கிருஷ்ணகிரி அருகே தலைகுனிந்த அரசு ஊழியர்கள்.. ரூ.2 லட்சம் இபி கனெக்ஷன்? வட்டமிட்டு தூக்கிய ஆபீசர்ஸ்
கிருஷ்ணகிரி: நாளுக்கு நாள் அரசு ஊழியர்கள் லஞ்சம் வாங்கி கைதாகி கொண்டிருக்கிறார்கள்.. பதிவுத்துறை, வருவாய்த்துறையையும் தாண்டி, மின்சாரத்துறையிலும் அதிகாரிகள் கைதாவது கவலையையும், அதிர்ச்சியையும் நாளுக்கு நாள் ஏற்படுத்தி கொண்டிருக்கிறது.
அரசு துறைகளிலேயே, அளவுக்கு அதிகமாக பணம் புழங்கக்கூடிய துறையாக பத்திரப்பதிவு, வருவாய்த்துறை துறை விளங்குகிறது.. எனவேதான் இந்த துறையில் லஞ்ச புகார்கள் குவிந்து கொண்டிருக்கின்றன. அத்துடன் லஞ்சம் வாங்கும் அதிகாரிகளும் கைதாகி வருகிறார்கள்.

மின்துறையிலும் லஞ்சம்
இந்த லஞ்சமானது, மின்துறையிலும் பெருக்கெடுத்து வருகிறது.. சில தினங்களுக்கு முன்பு, திருவண்ணாமலை மாவட்டம் போளூர் பகுதியில் ஒரு அதிகாரி லஞ்சம் வாங்கி கைதாகியிருந்தார்.
அதாவது நாராயணசாமி என்பவரின் மனைவி இறந்துவிட்ட நிலையில், முதலமைச்சர் உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் ஈமச்சடங்கு மற்றும் இயற்கை மரண உதவித்தொகை ரூ.22,500 பெற போளூர் வட்டாட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) அலுவலகத்தில் மனு தாக்கல் செய்தார்.
திருவண்ணாமலை கொழாவூர் விஏஓ
அப்போது, கொழாவூர் விஏஓ ராஜேந்திரன், நாராயணசாமிக்கு போனை போட்டு, ரூ.1,500 லஞ்சம் கொடுத்தால்தான் ஈமச்சடங்கு மற்றும் இயற்கை மரண உதவித்தொகை ரூ.22,500 பெறும் மனுவிற்கு ஒப்புதல் வழங்க ஏற்பாடு செய்வேன் என்றாராம். இதையடுத்து, நாராயணசாமி திருவண்ணாமலை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவில் புகார் தந்ததையடுத்து, கிராம உதவியாளர் ராஜேந்திரனை லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் கைது செய்தனர்.

புது வீட்டுக்கு கரண்ட் கனெக்ஷன்
இதோ இப்போது கிருஷ்ணகிரியில் ஒரு கொடுமை நடந்துள்ளது.. அஞ்செட்டியை சேர்ந்த ராஜேந்திரன் என்பவர், ஓசூர் பேகேப்பள்ளி பிருந்தாவன் கார்டன் பகுதியில் சொந்தமாக வீடு கட்டி வருகிறார்..
இதற்கு மின் இணைப்பு கேட்டு, சிப்காட் மின்வாரிய அலுவலகத்தில் விண்ணப்பித்தார். அதை பரிசீலனை செய்த, மின்வாரிய உதவி பொறியாளர் சிவகுரு, கமர்சியல் இன்ஸ்பெக்டர் பிரபாகரன் இருவரும், புதிய வீட்டிற்கு சென்று பார்த்து விட்டு, புதிய இணைப்பு வழங்க, 35,000 ரூபாய் லஞ்சம் வழங்க வேண்டும் என்று கேட்டுள்ளார்.
2 லட்சம் கேட்ட அதிகாரிகள்
இதனால் 5,000 ரூபாயை ராஜேந்திரன் முதல்கட்டமாக தந்துள்ளார்.. ஆனால், மிச்சமுள்ள பணத்தை வழங்க விரும்பாத அவர், மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார்.
டிஎஸ்பி நாகராஜ் தலைமையிலான லஞ்ச ஒழிப்பு போலீசார், ரசாயனம் தடவிய, 30,000 ரூபாயை, ராஜேந்திரனிடம் கொடுத்து அனுப்பினார்கள்.. அந்த பணத்தை சிப்காட் மின்வாரிய அலுவலகத்திற்கு கொண்டு சென்ற ராஜேந்திரன், அங்கிருந்த உதவி பொறியாளர் சிவகுரு மற்றும் கமர்சியல் இன்ஸ்பெக்டர் பிரபாகரன் ஆகியோரிடம் பணத்தை வழங்கினார்.
அதை வாங்கி கொண்ட அவர்கள், இந்த பணம் போதாது, மொத்தம், 2 லட்சம் ரூபாய் வேண்டும் என்று கேட்டார்களாம்.. இவ்வளவையும் அங்கு மறைந்திருந்து கவனித்து கொண்டிருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், 2 அதிகாரிகளையும் கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர். இந்த சம்பவம் கிருஷ்ணகிரியில் பெரும் பரபரப்பை தந்து கொண்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications