அதிகாரி அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு விசாரணை குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவினர் கரூரில் முகாமிட்டு தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையே தான் கூட்ட நெரிசலில் சிக்கி இறந்ததாக 10 வயது சிறுவன் பிரதீக்கின் தந்தை பன்னீர் செல்வம் பச்சை முத்து என்பவர் சிபிஐ விசாரணை கோரி உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அதேபோல் தவெக சார்பிலும் மனு செய்யப்பட்டது.
இந்த மனுக்கள் கடந்த 10ம் தேதி விசாரிக்கப்பட்டது. அப்போது இறந்த சிறுவனின் தந்தை சார்பில் சிபிஐ விசாரணை ஏன் வேண்டும் என்று வாதம் வைக்கப்பட்டது. இந்து மனுக்கள் மீது நாளை உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்க உள்ளது. இதனால் இந்த வழக்கு பெரும் எதிர்பார்பை ஏற்படுத்த உள்ளது. அதாவது கரூர் கூட்ட நெரிசல் குறித்து உயர்நீதிமன்றம் அமைத்த எஸ்ஐடி விசாரிக்குமா? இல்லை வழக்கு விசாரணை சிபிஐ வசம் செல்லுமா? இல்லாவிட்டால் வழக்கு விசாரணையை உச்சநீதிமன்றம் மேற்பார்வையிடுமா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையே தான் இறந்த பிரதீக் மற்றும் அவரது தாய் ஷர்மிளாவை வழக்கு தொடர்ந்த நபர் பிரிந்து சென்றுவிட்டதாகவும், அவர் உள்நோக்கத்துடன் இந்த வழக்கை தொடர்ந்து இருப்பதாகவும் தகவல்கள் பரவ தொடங்கியது. இந்நிலையில் தான் பிரதீக்கின் தாய் ஷர்மிளா முக்கிய விஷயத்தை கூறியுள்ளார். சிபிஐ விசாரணை கோரி மனுத்தாக்கல் செய்துள்ள இதுபற்றி ஷர்மிளா கூறியுள்ளாதாவது:
‛‛அப்பா என்று சொல்வதற்காக மனு போட்டுள்ளார். அப்போது தான் பணம் கிடைக்கும் என்பதற்காக இந்த வழக்கு போட்டு இருக்கலாம். பையனுக்கு ஒன்றேகால் வயது இருக்கும்போதே விட்டுவிட்டு சென்றார். அம்மா, தம்பி தான் குழந்தையை வளர்த்தாங்க. பிறந்தது முதல் அவங்க தான் குழந்தையை பார்த்துகிட்டாங்க.
அவங்க அப்பா எதற்கும் கூட இல்லை. வழக்கு போட்டால் பணத்தை வாங்கி கொள்ளலாம் என்று யாராவது சொல்லியிருப்பாங்க. அதனால் தான் இந்த வழக்கை போட்டு இருப்பார். பையனுக்கு இறுதி சடங்கிற்கும் அவர் வரவில்லை. அரசு மருத்துவமனைக்கும் வரவில்லை. வீட்டுக்கும் வரவில்லை. எதற்கும் அவர் வரவில்லை. பையனின் வயது கூட தெரியவில்லை. பையனின் வயது 13 என்று போட்டுள்ளார். பையனுக்கு பால், மிட்டாய் கூட வாங்கி கொடுத்தது இல்லை. முகத்தையே பார்த்தது இல்லை. பையனுக்கு அவர் எதுவுமே செய்யவில்லை. இப்போது ஒரு திருமணம் செய்துள்ளார். அதற்கு ஆதாரங்களை ரெடி செய்து வருகிறோம்'' என்றார்.












Click it and Unblock the Notifications