கரூர் கூட்டத்தில் என்ன நடந்தது? நெரிசலில் சிக்கி படுகாயமடைந்தவர்களை அழைத்து சிபிஐ விசாரணை
கரூர்: கரூர் தவெக பிரச்சார கூட்ட நெரிசலில் சிக்கி காயமடைந்தோரில் 4 பேர் இன்று சிபிஐ விசாரணைக்கு ஆஜராகியுள்ளனர். கடந்த 2 நாட்களில், நெரிசலில் காயமடைந்த 11 பேரிடம் விசாரணை நடந்துள்ள நிலையில், இன்று 4 பேருக்கு சம்மன் அனுப்பி விசாரணை மேற்கொள்ளப்படுகிறது.
கரூர் வேலுசாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் 27 ஆம் தேதி விஜய் பங்கேற்ற தமிழக வெற்றிக் கழக பிரச்சார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். 110 பேர் படுகாயம் அடைந்தனர். இது தொடர்பாக கரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், இணைப் பொதுச் செயலாளர் நிர்மல் குமார் உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

தமிழக அரசின் சார்பில் பரிந்துரைக்கப்பட்ட வடக்கு ஐ.ஜி அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு புலனாய்வுக் குழு இந்த வழக்கை விசாரிக்கத் தொடங்கியது. கரூர் வழக்கில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் எனவும் சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை வேண்டாம் எனவும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான உச்சநீதிமன்ற விசாரணையில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.
இந்நிலையில், கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். சில நாட்களுக்கு முன்பு ஆம்புலன்ஸ் டிரைவர்கள் அதன் உரிமையாளர்கள், வீடியோகிராபர்கள் காவல்துறை அதிகாரிகள், வியாபாரிகள் என 306 பேருக்கு சி.பி.ஐ சம்மன் அனுப்பினர். தொடர்ந்து, அக்டோபர் 30 ஆம் தேதி முதல் அவர்களை நேரில் வரவழைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதன் ஒருபகுதியாக, நெரிசல் சம்பவத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வீடு திரும்பியவர்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டு கடந்த சில நாள்களாக அவா்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், 6 ஆவது நாளாக இன்றும், காயமடைந்தவர்கள் சிபிஐ அதிகாரிகள் முன் விசாரணைக்கு ஆஜராகினர்.
நெரிசலில் காயமடைந்த 11 பேரிடம் விசாரணை நடந்துள்ள நிலையில், இன்று 4 பேருக்கு சம்மன் அனுப்பி விசாரணை மேற்கொள்ளப்படுகிறது.
அவா்களிடம் நெரிசல் ஏற்பட்டதற்கான காரணம் உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை அதிகாரிகள் கேட்டு வருவதாகத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications