கரூர் துயரம்.. மேலும் ஒரு வழக்கு பதிவு.. ஆம்புலன்ஸ் டிரைவர்களை தாக்கிய தவெக தொண்டர்களை தேடும் போலீஸ்
கரூர்: விஜய்யின் கரூர் பரப்புரை முடிந்த பிறகு, கூட்ட நெரிசலில் சிக்கியவர்களை காப்பாற்ற சென்ற ஆம்புலன்ஸ் டிரைவர்களை தாக்கி சாவிகளை பிடுங்கி தவெகவினர் அட்டூழியம் செய்ததாக போலீசார் மேலும் ஒரு வழக்கு பதிவு செய்துள்ளனர். அடையாளம் தெரியாத தவெகவினர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. வீடியோ காட்சி பதிவுகள் மூலம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள் அளித்த புகாரின் பேரில், கரூர் நகர காவல்துறையினர் தாக்குதல் நடத்துதல், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் உள்பட 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கரூரில் கூட்ட நெரிசல்
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் நேற்று முன் தினம் இரவு கரூரில் பிரச்சாரம் மேற்கொண்டார். அவரை காண ஏராளமான தொண்டர்கள் குவிந்தனர். அப்போது திடீரென கடுமையான கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த கூட்ட நெரிசலில் சிக்கி பெண்கள் 17 பேர், குழந்தைகள் 10 பேர் உள்பட மொத்தம் 40 பேர் பலியாகினர்.
இவர்களது உடல்கள் அடையாளம் காணப்பட்டு பிரேதப் பரிசோதனைக்கு பிறகு குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும் 40க்கும் மேற்பட்டோருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் உயிர் பலி இன்னும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் ஒட்டு மொத்த தமிழகத்தையும் உலுக்கியுள்ளது.
3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு
ஏற்கனவே இந்த சம்பவம் தொடர்பாக தவெக பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த், நிர்மல் குமார், கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழன் உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒருநபர் விசாரணை ஆணையமும் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணையை தொடங்கியுள்ளார்.
இதற்கிடையே தான் தவெக தொண்டர்கள் மீது மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதாவது ஆம்புலன்ஸ் டிரைவர்களை தாக்கியதாக 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தாக்குதல் நடத்துதல், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் உள்பட 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தேடி வரும் போலீஸ்
ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள் அளித்த புகாரின் பேரில், கரூர் நகர காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். அங்கு பதிவான வீடியோ காட்சிகள் அடிப்படையில் அவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
முன்னதாக ஆம்புலன்ஸை தடுத்து டிரைவர்களிடம் தவெகவினர் வாக்குவாதம் செய்தது தொடர்பான வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அப்போது ஆம்புலன்ஸை அடிச்சி உடைத்ததாகவும், 3 டிரைவர்கள் மருத்துவமனையில் அட்மிட் செய்யப்பட்டுள்ளதாகவும் ஆம்புலன்ஸ் டிரைவர்கள் வருத்தம் தெரிவித்து இருந்தனர்.
ஆம்புலன்ஸ் டிரைவர் பேச்சு
இதுபற்றி ஆம்புலன்ஸ் டிரைவர்கள் கார்த்திக் என்பவர் கூறுகையில், "நாங்கள் வேலூர், வேளாங்கன்னியில் இருக்கிறவங்க. எங்களுக்கு போன் செய்து அவசரமாக வண்டி தேவை என்று கூறினார்கள். இதனால் வேகமாக கிளம்பி வந்தோம். ஆனால் எங்களிடம் சாவியை பிடுங்கி டிரைவர்களை அடித்தார்கள். 3 ஆம்புலன்ஸ் டிரைவர்கள் அட்மிட் ஆகி உள்ளார்கள்.
ஆம்புலன்ஸ் எதற்காக சார் பயன்படுத்துகிறோம்? அவசரம் என்பதற்கு தானே சார் வருகிறோம். இங்கு உயிருக்கு போராடுகிறார்கள் என்று தான் நாங்கள் அங்கிருந்து கிளம்பி வந்தோம். ஆனால் வரும் வண்டியை எல்லாம் தடுத்து நிறுத்தி அடிச்சி உடைத்தால் என்ன செய்வது? போலீஸ் வந்து தடுக்குறாங்க. போலீசையும் மீறி வந்து அடிச்சாங்க" என்று கூறியிருந்தார்.












Click it and Unblock the Notifications