தாக்கி, தகாத வார்த்தைகள் பேசி.. ஐடி அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது ஏன்? என்னென்ன பிரிவு?
கரூர் : அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் நடத்தப்பட்ட ரெய்டின்போது தகராறு ஏற்பட்டது தொடர்பாக 50க்கும் மேற்பட்டோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். வருமான வரித்துறை அதிகாரிகள் மீது, தாக்கியது, தகாத வார்த்தைகளில் திட்டியது ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரரின் வீடு, அலுவலகங்கள் மற்றும் டாஸ்மாக் மற்றும் மின்சாரத்துறை ஒப்பந்ததாரர்கள், அவர்களது நண்பர்கள், உறவினர்களின் வீடு, அலுவலகம் உட்பட தமிழ்நாடு முழுவதும் 40-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

கரூர் ராமகிருஷ்ணபுரத்தில் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக்குமாரின் வீட்டுக்கு வருமான வரித்துறை அதிகாரிகள் சென்ற தகவல் கிடைத்ததும், மாநகராட்சி மேயர் கவிதா உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் அங்கு குவிந்தனர். அடையாள அட்டையை காட்டுமாறு வருமான வரித் துறை அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, அதிகாரிகள் தன்னை தாக்கியதாக கூறி திமுக பிரமுகர் ஒருவர் திடீரென மயங்கி விழுந்தார். திமுகவினர் அவரை மருத்துவமனையில் சேர்த்தனர். இதனால் திமுகவினர் கோபமடைந்து, வருமான வரி அதிகாரிகளின் கார் மீது கல்வீசி தாக்கினர். அதைத் தொடர்ந்து சோதனை நடத்த முடியாத நிலை ஏற்பட்டதால், அங்கிருந்து புறப்பட்ட வருமான வரித் துறை அதிகாரிகள், நகர காவல் நிலையத்துக்கு சென்று தஞ்சமடைந்தனர்.
பின்னர், வருமான வரித் துறை அதிகாரிகள் 4 பேர், ரெய்டு செய்யச் சென்றபோது திமுகவினர் தங்களை தாக்கியதாக கரூர் மாவட்ட எஸ்.பி அலுவலகத்தில் புகார் கொடுத்துவிட்டு, கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தனர்.
இந்நிலையில், வருமான வரித்துறை சோதனையின்போது தாக்குதல் நடத்தியதாக கரூர் நகர காவல் நிலையத்தில் அதிகாரிகள் கொடுத்த புகாரின் பேரில் 50 பேர் மீது அரசு அதிகாரிகளை பணி செய்யவிடாமல் தடுத்தது, சோதனையின் போது ஒன்றாகக் கூடியது, பொது சொத்துக்கு சேதம் விளைவித்தல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதேபோல், திமுக பிரமுகர் அளித்த புகாரின் பேரில் வருமான வரித்துறை அதிகாரிகள் 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. திமுக தொண்டரை வருமான வரித்துறை அதிகாரி தாக்கியதாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
வருமான வரித்துறை அதிகாரிகள் 3 பேர் மீது, கையால் தாக்கியது, தகாத வார்த்தைகளில் திட்டியது ஆகியவற்றிற்காக ஐபிசி 294 பி, 323 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications