நேரடியாக ஸ்பாட்டிற்கு போன நீதிபதி அஜய் ரஸ்தோகி! விஜய் கூட்ட நெரிசல் சம்பவத்தில் தீவிரமடையும் விசாரணை
கரூர்: தவெக தலைவர் விஜய் பிரச்சாரக் கூட்டத்தில் கடந்த செப்டம்பர் மாதம் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்திருந்தனர். இது தொடர்பாக சிபிஐ இப்போது விசாரணை நடத்தி வரும் நிலையில், இதை மேற்பார்வை செய்ய அமைக்கப்பட்ட ஓய்வு பெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையிலான குழு சம்பவம் நடந்த இடத்தில் நேரில் ஆய்வு செய்தது.
தவெக தலைவர் விஜய் கடந்த செப்டம்பர் மாதம் வரையிலும் மாநிலத்தில் பல்வேறு இடங்களிலும் தொடர்ச்சியாகப் பிரச்சாரம் செய்து வந்தார். அதன்படி கடந்த செப்டம்பர் 27ம் தேதி கரூர் மாவட்டத்தில் பிரச்சாரம் செய்யச் சென்றார். அப்போது தான் மிக மோசமான ஒரு சம்பவம் நடந்தது. விஜய் பிரச்சாரத்தின்போது கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர்.

ஓய்வு பெற்ற நீதிபதி
இந்தியாவில் பிரச்சாரக் கூட்டத்தில் இந்தளவுக்கு மோசமான சம்பவம் இதற்கு முன்பு நடந்ததே இல்லை. இது தொடர்பான வழக்கை விசாரிக்கச் சிறப்பு விசாரணையைக் குழுவைத் தமிழக அரசு நியமித்திருந்தது. இருப்பினும், இது தொடர்பாக தவெக தொடர்ந்த வழக்கில் இந்த விசாரணை சிபிஐக்கு மாற்றப்பட்டது. மேலும், சிபிஐ விசாரணையை மேற்பார்வையிட ஓய்வு பெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையிலான குழுவும் அமைக்கப்பட்டது.
அஜய் ரஸ்தோகி
ஏற்கனவே சிபிஐ இந்த வழக்கு விசாரணையை ஆரம்பித்துவிட்டது. கரூர் சென்ற சிபிஐ அதிகாரிகள் சம்பவம் நடந்த இடம் மற்றும் அங்கிருந்தவர்களிடம் இது குறித்து விசாரணை நடத்தினர். இதற்கிடையே இப்போது கரூர் தவெக கூட்ட நெரிசல் விவகாரம் குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி நேரில் ஆய்வு செய்தார். இதற்காக மேற்பார்வைக் குழு தலைவர் அஜய் ரஸ்தோகி நேற்றைய தினம் கரூருக்கு சென்றார். இது தொடர்பாகப் பொதுமக்களிடம் மனுக்களும் பெறப்பட்டது.
நேரில் ஆய்வு
இந்தக் குழுவினர் கரூரிலேயே நேற்று தங்கிய நிலையில், இன்று சம்பவம் நடந்த இடத்தில் நேரில் ஆய்வு செய்தனர். வேலுச்சாமிபுரத்தில் அஜய் ரஸ்தோகி தலைமையிலான கண்காணிப்புக் குழு ஆய்வு செய்தது. உழவர் சந்தை, லைட் ஹவுஸ் கார்னர், மனோரா கார்னர் உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு செய்தனர். இது தொடர்பாக மேலும் சிலரிடம் விசாரிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே சிபிஐ அதிகாரிகள் நேரில் சென்ற விசாரித்த நிலையில், இப்போது கண்காணிப்பு குழுவினரும் விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.
கரூர் பிரச்சாரம்
கரூர் சம்பவத்தைப் பொறுத்தவரை கடந்த செப்டம்பர் 27ம் தேதி விஜய் கரூருக்கு பிரச்சாரத்திற்குச் சென்றார். விஜய் அங்குப் பிரச்சாரத்திற்கு வருவார் என்பதால் மதியம் முதலே மக்கள் கூட்டம் திரண்டது. விஜய் பிற்பகலில் வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் வர மாலை ஆகிவிட்டது. அங்கிருந்தவர்களுக்குக் குடிநீர், உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் இல்லை எனச் சொல்லப்படுகிறது. நேரம் செல்லச் செல்லக் கூட்டமும் அதிகரித்துள்ளது.
இந்தச் சூழலில் விஜய் வந்தபோது எதிர்பாராத விதமாக அங்குக் கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது. விஜய் பேசும்போதே தள்ளுமுள்ளும் ஏற்பட்டது. இதனால் விஜய் தனது பேச்சைக் கூட பாதியிலேயே முடிக்க வேண்டிய சூழலும் ஏற்பட்டிருந்தது. அங்குச் சிலர் மரத்தின் மீது ஏறி விஜய்யை பார்த்துக் கொண்டு இருந்த நிலையில், மரக்கிளை முறிந்து விழுந்ததும் உயிரிழப்புகள் அதிகரிக்கக் காரணமாக இருந்ததாகச் சொல்லப்படுகிறது.












Click it and Unblock the Notifications