கரூரில் நடந்தது என்ன? விஜய் செய்த மிகப்பெரிய தவறு.. உயிர் தப்பிய பத்திரிகையாளர் ஷாக் தகவல்
சென்னை: கரூரில் தவெக கூட்டத்தில் மக்கள் பலியான சம்பவம் தொடர்பாக மூத்த பத்திரிகையாளர் கோடீஸ்வரன் அளித்துள்ள பேட்டியில், விஜய் மேல்தான் முழுக்க முழுக்க தவறு.. பல குழந்தைகள் பலியாகி உள்ளனர். புரிதல் இல்லாத, அரசியல் தெரியாத கூட்டத்தால் நடந்த கொடூர சம்பவம் இது.. மக்கள் தனக்கு பின்னாடி வருவதை.. தன்னை சார்ந்து இருப்பதை.. பின்னாடி ஏக்கமாக வருவதை இவர் விரும்புகிறார். விஜய் இதை ரசிக்கிறார்.. அதுதான் மரணத்திற்கு காரணம் என்று மூத்த பத்திரிகையாளர் கோடீஸ்வரன் கூறி உள்ளார்.
கரூரில் நடிகர் விஜய் நடத்திய தமிழக வெற்றிக் கழக கூட்டம் மிகப்பெரிய அசம்பாவிதமாக மாறி உள்ளது. மிகப்பெரிய துயரம் அங்கே அரங்கேறி உள்ளது. மக்கள் கொத்து கொத்தாக பலியாகி வரும் நிலையில், பலி எண்ணிக்கை மேலும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சம்பவம் நாட்டையே உலுக்கி உள்ளது.
மூத்த பத்திரிகையாளர் கோடீஸ்வரன்- அதிர்ச்சி தகவல்
இது தொடர்பாக மூத்த பத்திரிகையாளர் கோடீஸ்வரன் ஒன்இந்தியாவிடம் அளித்துள்ள பேட்டியில், ஒரு கூட்டத்திற்கு 2 மணி நேரம் காத்திருக்க சொல்லலாம். 5-6 மணி நேரம் காத்திருக்க சொல்வது என்ன நியாயம். மக்கள் தனக்கு பின்னாடி வருவதை.. தன்னை சார்ந்து இருப்பதை.. பின்னாடி ஏக்கமாக வருவதை இவர் விரும்புகிறார். விஜய் இதை ரசிக்கிறார்.

கூட்டம் கலைந்து விடும்.. எல்லாரும் இருக்க வேண்டும் என்பதற்காக இழுத்துக்கொண்டே செல்கிறார். அவரின் தவறுதான் இது. ஒரு உயிர் போய்விடுமே என்று கூட யோசிக்காமல் இவர்கள் செயல்படுகிறார்கள். இவர்கள் வராமல் இருந்தால்.. எப்பா மரத்து மேலே ஏற வேண்டாம் என்று சொல்கிறார்கள். ஆனால் அதை கூட கேட்காமல் இவர்கள் கூட்டம் கூட்டுகிறார்கள். நானே கூட்டத்தில் இருந்து தப்பி வந்து இருக்கிறேன். அவ்வளவு மோசமான சூழல் உள்ளது.
மாவட்டம் மாவட்டமாக சனிக்கிழமை கூட்டம் கூட்டுவேன். தண்ணீர் கூட கொடுக்க மாட்டேன். வெயிலில் நிற்க வைப்பேன் என்று செய்வது என்ன அரசியல். மக்கள் இவருக்கு நல்ல பாடம் கொடுப்பார்கள். எடப்பாடி இதே இடத்தில் கூட்டம் கூட்டினார். ஆனால் அங்கே இப்படி எதுவும் நடக்கவில்லை.
குழந்தைகள் மரணம்
மக்களை விஜய் தனது ஆதாயத்திற்கு என்று பயன்படுத்திக்கொண்டார். என்ன சொல்வது என்றே தெரியவில்லை. மனசு பாரமாக இருக்கிறது. பெத்தவர்கள் செய்த தவறுக்கு.. குழந்தைகள் கூட பலியாகி உள்ளனர். அரசியல் என்னவென்று தெரியாமல்.. இவர்கள் கூட்டிய கூட்டம்.. அரசியல் அறிவற்ற கூட்டம்தான் இதற்கு காரணம்.
மதுரை மாநாடு, திருச்சி மாநாட்டில் இருந்து கத்திக்கொண்டு இருந்தேன். ஏதாவது நடக்கும் என்று எச்சரித்தேன். விஜய்க்கு கூட்டம் சேர்கிறது.. 20 சதவிகிதம் வாங்குவார்.. 30 சதவிகிதம் வாங்குவார் என்றெல்லாம் பேசினார்கள். ஆனால் கூட்டத்தை முதலில் கட்டுப்படுத்துங்கள் என்று கூறினேன்.
வேலுசாமிபுரத்தில் இருந்து அசம்பாவிதம் நடந்த இடத்திற்கு வந்துள்ளேன். இங்கே மக்கள் உதவி வேண்டி நிற்கும் இடத்தில் தவெக தொண்டர்களே இல்லை. முழுக்க முழுக்க திமுக, அதிமுக தொண்டர்கள்தான் இருக்கிறார்கள். மனித சங்கிலி போட்டு உதவி செய்து கொண்டு இருக்கிறார். இங்கே தவெக தொண்டர்களே இல்லை.
செல்பி எடுக்க வந்தவர்கள்.. செல்பி எடுத்துவிட்டு போய்விட்டார்கள். இங்கே திமுக, அதிமுகவினர் இருக்கிறார்கள். இதுதான் அரசியல். என்ன மோதல் என்றாலும் மக்களுக்கு ஒன்று என்றால் இவர்கள் ஒன்றாக வருகிறார்கள். ஆனால் தவெக கூட்டத்தினர் யாரும் இல்லை., இதுதான் அரசியல் தெரியாத கூட்டம், என்று கூறி உள்ளார்.


Click it and Unblock the Notifications
