அரசு வேலை கிடைக்கவில்லையே.. விரக்தியில் 2 பிள்ளைகளை கொன்று தாய் தற்கொலை.. கிருஷ்ணகிரி அருகே சோகம்
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே அரசு போட்டித்தேர்வில் வெற்றி பெற முடியவில்லை என்ற கவலையில் பெற்ற 2 குழந்தைகளையும் கொன்று விட்டு பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
அரசு வேலைக்கு செல்ல வேண்டும் என்பது படித்த பட்டதாரிகளுக்கும் பெரும் கனவாக இருக்கும். இதற்காக மத்திய மாநில அரசு தேர்வு ஆணயங்கள் நடத்தும் போட்டித்தேர்வுகளை எழுதி எப்படியாவது வேலைக்கு சென்று விட வேண்டும் என்று ஆண்டுக்கணக்கில் படித்து வருகிறார்கள். என்னதான், கடினமாக படித்தாலும் கடுமையான போட்டி நிலவுவதால் சில ஆயிரம் பேருக்கு மட்டுமே அரசு வேலை என்ற இந்த கனவு கைகூடுகிறது.

இதெல்லாம் ஒருபக்கம் இருக்க கிருஷ்ணகிரி மாவட்டத்தில் போட்டித்தேர்வில் வெற்றி பெற முடியவில்லை என்ற கவலையில் பெற்ற குழந்தைகளையும் கொன்று விட்டு பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. நெஞ்சை உறைய வைக்கும் இந்த சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:
கிருஷ்ணகிரி மாவட்டம் கல்லாவி அருகே கோழி நாயக்கன்பட்டி என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தை சேர்ந்தவர் குணசேகரன் (வயது 40). திருப்பூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் மேனஜராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி தெய்வா ( வயது 30). இந்த தம்பதிக்கு இனியா (வயது 8), கோகுல கிருஷ்ணன் (வயது 4) என்ற பிள்ளைகள் உள்ளனர்.

எம்.எஸ்.சி வரை படித்துள்ள தெய்வா அரசு பணிகளுக்கான போட்டித் தேர்வுகளுக்கு படித்து வந்துள்ளார். பல்வேறு போட்டித்தேர்வுகளை எழுத் வந்த தெய்வா எதிலும் வெற்றி பெறவில்லை. தொடர்ந்து ஏமாற்றமே மிஞ்சியதால் கவலையில் மூழ்கியுள்ளார். தனது மாமனாரிடமும் இது குறித்து கூறி கவலையை வெளிப்படுத்தியதாக சொல்லப்படுகிறது.
இந்த நிலையில், தெய்வா நேற்று விபரீத முடிவை ஒன்றை எடுத்தார். அதாவது, தற்கொலை செய்ய முடிவு செய்த தெய்வா, தான் இறந்து விட்டால் தனது குழந்தைகள் அனாதை ஆகிவிடுவார்கள் என்று கருதி, முதலில் குழந்தைகளை கொலை செய்யும் பகீர் முடிவை எடுத்துள்ளார். தனது திட்டப்படி, வீட்டில் இருந்த தூக்க மாத்திரைகளை தனது 2 பிள்ளைகளுக்கும் கரைத்து கொடுத்துள்ளார். சிறிது நேரத்தில் 2 குழந்தைகளும் உயிரிழந்தன.

பின்னர் தெய்வாவும் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். வீட்டில் நீண்ட நேரமாக சத்தம் எதுவும் கேட்காததால் அக்கம் பக்கத்தினர் போய் பார்த்துள்ளனர். அப்போது தெய்வா மற்றும் அவரது பிள்ளைகள் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து கல்லாவி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. விரைந்து வந்த போலீசார், 3 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தெய்வாவின் தாயார் பூங்கொடி அளித்த புகார் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தெய்வாவிற்கும் அவரது மாமனார் ஆறுமுகத்திற்கும் வாய்த்தகராறு ஏற்பட்டதாகவும் இதனால், மன வேதனை அடைந்து தற்கொலை செய்யும் முடிவை எடுத்ததாகவும் சொல்லப்படுவதால் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். தான் பெற்ற குழந்தைகளையே கொலை செய்து விட்டு தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.












Click it and Unblock the Notifications