கரூர் துயரச் சம்பவம்: விஜய் பிரச்சார வாகனத்தின் CCTV காட்சிகள் சிபிஐ அதிகாரிகளிடம் ஒப்படைப்பு!
கரூர்: கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு சம்பவம் தொடர்பான சிசிடிவி ஆதாரங்களை கேட்டு சிபிஐ சம்மன் அளித்திருந்த நிலையில், வீடியோ ஆதாரங்களை சிபிஐயிடம் ஒப்படைத்துள்ளது தவெக. சிபிஐ அதிகாரிகளை நேரில் சந்தித்து சிசிடிவி காட்சி தகவல்களை தவெக நிர்வாகிகள் ஒப்படைத்துள்ளனர்.
தவெக தலைவர் விஜய் கடந்த செப்டம்பர் 27 ஆம் தேதி கரூர் வேலுசாமிபுரத்தில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது மிகக் கடுமையான கூட்ட நெரிசல் ஏற்பட்டு மொத்தம் 41 நபர்கள் உயிரிழந்துள்ளனர். கரூர் கோரச் சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களான அக்கட்சியின் பொதுச் செயலாளர் என். ஆனந்த், இணைப் பொதுச் செயலாளர் சிடிஆர் நிர்மல்குமார், கரூர் மேற்கு மாவட்டச் செயலாளர் மதியழகன் உள்ளிட்டோர் மீது ஐந்து பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.

கரூர் துயரச் சம்பவம் குறித்து விசாரணை நடத்த தமிழ்நாடு அரசு ஓய்வு பெற்ற நீதியரசர் அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் ஆணையம் அமைத்து உத்தரவிட்டது. தவெக தரப்பில் சிபிஐ விசாரணை கோரி வழக்கு தொடரப்பட்ட நிலையில், கரூர் சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரிக்க உத்தரவிட்டது உச்சநீதிமன்றம். சிபிஐ விசாரணையை கண்காணிக்க ஓய்வுபெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையில் மூத்த ஐபிஎஸ் அதிகாரிகள் சுமித் சரண், சோனல் பி.மிஸ்ரா ஆகியோர் கொண்ட குழுவையும் உச்சநீதிமன்றம் நியமித்தது.
கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான வழக்கில் சிபிஐ அதிகாரிகள் 3 குழுவாக பிரிந்து விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். ஆம்புலன்ஸ் டிரைவர்கள், உரிமையாளர்கள் நேரில் ஆஜராகி விளக்கமளித்தனர். வேலுச்சாமிபுரத்தை சேர்ந்த 306 பேருக்கு விசாரணைக்காக நேரில் ஆஜராகும்படி சம்மன் அனுப்பி விசாரித்து வருகிறது சிபிஐ.
சிபிஐ அதிகாரிகள் அண்மையில் சென்னை பனையூர் அலுவலகத்தில் விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணை சுமார் ஒரு மணி நேரம் நீடித்தது. இதனை தொடர்ந்து தவெக இணைப் பொதுச் செயலாளர் சி.டி.ஆர்.நிர்மல் குமார் பத்திரிகையாளர்களை சந்தித்தார்.
அபோது பேசிய அவர், "கரூர் விவகாரத்தில் சிபிஐ அதிகாரிகள் சம்மன் கொடுக்க வந்தனர். சிசிடிவி ஆதாரங்கள், பரப்புரையில் கலந்துக்கொண்டவர்களின் விவரங்களை அதிகாரிகள் கேட்டுள்ளனர். 3 நாட்களுக்குள் ஆதாரங்களை அதிகாரிகளிடம் ஒப்படைத்து விடுவோம். நாங்கள் ஆஜராக சம்மன் அளிக்கப்பட்டால் எங்கள் தரப்பில் ஆஜராகி விளக்கம் கொடுப்போம்" எனக் கூறினார்.
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகளை கேட்டு சிபிஐ நோட்டீஸ் அளித்தது. விஜய் தனி கேமராமேன் எடுத்த காட்சிகள், விஜய்யின் பிரச்சார பேருந்தில் இருந்து எடுக்கப்பட்ட காட்சிகளையும் சிபிஐ அதிகாரிகள் கேட்டனர். இந்நிலையில், வீடியோ ஆதாரங்களை சிபிஐயிடம் ஒப்படைத்தது தவெக. சிபிஐ அதிகாரிகளை நேரில் சந்தித்து சிசிடிவி காட்சி தகவல்களை தவெக நிர்வாகிகள் ஒப்படைத்துள்ளனர்.


Click it and Unblock the Notifications
