கரூரில் விஜய்யின் வாகனத்தை மையப் பகுதிக்குள் போக நிர்பந்தம் செய்ததே காரணம்.. கிருஷ்ணசாமி புகார்
கரூர்: விஜய் நாமக்கல்லிலிருந்து கூட்ட நிகழ்வுப் பகுதிக்கு வந்தபோதே, எண்ணற்ற மக்கள் கூடியிருந்தனர். அவரது வாகனம் வேலுச்சாமிப்புரத்தின் நுழைவுப் பகுதியில் நிறுத்தப்பட்டுப் பேச அனுமதித்திருந்தால் கூட, இவ்வளவு நெரிசல் ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லை. ஆனால், பிரச்சாரக் கூட்டத்தின் நெரிசல் நிறைந்த மையப் பகுதிக்குள் அவரது பிரச்சார வாகனத்தைச் செலுத்தச் சொல்லி, காவல்துறை நிர்ப்பந்தம் கொடுத்ததே இத்தனை பேர் மரணமடையக் காரணமாகியுள்ளது என்று புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.
புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி வெளியிட்ட பதிவில் கூறுகையில், "நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் அவர்களின் கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள், பெண்கள், முதியோர் என 40-க்கும் மேற்பட்டோர் மரணமடைந்தனர் என்ற செய்தி மிகுந்த வருத்தத்தையும், அதிர்ச்சியையும் அளிக்கிறது. அவர்களின் குடும்பத்தாருக்குப் புதிய தமிழகம் கட்சியின் சார்பாக ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

திரை உலகின் பிரபலம் என்பதாலும், புதிதாக அரசியல் கட்சியைத் தொடங்கியுள்ளதாலும் அவரது நிகழ்ச்சிக்குக் கட்டுக்கடங்காத கூட்டம் சேர்வது இயல்பு. ஜனநாயகத்தில் அனைவருக்கும் கூட்டம் கூட்டுவதற்கு உரிமை உண்டு. ஆனால், தொடக்கம் முதலே விஜய் அவர்களின் கூட்டங்களுக்கு நடைமுறைக்கு ஒத்துவராத கட்டுப்பாடுகளை விதிப்பது வாடிக்கையாக இருந்து வருகிறது.
துவக்கத்தில் கரூரில் பேசுவதற்கு அனுமதி அளிக்கப்படவில்லை. பிறகு, வேண்டா வெறுப்பாக கரூர் - ஈரோடு சாலையில் உள்ள வேலுச்சாமிபுரம் என்ற பகுதியில், 22 அடி அகலம் மற்றும் 200 அடி நீளம் மட்டுமே விஸ்தாரணம் உள்ள மிகக் குறுகலான சாலை ஒதுக்கப்பட்டுள்ளது. அவருக்கு எவ்வளவு கூட்டம் வரும் என்று காவல்துறைக்குத் தெரிந்திருந்தும், அக்குறுகலான இடத்தை ஒதுக்கியது ஏன்?
மேலும், அவர் நாமக்கல்லிலிருந்து கூட்ட நிகழ்வுப் பகுதிக்கு வந்தபோதே, எண்ணற்ற மக்கள் கூடியிருந்தனர். அவரது வாகனம் வேலுச்சாமிப்புரத்தின் நுழைவுப் பகுதியில் நிறுத்தப்பட்டுப் பேச அனுமதித்திருந்தால் கூட, இவ்வளவு நெரிசல் ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லை. ஆனால், பிரச்சாரக் கூட்டத்தின் நெரிசல் நிறைந்த மையப் பகுதிக்குள் அவரது பிரச்சார வாகனத்தைச் செலுத்தச் சொல்லி, காவல்துறை நிர்ப்பந்தம் கொடுத்ததே இத்தனை பேர் மரணமடையக் காரணமாகியுள்ளது.!
கூட்ட அனுமதி வழங்குவதில், தமிழ்நாடு அரசு ஆளுங்கட்சிக்கு ஓர் அளவுகோலும், எதிர்க்கட்சிகளுக்கு ஒரு அளவுகோலும் கொள்ளக் கூடாது; காவல்துறை நடுநிலையோடு நடந்துகொள்ள வேண்டும். இந்த உயிரிழப்புகளுக்குத் தமிழக அரசும், காவல்துறையும்மே பொறுப்பேற்க வேண்டும்" இவ்வாறு கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications