டாஸ்மாக்கில் மெகா ஊழல்.. 4 ஆண்டுகளில் 1 லட்சம் கோடி கொள்ளை! பகீர் கிளப்பும் அதிமுக வி.பன்னீர்செல்வம்
கிருஷ்ணகிரி: கடந்த 4 ஆண்டுகளில் 40% மதுபாட்டில்கள் முறைகேடு செய்து 1 லட்சம் கோடி ரூபாய் பணம் கொள்ளை அடித்தது ஸ்டாலின் குடும்பம் எனவும், 40% மதுபாட்டில்கள் கோபாலபுரம் கட்டுப்பாட்டில் முறைகேடாக விற்பனை செய்யப்பட்டதாக கூறியுள்ளார் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ.வான வி.பன்னீர்செல்வம்.
தமிழ்நாடு ஸ்டேட் மார்க்கெட்டிங் கார்ப்பரேஷன் எனப்படும் டாஸ்மாக் தமிழகத்தில் தற்போது மதுபான விற்பனையில் ஈடுபட்டு வருகிறது. இதற்காக தமிழ்நாடு முழுவதும் சில்லறை மது விற்பனை கடைகள் இருக்கிறது. இங்கு பல்வேறு தனியார் மது உற்பத்தி நிறுவனங்களின் மது வகைகள் விற்கப்படுகிறது.

இதில் நிர்ணயித்த விலையை விட கூடுதல் விலைக்கு மது பாட்டில்கள் விற்பனை செய்யப்படுவதாகவும், மேலும் கணக்கில் காட்டாமல் தனியார் மது உற்பத்தி நிறுவன உரிமையாளருடன் சேர்ந்து முறைகேடு நடப்பதாக புகார் கூறப்படுகிறது.
இந்த நிலையில் அந்த தகவலின் அடிப்படையில் சென்னை, கரூர், கோவை உள்ளிட்ட தமிழகம் முழுவதும் பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த வியாழக்கிழமை முதல் சோதனை நடத்தினர். ஒரு சில இடங்களில் சோதனை முடிவடைந்த நிலையில், சென்னை, புதுக்கோட்டை, கோவை , ஆகிய பகுதிகளில் சோதனை சனிக்கிழமை வரை நீடித்தது.
சென்னை எழும்பூரில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகம், அம்பத்தூர் டாஸ்மாக், திமுக எம்பி ஜெகத்ரட்சகன் சொந்தமான அக்காடு டிஸ்டிலர்ஸ் மதுபான நிறுவனம் அக்கார்டு ஹோட்டல், ஆயிரம் விளக்கு உள்ள எஸ்என்ஜெ டிஸ்டிலரீஸ், டி நகரில் உள்ள கால்ஸ் மதுபானம், சிவா டிஸ்டிலரீஸ், மயிலாப்பூர் ஆர் கே சாலையில் உள்ள எம்ஜிஎம் மதுபானம் நிறுவனம் ஆகிய இடங்களில் வெள்ளிக்கிழமை வரை சோதனை நடைபெற்ற நிலையில், சில முக்கிய ஆவணங்கள் சிக்கியதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், கடந்த 4 ஆண்டுகளில் 40% மதுபாட்டில்கள் முறைகேடு செய்து 1 லட்சம் கோடி ரூபாய் பணம் கொள்ளை அடித்தது ஸ்டாலின் குடும்பம் என குற்றம் சாட்டியுள்ளார் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ.வான வி.பன்னீர்செல்வம். கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட அதிமுகவில் பூத் கமிட்டி அமைப்பது, கட்சி வளர்ச்சி பணிகளை துரிதப்படுத்த பூத் கமிட்டி நிர்வாகிகளுக்கான ஆலோசனை கூட்டம் நடைப்பெற்றது. அந்த நிகழ்ச்சியில் பேசிய அவர்," கடந்த 4 ஆண்டுகளில் மது ஆலையிலிருந்து 60 % மதுபாட்டில்கள் தான் டாஸ்மாக் குடோன்கள் மூலம் மதுபான கடைகளுக்கு விநியோகம் செய்யப்பட்டுள்ளது. மீதம் 40% மதுபாட்டில்கள் கோபாலபுரம் கட்டுப்பாட்டில் நேரடியாக ஆலைகளில் இருந்து டாஸ்மாக் கடைகளுக்கே கொண்டு செல்லப்பட்டு முறைகேடு செய்துள்ளனர். கடந்த 4 ஆண்டுகளில் 1 லட்சம் கோடி ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது" என்றார்.












Click it and Unblock the Notifications