‛வெயிட்டிங் லிஸ்ட் ஓவர்’.. கரூர் நெரிசலில் தவெகவினர் மீது வழக்கு பதிந்த இன்ஸ்பெக்டருக்கு புது பதவி
கரூர்: கரூரில் தவெக தலைவர் விஜய் பிரசாரத்தின்போது கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் 41 பேர் பலியாகினர். இந்த சம்பவத்தில் தவெக நிர்வாகிகளான புஸ்ஸி ஆனந்த், நிர்மல் குமார் உள்பட மற்றவர்கள் மீது வழக்குப்பதிவு செய்த கரூர் நகர காவல் ஆய்வாளர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட நிலையில் அவருக்கு புதிய பதவி வழங்கப்பட்டுள்ளது.
நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் போட்டியிட உள்ளது. இதையடுத்து மாநிலம் முழுவதும் விஜய் பிரசார பயணத்தை தொடங்கினார். கடந்த ஆண்டு செப்டம்பர் 27ம் தேதி விஜய் கரூர் வேலுச்சாமி புரத்தில் பிரசாரம் மேற்கொண்டார்.

அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் பெண்கள், குழந்தைகள் என்று மொத்தம் 41 பேர் பலியாகினர். இதுதொடர்பாக கரூர் நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
சிபிஐ விசாரணை
பிறகு சம்பவம் குறித்து விசாரிக்க எஸ்ஐடி எனும் சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டது. பிறகு உச்சநீதிமன்றம் சிபிஐ வசம் வழக்கை ஒப்படைத்தது. எஸ்ஐடிக்கு பதில் சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று தவெக சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதுதொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது.
தவெக நிர்வாகிகள் மீது வழக்கு
அதன்படி சிபிஐ தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகிறது. தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், இணை செயலாளர் நிர்மல் குமார், ஆதவ் அர்ஜூனா மற்றும் விஜய் உள்ளிட்டோரை டெல்லிக்கு அழைத்து சிபிஐ விசாரணை நடத்தி ஆதாரங்களை சேகரித்து வருகிறது.
இது ஒருபுறம் இருக்க கூட்ட நெரிசல் நடந்த சமயத்தில் புஸ்ஸி ஆனந்த், நிர்மல் குமார் மற்றும் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன் உள்பட தவெக நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இன்ஸ்பெக்டர் மணிவண்ணன்
இதில் மதியழகன் கைது செய்யப்பட்டார். இந்த தவெக நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு செய்த இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் திடீரென காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார். தமிழகத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெறுவதால் நீண்டகாலமாக ஒரே இடத்தில் பணியாற்றுவோர் பணி இடமாற்றம் செய்யப்பட்டனர்.
அந்த வகையில் மணிவண்ணன் பணி இடமாற்றம் செய்யப்பட்டார். இதற்காக உத்தரவை
தமிழகத்தின் மத்திய மண்டல ஐஜி பாலகிருஷ்ணன் பிறப்பித்தார். அதில் மணிவண்ணனுக்கு புதிய புதிய பணி ஒதுக்கீடு செய்யப்படவில்லை.
வெயிட்டிங் லிஸ்ட் டூ புது பொறுப்பு
மணிவண்ணன் காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டார். கூட்ட நெரிசல் தொடர்பான வழக்கை சிபிஐ விசாரித்து வருவதால் தான் மணிவண்ணன் காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டதாக தகவலகள் பரவின. இந்நிலையில் தான் இன்ஸ்பெக்டர் மணிவண்ணனுக்கு தற்போது புதிய பதவி வழங்கப்பட்டது.
காத்திருப்பு பட்டியலில் இருந்த அவர் கரூர் மாவட்ட எஸ்பி அலுவலகத்தின் தனிப்பிரிவு இன்ஸ்பெக்டராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான தற்காகலிக பணி நியமனம் ஆணை அவரிடம் வழங்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications