காலையிலேயே கோர விபத்து.. கார், ஆம்னி பஸ் மோதல்.. 3 பேர் பலி! ஓட்டு போட சொந்த ஊர் வந்த போது பரிதாபம்
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே ஆம்னி பேருந்து காரும் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் காரில் இருந்த 3 பேர் உயிரிழந்துள்ளனர். பெங்களூரில் இருந்து பொன்னகரம் நோக்கி வந்த காரும், உளுந்தூர்பேட்டையில் இருந்து பெங்களூர் சென்றுகொண்டிருந்த ஆம்னி பஸ்சும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. ஓட்டு போடுவதற்காக வந்த போது இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாக கூறப்படுகிறது.
காலையிலேயே ஏற்பட்ட இந்த விபத்தில் காரில் பயணித்த தர்மபுரி மாவட்டம் சிகரள அள்ளி கிராமத்தை சேர்ந்த வீரமணி, பிரதாப் மற்றும் மாரி ஆகிய 3 பேர் உயிரிழந்தனர். சதீஷ்குமார் என்பவர் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே இன்று காலையில் ஆம்னி பஸ் ஒன்று உளுந்தூர்பேட்டையில் இருந்து பயணிகளுடன் பெங்களூர் சென்று கொண்டிருந்தது. ஓசூர் அருகே சானமாவு பகுதியில் சென்றபோது ஆம்னி பஸ்சும் எதிர்த்திசையில் வந்த கார் ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின. இந்த விபத்தில் காரின் முன் பகுதி பலத்த சேதமடைந்தது. காரில் இருந்தவர்கள் படுகாயமடைந்து அபயக்குரல் எழுப்பினர்.

உடனடியாக அங்கு வந்த போலீசார் கார் இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்தவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதனையில் 3 பேர் உயிரிழந்தது தெரியவந்தது. இது குறித்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், காரில் வந்தவர்கள் தர்மபுரியை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது.

தர்மபுரி மாவட்டம் சிகரள அள்ளி கிராமத்தை சேர்ந்த வீரமணி, பிரதாப் மற்றும் மாரி ஆகிய 3 பேர் உயிரிழந்தனர் என்றும் சதீஷ் குமார் என்பவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. பெங்களூரில் இருந்து சொந்த ஊருக்கு ஓட்டு போடுவதற்காக வந்ததாக கூறப்படுகிறது. பொன்னகரம் நோக்கி வந்துகொண்டிருந்த போது தான் இந்த விபத்து நடந்துள்ளது. விபத்துக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications
