ஆட்டு குட்டிய தூக்குன மாதிரி..சின்னஞ்சிறு சிறுமியை தூக்கிட்டு போய் திருமணம்! கிறுகிறுத்த கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே ஒரு மலை கிராமத்தில் சிறுமிக்கு கட்டாய திருமணம் செய்து வைத்ததோடு அந்த சிறுமியை வலுக்கட்டாயமாக தாலி கட்டியவர் தூக்கிச் சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பதைபதைப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக திருமணம் முடித்த மாதேஷ், அவரது சகோதரர் மல்லேஷ், சிறுமியின் தாய் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்
தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக 18 வயது உட்பட்ட பெண் குழந்தைகள் பாலியல் வன்கொடுமை செய்யப்படுவதும் கட்டாய திருமணம் செய்து வைக்கப்படுவதும் அதிகரித்து வருகிறது.

தமிழகத்தில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 30க்கும் மேற்பட்ட பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நடைபெற்று இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென எதிர்க்கட்சிகளும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் 14 வயது சிறுமியை கட்டாய திருமணம் செய்து அவரை கொண்டு கட்டாக தூக்கிச் சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. ஓசூர் அருகே அஞ்செட்டி பகுதி இருக்கிறது. அதற்கு அருகே சிக்கமஞ்சி, கிரியானூர், வெள்ளட்டி, தொட்டமஞ்சு உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட மலை கிராமங்கள் இருக்கிறது. கடல் மட்டத்திலிருந்து சுமார் 3000 அடி உயரத்தில் இருக்கும் இந்த கிராமங்களில் 5000 க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.
இவர்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை அஞ்செட்டி வந்து வாங்கிவிட்டு 20 கிலோமீட்டர் பயணம் செய்து தங்கள் சொந்த கிராமங்களுக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. அவர்கள் படிப்பதற்காக பத்தாம் வகுப்பு வரை அரசு பள்ளி உள்ளது. மேற்படிப்பு பணிக்க வேண்டுமென்றால் அஞ்செட்டிக்கு தான் வந்து செல்ல வேண்டும். தொலைதூரப் பயணம் காரணமாக அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் பெண் குழந்தைகளை பத்தாம் வகுப்புக்கு மேல் படிக்க வைப்பதில்லை எனக் கூறப்படுகிறது.
அதேபோல பள்ளி படிப்பை முடித்த உடனே அவர்களுக்கு குழந்தை திருமணம் செய்து வைப்பதாகவும் குற்றச்சாட்டு இருக்கிறது. அப்பகுதிகளில் கடந்த சில ஆண்டுகளில் மட்டும் 50க்கும் மேற்பட்ட குழந்தை திருமணங்கள் நடைபெற்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அதே ஊரைச் சேர்ந்த ஏழாம் வகுப்பு வரை படித்த 14 வயது சிறுமி இந்த நிலையில் அந்த சிறுமிக்கும் காலிகுட்டை பகுதியை சேர்ந்த 30 வயதான மாதேஷ் என்பவருக்கும் கடந்த மூன்றாம் தேதி பெங்களூருவில் கட்டாய திருமணம் நடைபெற்று இருக்கிறது.
இந்த நிலையில் இன்று அந்த சிறுமியை மலை கிராமத்தில் உள்ள மாதேஷின் வீட்டிற்கு அழைத்து வந்திருக்கிறார்கள். ஆனால் தனக்கு இந்த திருமணத்தில் விருப்பம் இல்லை என வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார். இதை அடுத்து மாதேஷும் அவரது உறவினர்களும் சிறுமியை வலுக்கட்டாயமாக தூக்கிக்கொண்டு மீண்டும் கணவர் வீட்டில் விட்டு இருக்கின்றனர். அப்போது அங்கிருந்து சிலர் அதனை வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டனர்.
தற்போது அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி நிலையில் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது. இதை அடுத்து இந்த சம்பவம் தொடர்பாக காலி குட்டியைச் சேர்ந்த திருமணம் செய்த மாதேஷ், அவரது சகோதரரான மல்லேஷ், சிறுமியின் தாயார் ஆகியோர் கைது செய்யப்பட்டு இருக்கின்றனர். அவர்கள் மீது போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.












Click it and Unblock the Notifications