பெற்றோர்களுக்கு கோவில்..இலவச குடிநீர்..பூர்வீக கிராமத்தில் அசத்தும் ரஜினி..ஆனாலும் மனக்குறை இருக்கு
கிருஷ்ணகிரி: நடிகர் ரஜினிகாந்த் தனது பூர்வீக கிராமமான கிருஷ்ணகிரி மாவட்டம் நாச்சிக்குப்பம் கிராமத்தில் பெற்றோருக்கு சிலை வைத்து நினைவகம் அமைத்துள்ளார். கிராம மக்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீரும் ஆடு மாடுகளுக்கு குடிநீரும் வழங்கி வருகிறார் என்றாலும் ரஜினிகாந்த் நேரடியாக வரவில்லையே என்பது நாச்சிக்குப்பம் கிராம மக்களின் மனக்குறையாக உள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி ஒன்றியத்துக்கு உட்பட்ட கிராமம் நாச்சிக்குப்பம். தமிழகம், ஆந்திரா, கர்நாடகா மூன்று மாநில எல்லைகள் சந்திக்கும் இடத்தில் இந்த கிராமம் உள்ளது. நடிகர் ரஜினிகாந்தின் மூதாதையர்கள், பெற்றோர் இக்கிராமத்தில் வாழ்ந்துள்ளனர். இன்றைக்கும் ரஜினியின் உறவினர்கள், இக்கிராமத்தில் வசித்து வருகின்றனர். அம்மா ரமாபாய், தந்தை ராமோஜி ராவ். அவருக்கு கான்ஸ்டபிள் ஆக வேலை கிடைக்கவே ரஜினியின் குடும்பம் பெங்களூருவிற்கு குடியேறியது.

ரஜினியின் அண்ணன் சத்தியநாராயண ராவ், உறவினர்களின் சுக துக்க நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார்.
இந்நிலையில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு நடிகர் ரஜினி, தன் பூர்வீக கிராமத்தில் தனது பெற்றோர் ராமோஜிராவ் - ரமாபாய் நினைவகம் அமைப்பதற்காக 2.40 ஏக்கர் நிலத்தை வாங்கினார். இதற்காக அவரது அண்ணன் சத்தியநாராயண ராவ் மூலம் அப்போதே அடிக்கல் நாட்டினார். நிலத்தைச் சுற்றிலும் வேலி அமைக்கப்பட்டு, பெயர் பலகை வைக்கப்பட்டது. ஆனால் எவ்வித பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை. இருப்பினும் அவரது ரசிகர்கள் பொங்கல் விழா, நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகளை அந்த இடத்தில் நடத்தி வந்தனர்.
சில ஆண்டுகளுக்கு முன்பு ரசிகர்களின் தொடர் கோரிக்கையால் தனது ராகவேந்திரா மண்டபத்தில் ரசிகர்களை சந்தித்தார் ரஜினி. அப்போது கிருஷ்ணகிரியைச் சேர்ந்த கார்த்திகேயன் என்ற ரசிகர்,நீங்கள் பிறந்த ஊரான நாச்சிக்குப்பத்தில் உங்களது பெற்றோர்க்கு நினைவு மண்டபம் கட்டுவீர்களா?" என்று கேட்டார். அதற்கு பதிலளித்த ரஜினி, கண்டிப்பாக கட்டுவேன் என கூறி உறுதி கொடுத்தார். ரஜினியே எதிர்பார்க்காத அந்தக் கேள்வியை கேட்ட ரசிகருக்கு கிருஷ்ணகிரி மாவட்டத்தில் முக்கிய பொறுப்பை கொடுத்தார்.
பிறந்த வீட்டின் தற்போதைய சூழல் எல்லா வற்றையும் அவ்வப்போது கேட்டு தெரிந்து கொண்ட ரஜினி தனது அண்ணன் சத்யநாராயணாவை நாச்சிக்குப்பம் கிராமத்திற்கு அனுப்பி பார்க்க வைத்தார். அங்கு ரஜினியின் மாமா துக்காராம், அத்தை சரஸ்வதிபாய் ஆகியோர் பூர்வீக வீட்டில் வசித்து வந்திருக்கிறார்கள்.
இந்நிலையில், கடந்த 2 ஆண்டுகளாக நாச்சிக்குப்பம் கிராமத்தில் உள்ள நிலத்தை ரஜினியின் அண்ணன், நேரடியாக பராமரித்து வந்தார். அங்கு ரஜினியின் பெற்றோர் ரானோஜிராவ் - ராம்பாய் சிலைகளுடன் நினைவகம் கட்டப்பட்டுள்ளது. மேலும், கிராம மக்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீரும், கால்நடைகளுக்கு தனியாக தண்ணீரும் வழங்கி வருகின்றனர்.
ரஜினிகாந்த் பெற்றோர்களுக்கு நினைவிடம் கட்டப்பட்டு நலத்திட்ட பணிகள் நடைபெற்றாலும் இங்கு ஒருமுறை கூட ரஜினி நேரில் வரவில்லையே என்பது கிராம மக்களின் குறையாக உள்ளது. இதுகுறித்து கிராம மக்கள் கூறும்போது, ரஜினிகாந்த் எங்கள் ஊர்காரர் என்பது, பெருமையாக இருந்தாலும், இதுவரை அவர் ஒரு முறை கூட வரவில்லை என்பது பெரிய மனக்குறையாக உள்ளது. அரசியலுக்கு வந்திருந்தால், ஒருவேளை அவர் இங்கு வர வாய்ப்பு இருந்திருக்கும். தற்போது பெற்றோருக்கு சிலை வைத்து நினைவகம் அமைக்கப்பட்டுள்ளதால், ரஜினி ஒருமுறையாவது வருவார் என நம்புகிறோம் என்று கூறினர்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ரஜினியின் அண்ணன் சத்தியநாராயண ராவ் கடந்த 2022ஆம் ஆண்டு பெற்றோருக்கு நினைவகம் கட்டி முடிக்கப்பட்டு, பிரதிஷ்டை செய்யப்பட்டது. கிராம மக்களுக்கும், கால்நடைகளுக்கும் குடிநீர் வழங்கும் வகையில் மேல்நிலை நீர்தேக்க தொட்டி கட்டப்பட்டு, அங்கிருந்து குழாய்கள் அமைத்து தண்ணீர் வழங்கப்படுகிறது என்று கூறினார்.
இங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை ரஜினிக்கு வீடியோக்கள், படங்கள் எடுத்து அனுப்பி வைத்தும், தகவல்கள் பரிமாறிக் கொள்கிறோம். இங்கு வர வேண்டும் என்கிற ஆசை அவருக்கும் உள்ளது. ஆனால் தொடர்ந்து படப்பிடிப்பு உள்ளிட்ட காரணங்களால் தள்ளிப் போகிறது. நிச்சயம் இங்கு ரஜினி ஒருநாள் வருவார். நான் அடிக்கடி இங்கு வந்து பணிகளை மேற்பார்வை செய்கிறேன் என்று கூறினார்.












Click it and Unblock the Notifications