‛எல்லாமே பொய்’ .. ராணுவ வீரர் கொலையில் வீடியோ வெளியிட்ட ஹவில்தார் ரகு.. போலீஸ் கடும் எச்சரிக்கை
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியை அடுத்த வேலம்பட்டியில் ராணுவ வீரர் பிரபு அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி ராணுவ வீரர் பிரபு கொலை தொடர்பாக ராணுவ ஹவில்தார் ரவி வீடியோ ஒன்று வெளியிட்டு போலீசார் மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். இந்நிலையில்அதற்கு கிருஷ்ணகிரி போலீசார் மறுப்பு தெரிவித்துள்ளனர். அவர் சொல்வது உண்மையில்லை என போலீசார் தெரிவித்துள்ள நிலையில் அந்த வீடியோவை ட்விட்டரில் பகிர்ந்தவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த வேலம்பட்டி எம்ஜிஆர்நகரை சேர்ந்தவர் சின்னசாமி (50). இவர் நாகோஜனஹள்ளி பேரூராட்சி 1வது வார்டில் திமுக சார்பில் போட்டியிட்டு கவுன்சிலராக இருந்து வருகிறார். அதேபகுதியில் பிரபாகரன்(30), பிரபு(29) ஆகியோர் வசித்தனர். சகோதரர்களான இவர்கள் 2 பேரும் இருவரும் ராணுவத்தில் பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில் தான் பொது தண்ணீர் தொட்டி அருகே துணி துவைத்ததை கவுன்சிலர் சின்னசாமி கண்டித்துள்ளதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக பிரபாகரன் குடும்பத்துக்கும், சின்னசாமிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ராணுவ வீரர் பிரபு உயிரிழப்பு
இதில் கவுன்சிலர் சின்னசாமி தனது குடும்பத்தினருடன் சென்று ராணுவ வீரர்களான பிரபாகரன், பிரபு மற்றும் குடும்பத்தினரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதையடுத்து பிரபாகரன் உள்ளிட்ட அவரது குடும்பத்தினர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் ராணுவ வீரரான பிரபு கடந்த 14ம் தேதி உயிரிழந்தார்.

9 பேர் கைது
இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது திமுக கவுன்சிலர் தாக்கியதில் ராணுவ வீரர் பிரபு உயிரிழந்ததாக தகவல்கள் பரவின. இதற்கு பாஜக, அதிமுகவினர் கடும் கண்டனம் தெரிவித்தனர். தமிழ்நாட்டில் ராணுவ வீரருக்கே பாதுகாப்பு இல்லை என அவர்கள் திமுக அரசை கடுமையாக விமர்சனம் செய்தனர். இதற்கிடையே சம்பவம் குறித்த புகாரில் நாகரசம்பட்டி போலீசார் கவுன்சிலர் சின்னசாமி, குருசூர்யமூர்த்தி, குணாநிதி, ராஜபாண்டி, மணிகண்டன், மாதையன், புலிபாண்டி, வேடியப்பன், காளியப்பன், உள்ளிட்டர்வகளை கைது செய்தனர்.

எஸ்பி விளக்கம்
இந்நிலையில் தான் கிருஷ்ணகிரி எஸ்பி சரோஜ் குமார் நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது, ‛‛ராணுவ வீரர் கொலையில் 9 பேர் கைது செய்பய்பட்டுள்ளனர். இதில் அரசியல் உள்நோக்கம் இல்லை. இதில் சம்பந்தப்பட்டவர்கள் உறவினர்கள் தான். சாதாரண கைக்கலப்பு கொலையாக மாறியுள்ளது. இதில் உள்நோக்கம் இல்லை. இதில் தவறான நோக்கத்தில் தகவல் வெளியிடும் நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்'' என எச்சரித்து இருந்தார்.

ஹவில்தார் ரகு வீடியோ
இந்நிலையில் இணையதளத்தில் ஒரு வீடியோ பரவுகிறது. அதில் பிரபுவின் கண்ணீர் அஞ்சலி பேனர் முன்பு நின்றபடி ஒருவர் பேசுகிறார். அந்த நபர், ‛‛என் பெயர் ரகு. கிருஷ்ணகிரி மாவட்டம் கொண்டைப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவன். ராணுவத்தில் 15 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறேன். ஹவில்தாராக இருக்கிறேன். எனது நண்பர் பிரபு அசம்பாவிதத்தால் கொலை செய்யப்பட்டுள்ளார். அவரை பார்க்க வந்தேன். அதாவது கடந்த ஜனவரி மாதம் எனக்கும் இதேபோன்ற சம்பவம் நடந்தது. என்னையும், குடும்பத்தையும் கொலை செய்ய முயற்சித்தார்கள். கடந்த 6ம் தேதி வீட்டுக்கு கெஸ்ட்டாக சென்றபோது சிலர் வழிமறித்து கொலை செய்ய முயன்றனர். இந்த வீட்டுக்கு என் வந்துள்ளீர்கள் என கேட்டு மிரட்டினார்கள்.

தற்காப்புக்காக தாக்குதல்
என்னுடன் வந்த பெண்களையும் தாக்கினார்கள். தற்காப்புக்காக குமரேசன் என்பவரை தான் தாக்கினேன். என்னுடன் வந்தவர்கள் காயமடைந்ததால் கிருஷ்ணகிரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றோம். கிருஷ்ணகிரி தாலுகா போலீசில் புகார் செய்தோம். 5 நாட்களாக நடவடிக்கை எடுக்கவில்லை. 12ம் தேதி காலையில் போலீசார் வந்து என்னை அழைத்து சென்றனர். ஸ்டேஷனில் வைத்து எனது விபரங்களை மட்டும் கேட்டு கொண்டு வழக்கு தொடர்பாக விசாரிக்கவே இல்லை. இதையடுத்து மருத்துவமனை அழைத்து சென்று சோதனைகள் செய்து மாலையில் 8 மணிக்கு கைது நடவடிக்கைக்கான ஆவணங்களை காட்டினர்'' என கூறியுள்ளார்.

உண்மையில்லை என கூறும் போலீஸ்
இதுதொடர்பான வீடியோ ட்விட்டர் பக்கத்தில் பகிரப்பட்டது. இதற்கு கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸ் தரப்பில் ட்விட்டரில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதில், ‛‛இந்த வீடியோவில் உள்ள ரகு என்பவரின் மீது ஒரு அடிதடி வழக்கும், 2 கொலை மிரட்டல் வழக்கு என 3 வழக்குகள் உள்ளது. இவர் பதிவிட்டுள்ள அனைத்து தகவல்களும் உண்மை இல்லை. இந்த வீடியோவை பதிவிட்ட நபர் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications